திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்

  • திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ராஜீவ் காந்தி நகரில் மின்சார வயர்கள் பழுதனால் மின்சார மீட்டர்கள் பல இடங்களில் பொசுங்கி போனது. பல வீடுகளில் மின்சாரம் தடைபட்டதால் மக்கள் அவதிப்பட்டனர். இது தொடர்பாக தமிழ் ஊடகங்களில் செய்தி வெளியானது. இதற்கு பதில் அளித்த மின்சார வாரியம், 05.06.2026 அன்று காலை சுமார் 7.45 மணியளவில், செய்யாறு கோட்டம், அப்துல்லாபுரம் பிரிவிற்குட்பட்ட 33/11 கே.வி. துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 11 கே.வி. பல்லாவரம் ஃபீடரில், அணில் காரணமாக ஏற்பட்ட மின்குறுக்கீடு காரணமாக 11 கே.வி. மின் கம்பி அறுந்து தாழ்வழுத்த (LT) மின் பாதையின் மீது விழுந்தது என்று விளக்கம் அளித்துள்ளது.

    Advertisement

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த பொதுமக்கள் பேட்டி அளிக்கையில், செய்யாறு ராஜீவ் காந்தி நகரில் ஏற்கனவே 11 கே.வி. கேபிள் கட்டாகி இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. இந்த சம்பவம் நடந்து ஏழுமாதம் கூட ஆகவில்லை.. அப்போதும் ஒவ்வொரு வீட்டிற்கும் 40 ஆயிரம், 50 ஆயிரம் என செலவு செய்து மின்சார போர்டு உள்பட எல்லா பொருட்களையும் மாற்றினோம். மின் வாரியத்தில் இருந்து மீட்டரை மட்டும் தான் எங்களுக்கு மாற்றிக்கொடுத்திருக்கிறார்கள்.வேறு எந்த ஒரு சலுகையும் எங்களுக்கு பண்ணல.. இப்போது ஏழு மாதம் கழித்து திரும்பவும் நடந்திருக்கிறது. பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. கல்வி கட்டணத்திற்கு பணம் கட்டுவதா, மின்சார சாதனங்களை ரிப்பேர் செய்வதா.... என்று புரியவில்லை.. இது தொடர்கதையாக இருக்கிறது.. இது தொடர்கதையாக இருக்கிறது. இதற்கு நிரந்தரமான தீர்வு வேண்டும்..

    Advertisement

    எங்களுக்கு அந்த 11 கேவி கேபிள் டச்சாகி தான் பிரச்சனையாகிறது. இங்கு 120 குடும்பங்கள் உள்ளன. இதில் 90 குடும்பங்களுக்கு கடந்த முறை மீட்டர் மட்டும் எரிந்தது. அதேபோல் அப்போது வீடுகளில் எந்தெந்த பொருள் பயன்படுத்தி வந்தோமோ, அந்த பொருள் எல்லாம் எரிந்து போனது.. அன்றைய நிலைக்கு யாரும் எதுவும் சொல்லவில்லை. அமைதியாக அவர்களே மாற்றிக்கொண்டார்கள். மக்களே 30 ஆயிரம்,40 ஆயிரம் செலவு செய்து மாற்றிக்கொண்டார்கள்.. நேற்று காலை 11 கேவி கேபிள் தெரு விளக்கு கம்பத்துடன டச் ஆகி, எல்லாரது வீட்டிலும் மீட்டர் வெடித்துள்ளது. அந்த டைமில் பயன்படுத்தி ஹீட்டர், பிரிட்ஜ், ஏசி என எதைஎல்லாம் பயன்படுத்தினார்களோ, அத்தனையும் பழுதாகி உள்ளது" என்று ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

    Advertisement

    இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் அளித்துள்ள விளக்கத்தில் கூறுகையில், "05.06.2026 அன்று காலை சுமார் 7.45 மணியளவில், செய்யாறு கோட்டம், அப்துல்லாபுரம் பிரிவிற்குட்பட்ட 33/11 கே.வி. துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 11 கே.வி. பல்லாவரம் ஃபீடரில், அணில் காரணமாக ஏற்பட்ட மின்குறுக்கீடு (Short Circuit) காரணமாக 11 கே.வி. மின் கம்பி அறுந்து தாழ்வழுத்த (LT) மின் பாதையின் மீது விழுந்தது.

    இதன் விளைவாக, ராஜீவ் காந்தி நகர் SS-2 மூலம் மின்விநியோகம் பெறும் ராஜீவ் காந்தி நகர் பகுதியில் உள்ள சில நுகர்வோரின் மின் மீட்டர்கள் சேதமடைந்தன.

    Advertisement

    தகவல் கிடைத்தவுடன் மின்வாரிய பணியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று பழுதைச் சீரமைத்து, தற்போது மின்விநியோகம் முழுமையாக சீரமைக்கப்பட்டு, தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது." இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Rajiv Gandhi Nagar, Cheyyar (Tiruvannamalai district), electricity meters were scorched in several locations due to faulty power lines. Residents faced hardship as the power supply was disrupted in many homes. The Electricity Board has issued a clarification regarding this incident.