திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஆடு வாங்க சென்ற வியாபாரி இடமிருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற இரண்டு லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், 50 ஆயிரத்திற்கு மேல் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படும். விசாரணைக்கு பின்னர் தவறு இல்லை என்பது தெரியவந்தால், அதனை ஒப்படைப்பார்கள். அந்த விதிமுறைப்படியே பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் மே மாதம் வெளியானது. இதில் திமுக, அதிமுகவை தோற்கடித்து விஜய் தலைமையிலான தவெகா 108 இடங்களில் வென்றது. காங்கிரஸ் கட்சி ஆதரவு காரணமாக 112 இடங்களையும் உடனடியாக தவெக பெற்றது. இந்த சூழலில் இடதுசாரிகளும், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளும் ஆதரித்த காரணத்தால் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்தது. தவெக அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க சட்டசபையில் அதிமுகவில் மொத்தம் உள்ள 47 பேரில் 27 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் எளிதாக மெஜாரிட்டியுடன் தவெக ஆட்சி அமைத்தது. அதை தொடர்ந்து பல்வேறு அரசியல் சூழல் காரணமாக அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
அதிமுக எம்எல்ஏ-க்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா, பெருந்துறை ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, விராலிமலை சி.விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினமா செய்வதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் கடிதம் கொடுத்துவிட்டு தவெகவில் இணைந்தார்கள். இவர்களின் ராஜினாமாவை பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் ஏற்றுக் கொண்டதையடுத்து அந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதேபோல், திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை முதல்வர் விஜய் ராஜினாமா செய்தார். இதனால், அந்த தொகுதியும் காலியாகியது. இதன்மூலம், மொத்தம் 7 தொகுதிகள் காலியாகியது. இதனிடையே, அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி பதவியை ராஜினாமா செய்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு காரணமாக ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைத்துள்ளது. வழக்கில் இல்லாத , மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அண்மையில் அறிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், "மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். வேட்புமனு தாக்கல் செப்.9-ம் தேதி தொடங்கும். வேட்புமனு தாக்கல் செய்ய செப்.16 கடைசி நாள். வேட்புமனு மீதான பரிசீலனை செப்.17-ம் தேதி நடைபெறும். வேட்புமனுவை திரும்பப் பெற செப்.19 கடைசி நாள். தேர்தலில் பதிவான வாக்குகள் அக்.-9ம் தேதி நடைபெறும்" என்று கூறியிருந்ததது. இதையடுத்து திமுக சார்பில் நேற்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். மதுராந்தகம் (தனி) பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் வழக்குரைஞரும் திமுக சட்டத்துறை இணைச் செயலாளருமான ஐ. பரந்தாமன் போட்டியிடுவார் அதேபோல், தாராபுரம் (தனி) பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் வழக்குரைஞர் எஸ். சுகன்யா போட்டியிடுவார் என்றும் அறிவிப்பு என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். இதனிடையே இன்று தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் அறிவித்தார்.தவெக துணைப் பொதுச் செயலாளர் கே. மரகதம் குமரவேல் மதுராந்தகத்திலும், திருப்பூர் தென்கிழக்கு மாவட்டச் செயலர் பி. சத்தியபாமா தாராபுரத்திலும் போட்டியிடுவார்கள் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இது ஒருபுறம் எனில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று முன்தினம் தேர்தல் அறிவித்த உடனேயே அமலுக்கு வந்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சூழலில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே தேர்தல் பறக்கும் படை நிலையான கண்காணிப்பு குழு இரண்டு வாகன சோதனைகள் ஈடுபட்டு வந்தனர். உடுமலையிலிருந்து தாராபுரம் வழியாக வெள்ளகோவில் சென்று கொண்டிருந்த பொலிரோ வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது பொலிரோ வாகனத்தில் உடுமலையைச் சேர்ந்த தங்கவேல் 71 வயதாகும் ஆட்டு வியாபாரி, தனது வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதை அடுத்து இரண்டு லட்சத்து 46 ஆயிரம் ரூபாயை குண்டடம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவசங்கர் தலைமையிலான கண்காணிப்பு குழு படையினர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தாராபுரம் தாசில்தார் ராமலிங்கம் கருவூலத்தில் ஒப்படைத்தார்.