திருப்பூர்: தாராபுரத்தில் தவெக பிரச்சார கூட்டம் நடைபெறும் திடலில் மூன்று பேர் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மயக்கம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மூன்று பேரும் நீர்சத்து குறைவு ஏற்பட்டு மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது.
தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு தவெக சார்பில் போட்டியிடும் சத்யபாமாவை ஆதரித்து விஜய் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். தாராபுரம் வட்டம், சித்ராவுத்தன்பாளையம் கிராமம், மாருதி நகரில் விஜய் பங்கேற்கும் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தவெக அறிவித்த நிலையில், இன்று காலை முதலே விஜய்யை பார்க்க தவெகவினர் அதிகளவில் திரண்டனர்.
பிற்பகல் 3 மணிக்குதான் விஜய் பிரசாரம் நடைபெறும் என்று தவெக அறிவித்தாலும் இன்று அதிகாலையில் இருந்தே பொதுக்கூட்டம் நடைபெறும் அரங்கிற்கு தவெகவினர் அணி அணியாக வந்தனர். இதனால் நண்பகலுக்கு முன்பே பிரசாரம் நடைபெறும் இடம் நிரம்பியது. தாராபுரத்தில் கடுமையான வெயில் அடித்து வருவதால் நிற்பதற்கு கூட இடம் கிடைக்காமல் தவெகவினர் அங்கும் இங்கு சுற்றிக்கொண்டு இருந்ததை பார்க்க முடிந்தது. இதற்கிடையே வெயிலின் தாக்கத்தால் தவெகவினர் மூன்று பேர் மயக்கம் அடைந்தனர். பிரசார திடலில் இருந்த மூன்று பேரும் கடும் வெயிலின் தாக்கம் காரணமாக மயக்கம் அடைந்தனர். இதையடுத்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மூன்று பேரையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரசார கூட்டம் இடத்தில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி செய்யப்பட்டு இருந்தாலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தவெகவினர் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி என்று முதலில் சொல்லிவிட்டு.. கியூ ஆர் கோடு இல்லாதவர்களையும் அனுமதித்ததால் தவெகவினர் அதிக அளவில் பிரசார கூட்டம் நடைபெறும் திடலுக்கு வந்ததாக சொல்லப்படுகிறது. அவர்களுக்கு ஏற்ற உரிய அடிப்படை வசதிகள் இல்லை என்றும் பொதுமக்கள் சிலர் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். விஜய் வருகை காரணமாக கோவையில் இருந்து சாலையின் இருபக்கமும் இரும்பு தடுப்புகளை போலீசார் அமைத்து இருந்தனர். சாலை ஓரத்தில் வைக்கப்பட்ட இரும்பு தடுப்புகளால், தங்களின் வியாபாரம் பாதிக்கப்படுவதாக கடை வியாபாரிகளும் குற்றம் சாட்டினர். இது மட்டும் இன்றி கூட்டம் அதிகம் என்பதை காண்பிப்பதற்காக வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆட்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக சிவகங்கை, குமரி, நெல்லை, தூத்துக்குடி போன்ற வெளி மாவட்டங்களில் இருந்தும் லாரி வேன்களில் தவெகவினரை நிர்வாகிகள் அழைத்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.