வாணியம்பாடி எம்எல்ஏ பகீர்.. யார் அந்த 2 பேர்? ஏற்கனவே முஸ்தபா பரபர.. திமுகவுக்கு வந்த புதிய சிக்கல்?

  • திருவண்ணாமலை: வாணியம்பாடி எம்எல்ஏ பகீர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.. ஏற்கனவே தவெக எம்எல்ஏ முஸ்தபாவின் சில கருத்துகள் திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இப்போது வாணியம்பாடி எம்எல்ஏ கூறியிருக்கும் குற்றச்சாட்டும் பகீரை கிளம்பி உள்ளது.. இந்த இரண்டு சம்பவங்களையும் தனித்தனியாகப் பார்த்துவிட முடியுமா என்பதுதான் இப்போது எழும் கேள்வி.

    Advertisement

    வாணியம்பாடி தொகுதி எம்எல்ஏ சையத் பாருக் பாஷா பேசும்போது, "நம்முடைய கட்சியில் ஐடிவிங் வலுப்படுத்துவது முக்கியம். ஐடிவிங்கின் முக்கியத்துவம் அதிகமாகி இருக்கிறது. தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளரை போடவேண்டும். பல கட்சிகளில் அந்த அடிப்படையில் தான் செயல்படுகின்றனர்.

    Advertisement

    வாணியம்பாடி எம்எல்ஏ சையத் பாருக் பாஷா

    யாரிடமும் இணைந்து ஏமாந்தது போதும். இனி யாரிடமும் ஏமாற தயாராக இல்லை. சட்டமன்றத்தில் சோபா மாடல் அரசு என்று விமர்சனம் செய்து வருகிறார்கள்.. என்னையும், ஷாஜகானையும் சந்தித்து கோடி, கோடியாக பணத்தை எடுத்து வந்து எங்களுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதாக சொன்னார்கள்..

    நாங்கள் கோடிக்கு சாய்ந்தவர்கள் அல்ல, கொள்கைக்கு சாய்ந்தவர்கள். எங்களுடைய இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொள்கையோடு தான் இருப்போம் என்று சொல்லி அவர்களை விரட்டி விட்டோம்.

    தவெகவுக்கு ஆதரவு அளித்ததால், கூட்டணி அமைந்த பிறகு ஷாஜகானுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது, எனக்கும் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று எங்களது கட்சித் தலைவர் கேட்டார்.. அதனால் எனக்கு அமைச்சருக்கு இணையான ஒரு பதவி வழங்கப்பட உள்ளது.

    Advertisement

    கோடி கோடியாக பணம்

    கடைகோடியில் இருக்கக்கூடிய நிர்வாகிகளையும் நாங்கள் எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும்தான் பார்ப்போம்.. உங்களால் தான் நான் எம்எல்ஏவாகி இருக்கிறேன்.. மதத்தால் இஸ்லாமியராக இருந்தாலும் மொழியால் தமிழனாகவும் இனத்தால் இந்தியனாகவும் இருக்கிறோம்.

    அதிமுகவை ஆட்சியில் உட்கார வைப்பதற்காக திமுக முயற்சி செய்து எங்களை ஆதரிக்க சொன்னதால் எங்களுக்கு அந்த கொள்கை ஏற்றுக்கொள்ளாமல் அந்த தருணத்திற்காக தான் நாங்கள் திமுக கூட்டணியிலிருந்து ருந்து வெளியேறினோம்.

    நாங்கள் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை... தவெக தானாக முன்வந்து கொள்கைக்காக எங்களை ஆதரித்துள்ளது.. அதனால் ஆட்சியில் பங்கு தருகிறோம் என தானாக முன்வந்து அமைச்சர் பதவியை வழங்கினார்கள்..

    Advertisement

    யார் அந்த 2 பேர்?

    நம்முடைய கட்சி நிர்வாகிகளுக்கு ஏதாவது கோரிக்கை இருந்தால் மனுவாக எழுதி எடுத்து வாருங்கள். அமைச்சர்களிடம் பேசி செய்து தருகிறோம். வரும் உள்ளாட்சி தேர்தலில் நாம் அதிக இடங்களில் வெற்றி பெறவேண்டும். கான்பிடன்டாக இருங்கள் என்று முதல்வர் சொல்லியிருக்கிறார். நாமும் கான்பிடன்டாக இருக்க வேண்டும்" என்றெல்லாம் பேசியிருக்கிறார்.

