காலை வாரிய காவிரி நீர்! சம்பா-தாளடி சாகுபடி பணிகளை தொடங்க தயங்கும் விவசாயிகள்!

  • திருவாரூர்: மேட்டூர் அணையில் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதால், சம்பா பருவ நெல் சாகுபடியை முழுமையாக செய்ய முடியுமா என்று டெல்டா விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

    Advertisement

    ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு காவிரி நீர் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி தான் அணை திறக்கப்பட்டது.

    Advertisement

    இலக்கு நிர்ணயித்த வேளாண்துறை

    இதனால் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இருப்பினும், காவிரி நீரை வைத்து சம்பா பருவ நெல் சாகுபடியை செய்யலாம் என்று விவசாயிகள் திட்டமிட்டு இருந்தனர். அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் 3.12 லட்சம் ஏக்கரிலும், திருவாரூர் மாவட்டத்தில் 3.50 லட்சம் ஏக்கரிலும், நாகை மாவட்டத்தில் 1.55 லட்சம் ஏக்கரிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 1.60 லட்சம் ஏக்கரிலும் சம்பா-தாளடி சாகுபடி மேற்கொள்ள வேளாண்துறை இலக்கு நிர்ணயித்திருந்தது.

    கடைமடைக்கு வராத காவிரி நீர்

    பிரச்சனை என்னவெனில், மேட்டூர் அணையிலிருந்து காவிரி நீர் திறக்கப்பட்டு.. 45 நாட்கள் கடந்த பின்னரும் டெல்டா மாவட்டங்களில் பல்வேறு வாய்க்கால்களுக்கு அந்த நீர் சென்றடையவில்லை என்பதுதான். அப்படியே தண்ணீர் சென்றாலும் கூட, அது சில நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக கடைமடை பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் வரவே இல்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

    Advertisement

    விவசாயிகள் ஏமாற்றம்

    இதனால் சாகுபடி பருவம் தொடங்கி 2 1/2 மாதங்கள் கடந்த பின்னரும், திட்டமிட்டபடி டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பணிகள் தொடங்கப்படவில்லை. பெரும்பாலும் மழை நீரை நம்பி தான் விவசாயிகள் நேரடி விதைப்பை செய்திருக்கிறார்கள். ஆனால், இப்போது நிலவுவது 'சூப்பர் எல்-நினோ' என்பதால், மழையும் கூட சீரான இடைவெளியில் பெய்யும் என்று சொல்ல முடியாது. பருவமழை ஒட்டுமொத்தமாக.. ஒன்று, இரண்டு நாட்களிலேயே பெய்து நின்று விட வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

    மேட்டூர் நீர் கைகொடுக்குமா?

    இப்படி நிச்சயம் இல்லாத சூழ்நிலையில், சாகுபடி பணிகளை எப்படி தொடங்குவது? என்று விவசாயிகள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அக்.16 மாலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 57.02 அடியாக இருந்தது. நீர் இருப்பு 22.52 டிஎம்சியாகவும் இருக்கிறது. இதில் 15 டிஎம்சி வரைதான் பாசனத்திற்கு திறப்பார்கள். ஒருநாளைக்கு ஒரு டிஎம்சி என்று வைத்துக்கொண்டாலும் 15 நாட்கள் வரைதான் நீர் திறக்கப்படும். ஆனால் சம்பா-தாளடி சாகுபடிக்கு 75 டிஎம்சி தண்ணீர் தேவை. எனவேததான் சாகுபடி பணிகளை தொடங்க விவசாயிகள் யோசிக்கின்றனர்.

    Advertisement

    குறிப்பிட்ட நேரத்திற்கு மேட்டூர் அணை திறக்கப்படாதது, போதுமான அளவுக்கு பருவ மழை இல்லாதது.. இதெல்லாம் சேர்ந்து அடுத்த ஆண்டில் அரிசி பற்றாக்குறையை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். நெல் உற்பத்தி ஏறக்குறைய 8 முதல் 10 லட்சம் டன் வரை குறைய கூடும் என்றும் கூறுகின்றனர்.

    English Summary

    Cauvery water: With the water level in the Mettur Dam dropping rapidly, farmers in the Delta region are concerned about whether they will be able to fully carry out paddy cultivation for the Samba season.