வேலுமணி, சிவி சண்முகம் சப்போர்ட் இல்லாமலே.. தாராபுரத்தை அடித்து தூக்கும் எடப்பாடி! விஜய்க்கு ஷாக்

  • திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மிகப்பெரிய அரசியல் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தபால் வாக்குகளில் ஆளும் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்றிருந்த நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) திறக்கப்பட்டதும் அதிமுக அதிரடியாக முன்னிலை பெற்று ஆளுங்கட்சிக்குக் கடுமையான அதிர்ச்சியை அளித்துள்ளது.

    Advertisement

    தற்போதைய இவிஎம் வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, அதிமுக வேட்பாளர் 6,460 வாக்குகளைப் பெற்று முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆளும் தவெக வேட்பாளர் 6,364 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். திமுக வேட்பாளர் 4,987 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் பின்தங்கியுள்ளார். வெறும் 96 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முந்தியுள்ளது என்றாலும், ஆளும் தவெக மற்றும் பலம் வாய்ந்த திமுக ஆகிய இரு கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி அதிமுக முன்னிலை பெற்றுள்ளது அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    வேட்பாளர்கள் யார்?

    இந்த இடைத்தேர்தலில் முக்கியக் கட்சிகளின் சார்பில் களம் இறங்கியுள்ள வேட்பாளர்களின் விவரங்கள் தேர்தல் களத்தை மேலும் உற்றுநோக்க வைக்கின்றன. தவெக சார்பில் கடந்த முறை அதிமுக சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற முன்னாள் எம்.எல்.ஏ பி. சத்யபாமா போட்டியிடுகிறார். அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததால் இந்த இடைத்தேர்தல் வந்தது.

    அவரை எதிர்த்து, திமுக சார்பில் வழக்கறிஞர் எஸ். சுகன்யா அதிகாரப்பூர்வ வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். இழந்த தொகுதியை மீண்டும் தன்வசமாக்க வேண்டும் என்ற தீவிர முனைப்பில் அதிமுக சார்பில் கே. பானுமதி போட்டியிடுகிறார். இவர்களுடன் நாம் தமிழர் கட்சி சார்பில் எம். கார்த்திகா மற்றும் இடதுசாரி அமைப்புகள், சுயேச்சைகள் என மொத்தம் 22 வேட்பாளர்கள் இத்தொகுதியில் களத்தில் உள்ளனர். இப்படிப்பட்ட நிலையில்தான் அதிமுக இங்கே முன்னிலை வகிக்கிறது.

    Advertisement

    அதிமுக முன்னிலை

    இந்த முன்னிலை வெறும் தேர்தல் வாக்கு வித்தியாசம் மட்டுமல்ல; அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் ஒற்றைத் தலைமைக்குக் கிடைத்த மிகப்பெரிய அரசியல் பலமாகக் கருதப்படுகிறது. தேர்தல் களத்தில் அதிமுகவின் முக்கியத் தலைவர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் போன்ற மூத்த தலைவர்கள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபடவில்லை என்ற விமர்சனங்களும் உட்கட்சி சலசலப்புகளும் எழுந்தன.

    எடப்பாடி பழனிசாமியின் உழைப்பு

    குறிப்பாக கொங்கு மண்டலத்தின் முக்கிய முகமாகப் பார்க்கப்படும் எஸ்.பி. வேலுமணியின் ஆதரவு, சிவி சண்முகத்தின் நேரடிப் பங்களிப்பு இல்லாத சூழலிலும், ஒற்றை ஆளாக நின்று தேர்தல் களத்தை வழிநடத்திய எடப்பாடி பழனிசாமியின் உழைப்பு தற்போது வாக்கு எண்ணிக்கையில் எதிரொலித்துள்ளது.

    Advertisement

    இரண்டு பேருமே எடப்பாடி மீதுள்ள அதிருப்தி காரணமாக பெரிதாக தேர்தல் வேலை செய்யவில்லை. ஆனால் உட்கட்சித் தலைவர்களின் ஆதரவு மற்றும் தேர்தல் களப்பணி சுணக்கமாக இருந்தபோதிலும், ஆளும் தவெக அரசின் முழு அதிகார பலத்தையும், திமுகவின் வியூகங்களையும் தகர்த்து அதிமுக முன்னிலை வகித்து வருவது எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

    முன்பு அதிமுகவில் வெற்றி பெற்று பின்னர் ஆளும் தவெகவிற்குச் சென்ற வேட்பாளருக்கு எதிராக உள்ள மனநிலை இதில் எதிரொலித்துள்ளது. அதிமுகவின் இரட்டை இலை சின்னமும் அடிமட்டத் தொண்டர்களின் ஆதரவும் களத்தில் அக்கட்சிக்கு அசைக்க முடியாததாக உள்ளது என்பதையே இந்த இவிஎம் வாக்குகள் உணர்த்துகின்றன.

    Advertisement

    அடுத்தடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கைகளில் இந்த முன்னிலை நீடிக்குமா அல்லது ஆளும் தவெக மீண்டும் தனது பலத்தைக் காட்டுமா என்ற தீவிர எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

    English Summary

    Dharapuram Bypoll Results: AIADMK Takes Surprise EVM Lead Over TVK and DMK Despite Internal Rifts