திருவாரூர்: துணை வேந்தர்கள் நியமனத்தில் கடந்த காலங்களைப் போல ஆளுநரோடு கடுமையான மோதல் போக்கை தொடர்வதற்கு நாங்கள் விரும்பவில்லை எனவும், சட்டமன்ற கூட்டத்தொடர் கூடுவதற்கு முன்னரோ அல்லது கூட்டத்தொடர் முடிந்த பின்னரோ துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவார்கள் என்கிற செய்தியை முதலமைச்சர் அறிவிப்பார் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் விசுவநாதன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்," காவிரியில் நீர் திறக்கவில்லை என்றால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்பது உண்மைதான். கர்நாடக அரசை பலமுறை தமிழக அரசு எச்சரித்ததும் கூட காவிரி நதிநீர் பங்கீட்டைத் தர மறுக்கிற கர்நாடக அரசை கடுமையாக எதிர்க்கிறோம்.
காவிரி நீர் பிரச்சனை சம்பந்தமாக அனைத்து கட்சி கூட்டம் கூட்டுவது தொடர்பாக தமிழக முதல்வர் நல்ல முடிவை எடுப்பார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டும் நேரம் வருமேயானால் அதற்கான முடிவினையும் தமிழக முதல்வர் நிச்சயம் எடுப்பார். ராகுல் காந்தி குறித்து தயாநிதி மாறனின் கருத்து முற்றிலும் தவறானது. தமிழக அமைச்சரவை இடம்பெற்றுள்ள இரண்டு காங்கிரஸ் அமைச்சர்கள் தொடர்ந்து மேகதாட்டில் கர்நாடக அரசு அணை கட்டுமேயானால் அதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் என்பது காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. இது கர்நாடகத்திற்கும் தமிழகத்திற்கும் நடக்கிற பிரச்சனை. மத்திய அரசு தமிழகத்திற்கு ஓரவஞ்சனை செய்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு கர்நாடக அரசுக்கு ஒரு நீதியையும் தமிழக அரசுக்கு ஒரு பாதகத்தையும் உருவாக்கி இருக்கிற நிலைப்பாடு. தேவையில்லாத ஒரு பிரச்சனையை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் எழுப்புகிறார். மேகதாட்டில் அணைகட்ட ஒரு செங்கல்லைக் கூட வைப்பதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்பதுதான் காங்கிரஸின் நிலைப்பாடு. கர்நாடக முதல்வர் காங்கிரஸ் கட்சியின் தலைமை சொன்னால் கூட கேட்க மாட்டார் திமுக தலைவர் ஸ்டாலின் சொன்னால் கேட்பார் என அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார். சட்ட அமைச்சர் நிர்மல் குமார் சொன்னால் சரியாக இருக்கும் என்பது எனது கருத்து. அதில் எந்த தப்பும் இல்லை. துணைவேந்தர்கள் நியமனம் எப்போது நிரப்பப்படும் எம கேள்வி தொடர்ந்து எழுப்பப்படுகிறது. கடந்த காலத்தில் ஏற்பட்ட நிர்வாக குளறுபடிகள் அதை சீர் செய்வதற்கு கடந்த காலங்களைப் போல ஆளுநரோடு கடுமையான மோதல் போக்கை தொடர்வதற்கு நாங்கள் விரும்பவில்லை. அதே நேரத்தில் இந்த பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. இதை தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கையை முதலமைச்சர் விஜய் எடுத்து வருகிறார். சட்டமன்ற கூட்டத்தொடர் கூட்டுவதற்கு முன்பாகவோ அல்லது அதன் பின்னரோ பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவார்கள் என்கிற செய்தியை தெரிவித்துக் கொள்கிறோம்.ஆனால் இதே நிலை நீடித்தால், 2027 ஜனவரி மாதம் வந்துவிட்டால் தமிழகத்தில் இருக்கக்கூடிய ஒட்டுமொத்த பல்கலைக் கழகங்களுக்கும் துணைவேந்தர்கள் இல்லாத நிலை ஏற்படும்" என்றார்.அமைச்சர் விஸ்வநாதன்
காவிரி நீர் பிரச்சனை
ஸ்டாலின்
முதலமைச்சர் விஜய்
துணைவேந்தர்கள்