    கோடி கோடி பணம் மற்றும் அமைச்சர் பதவி வழங்க முன்வந்ததாக பாருக் பாஷா பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும், இந்த வாய்ப்பை வழங்க முன்வந்ததாக கூறப்படும் அந்த 2 பேர் யார், அவர்கள் எந்தக் கட்சியை சேர்ந்தவர்கள் என்பது குறித்து பாருக் பாஷா தனது பேச்சில் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இதனால் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களும், சந்தேகங்களும், கேள்விகளும் வலம் வந்தபடி உள்ளன...!!

    Advertisement

    முஸ்தபா சர்ச்சை

    சையத் பாருக் பாஷா பேச்சுதான் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது. ஏற்கனவே தவெக எம்எல்ஏ முஸ்தபாவின் பேச்சும் வேறு ஒரு தளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே தாங்கள் அரசியலுக்கு வந்ததாக முஸ்தபா கூறிய கருத்துக்கு பாஜக உள்ளிட்ட தரப்புகளில் கடும் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக, அவரது பேச்சை திமுகவின் முந்தைய சனாதன எதிர்ப்பு அரசியலுடன் ஒப்பிட்டு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

    திமுகவை எதிர்த்து உருவான தவெக, ஆட்சிக்கு வந்த பிறகு எந்த மாதிரியான கூட்டணி அரசியலை நடத்தப் போகிறது? கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்ற கருத்து வெறும் தேர்தல் வாக்குறுதியாக இருக்குமா, அல்லது அதிகாரப் பகிர்வாக மாறுமா? அதே நேரத்தில், கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி கொள்கை இருப்பதால், கருத்து மோதல்கள் எப்படி சமாளிக்கப்படும்?

    Advertisement

    திமுகவுக்கு சிக்கல்?

    திமுகவுக்கும் இங்கு சிக்கல் இல்லாமல் இல்லை. கூட்டணியில் இருந்து விலகிய ஒரு கட்சி, தங்களுக்கு அரசியல் பேரம் பேசப்பட்டதாக சொல்வது எதிர்க்கட்சிகளுக்கு புதிய ஆயுதமாக மாறலாம். ஆனால் அந்த குற்றச்சாட்டை நிரூபிக்கும் ஆதாரங்கள் அல்லது சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்கள் இதுவரை வெளிப்படையாக கூறப்படவில்லை என்பதையும் மறக்க முடியாது.

    அதனால் பாருக் பாஷாவின் பேச்சை வெறும் "கோடி கோடி பணம்" என்ற பரபரப்பு செய்தியாக மட்டும் பார்க்க வேண்டியதில்லை. அதற்குள் கூட்டணி அரசியலின் விலை என்ன, கொள்கைக்கு எவ்வளவு இடம், ஆட்சியில் பங்கு யாருக்கு, அதிகாரத்தை பகிர்வது எப்படி என்ற பெரிய கேள்விகள் இருக்கின்றன.

    2 அதிர்வலைகள்

    முஸ்தபா பேச்சு ஏற்படுத்திய சர்ச்சையும், பாருக் பாஷா முன்வைத்த குற்றச்சாட்டும் ஒரே சம்பவம் அல்ல. ஆனால் இரண்டுமே தமிழக அரசியலில் உருவாகி வரும் ஒரு முக்கிய மாற்றத்தை காட்டுகின்றன. அதாவது, இனி தேர்தலில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதோடு மட்டும் அரசியல் முடிந்துவிடாது.. வெற்றி பெற்ற பிறகு கூட்டணியை எப்படி நிர்வகிக்கிறார்கள் என்பதுதான் அடுத்த பெரிய அரசியல் சோதனை.

    அந்த சோதனையில் திமுக தனது கூட்டணியை எப்படிக் கையாளப் போகிறது? தவெக தனது கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு அரசியல் இடம் கொடுக்கப் போகிறது? அதைவிட முக்கியமாக, அதிகாரத்துக்கும் கொள்கைக்கும் இடையிலான சமநிலையை எந்தக் கட்சி முதலில் இழக்கிறது? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள்தான் அடுத்தகட்ட தமிழக அரசியலை தீர்மானிக்கக்கூடும்.. பொறுத்திருந்து பார்ப்போம்.

    English Summary

    Vaniyambadi MLA Shocking Claim.. Crores of Cash and Minister Post Offered.. Who Were Those 2 People?