திருவண்ணாமலை அரசு பஸ் ஸ்டாண்டில் யார் பாருங்க.. ரூ.38.57 லட்சமா? மலைத்த மக்கள்! என்ன நடந்தது

  • திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த குடும்பத்துக்கு ரூ.38 லட்சத்து 57 ஆயிரத்து 91 இழப்பீடு தொகையை வழங்க கோர்ட் உத்தரவிட்டிருந்தது.. ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அந்த இழப்பீடு போய் சேரவில்லை.. இதை பார்த்து நீதிமன்றம் சும்மா விடுமா என்ன? இதோ ஜப்தி நடவடிக்கை பாய்ந்துள்ளது.. இதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!

    Advertisement

    பொதுவாக, நீதிமன்றம் உத்தரவிட்டும் இழப்பீடு தொகையை வழங்காமல் காலதாமதம் செய்தால், அந்த உத்தரவை நிறைவேற்ற நீதிமன்றம் சம்பந்தப்பட்ட சொத்துகளை ஜப்தி செய்ய முடியும். அப்படியொரு நடவடிக்கைதான் திருவண்ணாமலையில் நடந்துள்ளது.

    Advertisement

    திருவண்ணாமலை மாவட்டம்

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் சாத்தனூர் அணை சாலை பகுதியைச் சேர்ந்தவர் அருள். இவருக்கு 39 வயது. இவரது மனைவி புஷ்பா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி அருள் பைக்கில் திருவண்ணாமலை - போளூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் மண்டலத்தைச் சேர்ந்த அரசு பஸ், அவர் மீது மோதியது. இந்த விபத்தில் அருள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனால் அவரது குடும்பம் நிர்க்கதியில் நின்றது.

    Advertisement

    கணவரை இழந்த புஷ்பா, குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த அப்போதைய முதன்மை மாவட்ட நீதிபதி, அருளின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.38 லட்சத்து 57 ஆயிரத்து 91 வழங்க வேண்டும் என்று 2024-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிட்டார்.

    இழப்பீட்டு தொகை

    இந்த ரூ.38 லட்சத்து 57 ஆயிரத்து 91 தொகை வட்டியுடன் சேர்த்துக் கணக்கிடப்பட்ட இழப்பீடு தொகையாகும். ஆனால், கோர்ட் உத்தரவிட்ட பிறகும் பல மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் இழப்பீட்டு தொகையை வழங்காமல் காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

    Advertisement

    இதனால் புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர், நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்ட இழப்பீட்டு தொகையை பெற்றுத் தர வேண்டும் என்று கோரி மாவட்ட நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர். அதாவது, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை திருவண்ணாமலை முதன்மை மாவட்ட நீதிபதி எம். சுமதி சாய் பிரியா விசாரித்தார். அப்போது, இழப்பீட்டு தொகை வழங்கப்படாத நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

    பாய்ந்த ஜப்தி நடவடிக்கை

    இதையடுத்து நேற்று திருவண்ணாமலை புதிய பஸ் ஸ்டாண்டுக்கு நீதிமன்ற ஊழியர்களும் வழக்கறிஞர்களும் சென்றனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த விழுப்புரம் மண்டல போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான அரசு பேருந்தை நீதிமன்ற உத்தரவின்பேரில் ஜப்தி செய்தனர்... ஜப்தி செய்யப்பட்ட அரசு பஸ், திருவண்ணாமலை நீதிமன்ற வளாகத்துக்கு பிறகு கொண்டு வரப்பட்டது.

    Advertisement

    பொதுமக்கள் வந்து செல்லும் புதிய பேருந்து நிலையத்திலேயே அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ஒருபுறம் கணவரை இழந்த குடும்பம், நீதிமன்றம் உத்தரவிட்ட இழப்பீட்டு தொகைக்காக காத்திருந்த நிலையில், மறுபுறம் அந்த உத்தரவு நிறைவேற்றப்படாததால் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான பேருந்தே ஜப்தி செய்யப்பட்டிருக்கிறது... இப்போது இந்த நடவடிக்கைக்குப் பிறகு, அருளின் குடும்பத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட இழப்பீட்டு தொகை கிடைக்குமா என்பதே கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது....!!!