திருவண்ணாமலை ஆனி பெளர்ணமி கிரிவலம்: பக்தர்களுக்கான உகந்த நேரத்தை அறிவித்த கோவில் நிர்வாகம்

  • திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஆனி மாத பெளர்ணமியை முன்னிட்டு, கிரிவலம் செல்ல ஏற்ற நேரத்தை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த பெளர்ணமி நாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், மாவட்ட நிர்வாகமும் தேவையான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது.

    Advertisement

    சிவபெருமானின் திருவுருவமாகவே அண்ணாமலையார் மலையை பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இதனால், மலையைச் சுற்றியுள்ள சுமார் 14 கிலோமீட்டர் நீளமுள்ள கிரிவலப் பாதையில் ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும் ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கிரிவலம் மேற்கொள்வது வழக்கம்.

    Advertisement

    குறிப்பாக கார்த்திகை தீபத் திருவிழாவில் மகா தீபம் ஏற்றப்படும் நாளும், சித்திரை மாத பவுர்ணமியும் மிகவும் சிறப்புமிக்க நாட்களாக கருதப்படுகின்றன. இந்த நாட்களில் 40 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டு கிரிவலம் செல்வது குறிப்பிடத்தக்கது.

    இந்த ஆண்டுக்கான ஆனி மாத பெளர்ணமி ஜூன் 29 (திங்கட்கிழமை) காலை 5.57 மணிக்கு தொடங்கி ஜூன் 30 (செவ்வாய்க்கிழமை) காலை 6.16 மணி வரை நீடிக்கும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதிக்குள் கிரிவலம் மேற்கொள்வது மிகவும் உகந்ததாக பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பெளர்ணமி நாளில் அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் மேற்கொள்ளவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    இதனை முன்னிட்டு குடிநீர், மருத்துவ வசதி, பாதுகாப்பு, போக்குவரத்து ஒழுங்கு, தூய்மை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளில் மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன.

    English Summary

    Arunachaleswarar Temple has announced the auspicious timings for Aani Pournami Girivalam, with thousands of devotees expected to participate in the sacred pilgrimage.