திருப்பூர் அருகே ரேஷன் கடையில் தில்லுமுல்லு செய்த பெண்.. வீடியோ எடுத்த சக பெண் ஊழியர்களுக்கு தர்ம அடி

  • திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே ரேஷன் பொருட்கள் முறைகேடு தொடர்பாக வீடியோ எடுத்ததாகக் கூறி, பெண் ஊழியர் மீது மற்றொரு பெண் ஊழியர் தாக்குதல் நடத்திய காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

    Advertisement

    திருப்பூர் மாவட்டம், தாராபுரம் மற்றும் மூலனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் அரிசி உள்ளிட்ட பொருட்கள் முறையாக வழங்கப்படாமல் வெளிச்சந்தைக்குக் கடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனை வேலுமணி (49) என்ற பெண் ஊழியர் செல்போனில் படம் பிடித்ததாகத் தெரிகிறது.

    Advertisement

    இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் சாலையில் உள்ள கூட்டுறவு சங்கக் கட்டிடத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் கூட்டுறவு சங்கப் பணியாளர்களின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வேலுமணி வீடியோ எடுத்ததாகக் கூறி மற்றொரு பெண் ஊழியரான சுலோச்சனா (34) என்பவர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    திடீரென வேலுமணியின் செல்போனைத் தட்டிவிட்டு, அவர் மீது சுலோச்சனா தாக்குதல் நடத்தியுள்ளார். மேலும், இது தொடர்பாக வீடியோ எடுத்த மற்ற பெண் ஊழியர்களின் செல்போன்களும் பறிக்கப்பட்டு, அதிலிருந்த வீடியோக்கள் அனைத்தும் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, சுலோச்சனா வேலுமணியைக் கடுமையாகத் தாக்கி, அவரது ஆடைகளைக் கிழித்து அத்துமீறியதாகக் கூறப்படுகிறது.

    Advertisement

    இத்தாக்குதலில் காயமடைந்த வேலுமணி, தாராபுரம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாகத் தாராபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்தச் சூழலில், வேலுமணியைச் சக பெண் ஊழியர் சுலோச்சனா தாக்கும் வீடியோ காட்சிகளில் ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரேஷன் கடைகளில் பொருட்கள் கடத்தப்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், அது தொடர்பாக வீடியோ எடுத்த பெண் ஊழியரையே மற்றொரு பெண் ஊழியர் தாக்கிய சம்பவம், ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

    English Summary

    A ration shop worker in Tiruppur was assaulted by a colleague for filming food grain smuggling