தாராபுரத்தில் தாராளமாக விளையாடும் பணம்? அமைச்சர் பர்வேஸ் ஆட்களை விரட்டிய பொதுமக்கள்!

  • திருப்பூர்: இன்று தாராபுரத்தில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முன்னதாக இன்று காலை, சிலர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக கூறி பொதுமக்களால் அடித்து விரட்டப்பட்டிருக்கின்றனர். அவர்கள் தவெக அமைச்சர் பர்வேஸின் ஆட்கள் என்று குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

    Advertisement

    கடந்த 2026 சட்டமன்ற தேர்தலின்போது தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றனர். ஆனால், அடுத்த சில நாட்களில் அவர்கள் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துவிட்டனர். இதனால் தற்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    Advertisement

    அமைச்சரின் ஆட்கள்?

    இன்று காலை தாராபுரத்தில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னர், மர்ம நபர்கள் சிலர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக சொல்லப்படுகிறது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் பிடி கொடுக்காமல் அவர்கள் தப்பிக்க முயல.. மக்கள் அவர்களை அடித்து விரட்டியிருக்கின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகின்றன. பணம் கொடுக்க முயன்றது அமைச்சர் பரிவேஸின் ஆட்கள் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    பணப்பட்டுவாடா புகார்

    மதுராந்தகத்திலும் சரி தாராபுரத்திலும் சரி தாராளமாக பணம் விளையாடுகிறது என்றும், அதுவும் ஆளும் கட்சி தரப்பில் பணம் விநியோகிக்கப்படுகிறது என்றும் பல்வேறு தரப்பினரும் புகார் கூறுகின்றனர்.

    Advertisement

    வழக்கமாக எதிர்க்கட்சிகள்தான் இப்படியான புகார்களை அடுக்கும். ஆனால், தவெக ஆட்சிக்கு வர காரணமாக இருந்த மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் (சிபிஐ & சிபிஎம்) இதே புகாரை முன்வைத்திருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது.

    தவெகவினர்தான் அதிகமாக தருகிறார்கள்

    சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம், "நாங்கள் மதுராந்தகத்தில் தேர்தல் பரப்புரைக்கு சென்றிருந்தபோது வெறும் நோட்டீஸைதான் கொடுத்திருந்தோம். எங்கள் கொள்கை என்ன? எதற்காக போட்டியிடுகிறோம்? என்பதை விளக்கி நோட்டீஸ் கொடுத்து ஓட்டு கேட்டோம். ஆனால், மற்ற கட்சியினர் எல்லாம் பணம் கொடுக்கிறார்களே! நீங்கள் வெறும் நோட்டீஸை மட்டும் கொடுக்கிறீர்களே! என்று மக்கள் கேள்வி எழுப்பினர். எந்தெந்த கட்சியினர் பணம் கொடுத்தனர்? என்று கேட்டபோது.. மற்ற கட்சியினரை விட தவெகவினர்தான் அதிக அளவில் பணம் கொடுத்தார்கள் என்று கூறுகின்றனர்.

    Advertisement

    வாக்காளர்களை மாற்றி வைத்திருக்கிறார்கள்

    நாங்கள் தூய சக்தி, வாக்காளர்களுக்கு பணம் எல்லாம் கொடுக்க மாட்டோம் என்று கடந்த தேர்தலில் முதலமைச்சர் விஜய் பிரச்சாரம் செய்தார்! இப்போதும் பிரச்சாரம் செய்கிறார். ஆனால் இருப்பதிலேயே அதிகமாக பணம் கொடுக்கதது தவெகதான் என்று பொதுமக்கள் வாக்குமூலம் கொடுத்திருக்கின்றனர். தவெக அளவுக்கு பணம் இல்லை என்றாலும் பரவாயில்லை.. எங்களுக்கு கொஞ்சமாவது கொடுங்கள் என்று பேரம் பேசும் அளவுக்கு வாக்காளர்களை மாற்றி வைத்திருக்கின்றனர்.

    இடதுசாரி கட்சிகள் வாக்குகளுக்கு பணம் கொடுக்காது. ஆனால், மற்ற கட்சிகள் அதிக அளவில் பணத்தை விநியோகிக்கின்றன. எனவே தேர்தல் ஆணையம் பதில் சொல்ல வேண்டும், நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கட்சிகளும் பதில் சொல்ல வேண்டும்" என்று குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

    Advertisement

    இப்படி இருக்கையில் தாராபுரத்தில் அமைச்சர் பர்வேஸின் ஆட்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக கூறி அடித்து விரட்டப்பட்டிருப்பது தவெக மீதான விமர்சனங்களை அதிகரித்திருக்கிறது.

    English Summary

    Dharapuram Bypoll: Voting for the by-election is currently underway in Dharapuram. Earlier this morning, some individuals were beaten and chased away by the public after allegedly attempting to distribute money to voters. Allegations have arisen that these individuals were associates of TVK functionary Parvez.