வந்தாலும் பிரச்சனை.. வரலைனாலும் பிரச்சனை! விவசாயிகளை சோதித்த மழை! கண்ணீர் வடிக்கும் திருவாரூர்

  • திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால், நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் தண்ணீர் தேங்கி, விதைகள் முளைக்காமல் அழுகத் தொடங்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதனால் கூடுதல் செலவினங்களுடன் பொருளாதார இழப்பையும் சந்திக்க வேண்டியுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

    Advertisement

    மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி குருவை சாகுபடிக்காக தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால், குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்படவில்லை.

    Advertisement

    இதனால் திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, சம்பா சாகுபடியையாவது மேற்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் காத்திருந்தனர்.

    தொடர்ந்து, செப்டம்பர் 1-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி, கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். டிராக்டர்கள் மூலம் வயல்களை உழுது, நேரடி நெல் விதைப்புப் பணிகளை மேற்கொண்டனர்.

    ஏற்கெனவே பாசன நீர் கிடைக்காமல் பல பகுதிகளில் பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், மழையை நம்பி சம்பா சாகுபடியை மேற்கொள்ள விவசாயிகள் தயாராகினர். இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த 5 நாட்களாக பெய்த கனமழையால் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக, கோட்டூர் அருகே உள்ள காரியமங்கலம், விக்கிரபாண்டியம், புழுதிக்குடி, குலமாணிக்கம் உள்ளிட்ட கடைமடைப் பகுதிகளில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட வயல்களை மழைநீர் சூழ்ந்துள்ளது.

    Advertisement

    இதனால் விதைக்கப்பட்ட நெல் விதைகள் முளைக்காமல் அழுகத் தொடங்கியுள்ளன. சில இடங்களில் விதைகள் முளைக்காததால் மீண்டும் விதைப்பு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் கூடுதல் செலவினங்களுடன் பொருளாதார இழப்பையும் சந்திக்க வேண்டியுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே குருவை சாகுபடியை மேற்கொள்ள முடியாமல் தவித்த நிலையில், ஒருபோக சம்பா சாகுபடியையாவது செய்து வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கலாம் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் இருந்தனர்.

    ஆனால், தொடர்ந்து பெய்த கனமழையால் விதைக்கப்பட்ட நெல் விதைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். எனவே வேளாண்மைத் துறை அதிகாரிகள் மழையால் பாதிக்கப்பட்ட வயல்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களைக் கணக்கெடுத்து, உரிய இடுபொருள் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

    English Summary

    Continuous heavy rain in Tiruvarur leaves paddy seeds rotting in waterlogged fields, causing crop losses and forcing farmers to demand relief.