பூங்குயில் யாரது.. அடி நீ தானா அந்த குயில்.. ஸ்கூட்டியால் ஒரு நிமிசம் தலையே சுத்திடுச்சு.. வீடியோ

  • திருப்பூர்: இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு மீண்டும் ஓட்டுநர் தேர்வு (Re-test) வைக்க வேண்டும் போலத் தோன்றுகிறது. போக்குவரத்து விதிகளை மீறுவோரின் உரிமத்தை (License) உடனடியாக ரத்து செய்வதோடு, அவர்களை மீண்டும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு வரவழைத்துத் தேர்வுகள் எழுத வைக்க வேண்டும். அதில் தேர்ச்சியடைந்தால் மட்டுமே மீண்டும் உரிமம் வழங்கப்பட வேண்டும். ஏனெனில், இந்தியாவில் சாலை விதிமீறல்கள் அந்த அளவிற்கு மிக மோசமாக அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

    Advertisement

    விதிமுறைகளை மீறிச் செல்லும் வாகன ஓட்டிகளுக்குக் கொஞ்சம் கூட உறுத்தலோ அல்லது கவலையோ இல்லை என்பதே கசப்பான உண்மை. சமீபத்தில் அப்படி ஒரு பெண், கண் இமைக்கும் நேரத்தில் காரில் அடிபடாமல் நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    இன்றைக்குப் பலரும் போக்குவரத்து விதிகளைச் சிறிதும் மதிப்பதே இல்லை. ஒருவழிப்பாதையில் (One-way) பயணிப்பது, சிக்னலை மீறிச் செல்வது, பின்னால் வரும் வாகனங்களைப் பற்றி யோசிக்காமல் திடீரென பிரேக் பிடிப்பது, பின்னால் வரும் வாகனங்களைக் கவனிக்காமல் வளைவுகளில் உடனே திரும்புவது, வாகனங்களைத் திடீரெனச் சாலைகளில் நிறுத்துவது, அப்படி நிறுத்தும் போது 'டேஞ்சர் லைட்' (Hazard lights) எரியவிடாமல் வைப்பது, சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுவது, தலைக்கவசம் (Helmet) அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவது, ஒரே இருசக்கர வாகனத்தில் 4 பேர் வரை சர்வ சாதாரணமாகச் செல்வது, காரில் அளவுக்கு அதிகமான நபர்களை ஏற்றிச் செல்வது மற்றும் அசுர வேகத்தில் செல்வது எனப் பல விதிமீறல்களைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

    Advertisement

    செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் சிக்னலைக் கடப்பதற்காக வாகனங்கள் நின்று கொண்டிருந்த போது, ஆம்புலன்ஸ் ஒன்று அதிவேகத்தில் வந்தது. சிக்னல் விழுந்ததும் இருசக்கர வாகன ஓட்டிகளும் சாலையைக் கடக்க முயன்றனர். ஆனால், ஆம்புலன்ஸ் சிக்னலைப் பொருட்படுத்தாமல் ஏறிச் சென்றது. ஆம்புலன்ஸுக்கு வழிவிடுவது சரியானது என்றாலும், அந்தச் சம்பவத்தில் ஒரு வாகன ஓட்டி கண்முன்னே உயிரிழந்தார்; ஒரு தம்பதியினர் படுகாயமடைந்தனர். அதே காட்டாங்குளத்தூர் சிக்னலில் தான் அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதி, ஓர் இளைஞர் உயிரிழந்தார். அங்குப் பெரும்பாலான அரசுப் பேருந்துகள், இரவு நேரங்களில் சிக்னலை மதிப்பதோ அல்லது எச்சரிக்கையாகச் செல்வதோ கிடையாது. இது ஒரு சோகமான உதாரணம் மட்டுமே.

    Advertisement

    இதேபோல விபத்து அபாயம் உள்ள பல பகுதிகள் தமிழ்நாட்டில் உள்ளன. அப்படியான பகுதிகளில் அரசு எச்சரிக்கை பலகைகளையும் வைத்துள்ளது. இருப்பினும், விதிமீறலால் நடக்கும் விபத்துகள் அதிகமாகவே இருக்கின்றன.

    சமீபத்தில் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் கார் ஒன்று சாலையில் சென்று கொண்டிருக்கிறது. அந்த காரில், 'முதல் மரியாதை' படத்தில் வரும் "பூங்காற்று திரும்புமா..." என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அப்போது, ஸ்கூட்டியில் சென்ற ஒரு பெண், கண் இமைக்கும் நேரத்தில் திடீரென இடதுபுறம் திரும்பினார். அவர் இண்டிகேட்டர் போடவில்லை; பின்னால் வந்த வாகனத்தையும் கவனிக்கவில்லை. காரை ஓட்டியவர் சமயோசிதமாகச் செயல்பட்டு, வேகத்தைக் குறைத்து, காரை எதிர்ச்சாலையில் திருப்பி, சில வினாடிகளில் மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தார்.

    Advertisement

    அப்போது எதிர் திசையில் எந்த வாகனமும் வராததால் நல்வாய்ப்பாகப் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. காரும் கவிழாமல் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.

    சில இருசக்கர வாகன ஓட்டிகளின் இத்தகைய பொறுப்பற்ற தன்மையால் தான் மிக மோசமான விபத்துகள் நடக்கின்றன. மேலும், பல இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையின் நடுவே மிகவும் மெதுவாகச் செல்வதும் விபத்துகளுக்கு முக்கியக் காரணமாக அமைகிறது.

    அதேபோல், இருசக்கர வாகனம் ஓட்டும் சில பெண்கள், லாரி ஓட்டுநர்களுக்குப் பெரிய தலைவலியாக உருவெடுக்கிறார்கள். நேராக வாகனத்திலேயே முட்டுவது போல் வருவது, லாரி ஓட்டுநரின் பார்வையே படாத 'பிளைண்ட் ஸ்பாட்' (Blind spot) பகுதிகளில் வந்து லாரிக்குள் நுழைவது போன்றவை அடிக்கடி நடக்கின்றன. இதனால் ஸ்கூட்டியில் பெண்கள் யாராவது சென்றால், லாரி மற்றும் கார் ஓட்டுநர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன்தான் செல்கிறார்கள். ஏனெனில், யார் எந்தப் பக்கம், எந்த நிமிடத்தில் திரும்புவார்கள் என்றே சொல்ல முடியாத நிலை உள்ளது. அப்படித்தான் அந்த வீடியோவிலும் பதிவாகியிருந்தது. நீங்களே அந்த வீடியோவைப் பாருங்கள்!

    English Summary

    Tiruppur scooter : Car driver skillfully averts an accident that was about to be caused by a woman on a scooter