திருப்பூரில் விஜய் நடித்த ஜனநாயகன் படம் பார்க்க ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்த பிரபல நிறுவனம்

  • திருப்பூர்: எச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரையரங்குகளில் நாளை வெளியாக உள்ளது. பல விஜய் ரசிர்கள், தவெக நிர்வாகிகள், தங்கள் தலைவரின் கடைசி படத்தை திரையில் பார்க்க மிகுந்த ஆர்வமாக உள்ளனர். குறிப்பாக முதல் நாளே பார்க்க ஆர்வமாக உள்ளார்கள். இதையொட்டி, திருப்பூர் மாநகரில் 3 கிளைகளுடன் செயல்பட்டு வரும் டி கே உணவு நிறுவனம் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தை காண அரை நாள் விடுப்பு அறிவித்துள்ளது.

    Advertisement

    நடிகரும், தமிழ்நாட்டின் முதல்வருமான விஜய் நடித்திருந்த கடைசி திரைப்படமான ஜனநாயகன் கடந்த பொங்கல் அன்று வெளியாக வேண்டியது. ஆனால் சென்சார் சான்றிதழ் உள்பட பல்வேறு தடைகள் காரணமாக படம் வெளியாகாமல் தள்ளிப்போனது. தேர்தல் மற்றும் மறு சான்றிதழ் வாங்குவது போன்ற காரணங்களால் 6 மாதங்களை கடந்த நிலையில், நாளை (ஜூலை 23) ஜனநாயகன் திரைப்படம் வெளியாகிறது. கேவின் ப்ரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    Advertisement

    7 மாதங்களாக விஜய் ரசிகர்கள் இந்த படத்தை காண காத்திருந்தார்கள், விஜய்யின் கடைசி படம் என்பதால் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் அவருக்கு கொண்டாட்டத்துடன் விடை கொடுக்க தயாராகி வருகிறது. எம்ஜிஆர், என்டிஆர் வரிசையில் விஜய் முதல்வராகி உள்ளார். அவரது படம் வெளியாவதால் பெரும் எதிர்பார்ப்பு தமிழகத்தில் இருக்கிறது. அதேபோல் இளைய தளபதி விஜய், தளபதி விஜய் ஆகிய டைட்டில் கார்டுகளை கடந்து மாண்புமிகு முதல்வர் விஜய் என்ற டைட்டில் கார்டுன் படம் வெளியாவதை காண அவரது ரசிகர்களும், தவெக நிர்வாகிகளும் ஆர்வமாக உள்ளனர்.

    Advertisement

    தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான பகவந்த கேசரி படத்தின் ரீமேக் தான் ஜனநாயகன் என்றாலும், இதில் தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கிளைமேக்ஸ் காட்சியும் மாற்றப்பட்டுள்ளது. படம் ஏற்கனவே சமூக வலைதளங்களில் லீக் ஆகி இருந்தது. எனவே படத்தில் பல்வேறு காட்சிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாவும், கிளைமேக்ஸ் காட்சியும் மாற்றப்பட்டுள்ளதாகவும் சினிமா தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. படத்திற்கு எப்டிஎஸ் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பல விஜய் ரசிகர்கள் நாளை படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளார்கள்.

    இந்த சூழலில் திருப்பூர் மாநகரில் 3 கிளைகளுடன் செயல்பட்டு வரும் டி கே உணவு நிறுவனம் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தை காண அரை நாள் விடுப்பு அறிவித்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,"அதிகாரப்பூர்வ அரை நாள் விடுமுறை அறிவிப்பு - ஜனநாயகன். சில நட்சத்திரங்கள் நம்மை மகிழ்விக்கின்றன. சில ஜாம்பவான்கள் ஒரு தலைமுறையையே வடிவமைக்கிறார்கள்.

    Advertisement

    நமது மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களின் இறுதித் திரைப்படமான 'ஜனநாயகன்', ஒரு மறக்க முடியாத சினிமா பயணத்தின் முடிவைக் குறிப்பதால், 'ஃபுட்ஸ் பை டீகே சென்ட்ரல் ஹாஸ்பிடாலிட்டி சர்வீசஸ்' குடும்பத்தினர் அனைவரும் இணைந்து முதல் நாள் மாலைக் காட்சியைக் காணவிருக்கின்றனர். இந்தச் சிறப்பு நிகழ்வைக் கொண்டாடும் விதமாக, 'ஃபுட்ஸ் பை டீகே சென்ட்ரல் ஹாஸ்பிடாலிட்டி சர்வீசஸ்' நிறுவனம் 23 ஜூலை 2026 அன்று அரை நாள் விடுமுறை அளிக்கும். இறுதி 183 நிமிடங்கள். வாழ்நாள் முழுவதும் நினைவுகள். நமது குழந்தைப்பருவத்திற்கும், கனவுகளுக்கும், வாழ்வின் நோக்கத்திற்கும் உத்வேகம் அளித்த ஒரு பயணத்தைக் கொண்டாடுவோம்" இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

    English Summary

    TK Food Company, which operates three branches in Tiruppur city, has announced a half-day leave for employees to watch the movie Jana nayagan (ஜனநாயகன் விஜய்) , starring Tamil Nadu Chief inister Vijay.