திருப்பூர்: இடைத்தேர்தல் நடைபெற்ற தாராபுரம் தொகுதியில் தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 9.30 மணி நிலவரப்படி அதிமுக வேட்பாளர் முன்னிலையில் இருக்கிறார். இது ஆளும் தவெகவுக்கு பயங்கர அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்தடுத்து இன்னும் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வர இருக்கும் நிலையில் இந்த பின்னடைவு முதலமைச்சர் விஜய்யை அப்செட் ஆக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.
இடைத்தேர்தலுக்கு என ஒரு குறிப்பிட்ட பேட்டன் இருக்கிறது. முதலமைச்சராக இருப்பவர் வழக்கமாக இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு போக மாட்டார். அதேபோல ஆளும் கட்சிதான் கண்டிப்பாக இடைத்தேர்தலில் ஜெயிக்கும். இந்த இரண்டு வழக்கமான விஷயத்தையும் தாராபுரம் தொகுதி மக்கள் அடித்து நொறுக்கியிருக்கிறார்கள்.
முதல் விஷயம் விஜய்யை களத்திற்கு வர வைத்தது. 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவையும், அதிமுகவையும் பின்னுக்கு தள்ளி தவெக பெரிய வெற்றியை பெற்றிருந்தது. இந்த கணக்கில்தான் இடைத்தேர்தலை தவெக எதிர்கொண்டது. மக்கள் ஆதரவு அதிகமாக நமக்கு இருக்கிறது. கொங்கு பகுதியிலிருந்து செங்கோட்டையன் போன்ற முக்கிய தலைவர்களும் நம் பக்கம் இருப்பதால், என்ன ஆனாலும் பார்த்துக்கொள்ளலாம்.. வெற்றி நமக்குதான் என்கிற எண்ணத்தில் அதிமுக எம்எல்ஏவாக இருந்த சத்தியபாமாவின் ராஜினாவை ஏற்றுக்கொண்டு இடைத்தேர்தலுக்கு அடி போட்டது தவெக. கொளத்தூரில் 5 நிமிடம் பேசியதற்கே கொத்து பரோட்டா போட்டார் விஜய்.. அப்பேர்ப்பட்டவருக்கு தாராபுரம் எல்லாம் சில்லி மேட்டர் என்று, தவெக தலைமை முதலமைச்சர் விஜய்யை களத்தில் இறக்கியது. ஒரு முறை கிடையாது.. இரண்டு முறை தாராபுரத்துக்கு வந்தார் விஜய். பிரச்சாரத்தில் என்னவோ மக்கள் வரவேற்பு ஆஹா, ஓஹோ என்றுதான் இருந்தது. ஆனால், வாக்கு எண்ணிக்கையில் அப்படி இல்லை. இன்று காலை தபால் வாக்கு எண்ணப்பட்டபோது தவெக முதலில் இருந்தது. அதற்கு அடுத்து கொஞ்சம் இடைவெளியில் அதிமுக இருந்தது. பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. அதிலும் காலை 9.30 வரை தவெதான் முன்னாடி இருந்தது. ஆனால் 9.30 பிறகு களம் மாறியிருக்கிறது. அதிமுக வேட்பாளர் பானுமதி சுமார் 600 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். 2,23,306 வாக்காளர்கள் கொண்ட இந்த தொகுதியில் சுமார் 80.25% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. 23 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும் நிலையில், அடுத்தடுத்த சுற்றுகளில் நிலைமை மாறலாம். இருப்பினும்.. இந்த பின்னடைவு விஜய்யை அப்செட் ஆக்கியிருக்கிது. இனி பெருந்துறை, கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த 5 தொகுதிகளில் திருச்சி கிழக்கு மட்டுமே விஜய்க்கு சாதகமான தொகுதி. மற்ற தொகுதிகளில் 2026 சட்டமன்ற தேர்தல்களில் அதிமுகதான் வெற்றிக்கொடியை நாட்டியிருக்கிறது. அப்படியெனில் இந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? தாராபுரம் மாதிரி இழுத்தடிக்குமா? என்று தவெக தலைமை அச்சமடைந்திருக்கிறது. கூட்டணி கட்சிகளின் உதவி இல்லாமல் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதுதான் தவெகவின் பிளான். ஆனால் தாராபுரம் தொகுதி முடிவுகள் அச்சுறுத்துவதால்.. 5 ஆண்டுகளுக்கும் கூட்டணி தயவுடன்தான் ஆட்சியை நடத்த வேண்டி வருமோ? என்று தவெக யோசிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.