திருப்பூரில் வீட்டு அடமான கடன்.. கூட்டுறவு வங்கி பெண் அதிகாரியை சிறைக்கு போக வைத்த தவறு

  • திருப்பூர்: திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்த லோகநாதன் என்பவர் தனது வீட்டை அடமானம் வைத்து திருப்பூர் பங்காளா ஸ்டாப் கங்காநகரில் உள்ள அண்ணா கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தில் கடன் பெற முடிவு செய்தார். அவரிடம் வீட்டு அடமான கடன் வழங்குவதற்காக ரூ.45 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க பெண் செயலாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    Advertisement

    பட்டா பெயர் மாற்றம் செய்ய, மின் இணைப்பு பெற, பத்திரப்பதிவு செய்ய, சர்வேயர் நிலத்தை அளக்க, விஏஓ பல்வேறு சான்றிதழ்கள் வழங்க, தாசில்தார் கையெழுத்து போடுவதற்கு என சில சந்தர்ப்பங்களில் சில அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக புகார்கள் உள்ளது. வேலையை முடிக்கும் முன்பு கணிசமான லஞ்சம், வேலை முடிந்த பிறகு மீதத்தொகை என லஞ்சத்தை பிரித்து வாங்குவதை சிலர் வழக்கமாக வைத்துள்ளார்கள். அவர்கள் அடுத்தடுத்து சிக்கி வருகிறார்கள். திருப்பூரில் நடந்ததும் அப்படியான ஒரு சம்பவம் தான்.

    Advertisement

    திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்த 49 வயதாகும் லோகநாதன் தனது வீட்டை அடமானம் வைத்து கடன் பெற முடிவு செய்திருந்தார். இதற்காக அவர், கடந்த வாரம் திருப்பூர் பங்காளா ஸ்டாப் கங்காநகரில் உள்ள அண்ணா கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்திற்கு சென்று, தனது வீட்டு பத்திரத்தை அடமானமாக வைத்து ரூ.22 லட்சம் கடன் கேட்டார். அந்த சங்கத்தில் செயலாளராக பணியாற்றிய 52 வயதாகும் ஜோதிமணி , கடன் வழங்குவதற்கு ரூ.60 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது. இதற்கு லோகநாதன் மறுத்துவிட்டாராம்.

    Advertisement

    அதன்பிறகு ரூ.55 ஆயிரம் வழங்கும்படி ஜோதிமணி வற்புறுத்தினாராம். இதனையடுத்து முதற்கட்டமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூ.10 ஆயிரத்தை லோகநாதன் லஞ்சமாக கொடுத்தாராம்.

    இதனையெடுத்து கடன் தொகை, லோகநாதனின் வங்கிக்கணக்குக்கு சங்கத்தின் சார்பில் அனுப்பப்பட்டது. அதன்பிறகு மீதம் உள்ள ரூ.45 ஆயிரத்தையும் கொடுக்குமாறு ஜோதிமணி கேட்டாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த லோகநாதன், திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து ஜோதிமணியை கையும், களவுமாக பிடிக்க போலீசார் முடிவு செய்தார்கள்.

    லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைப்படி ரசாயன பவுடர் தடவிய ரூ.45 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு கூட்டுறவு வங்கிக்கு நேற்று காலை லோகநாதன் சென்றார். சங்க செயலாளர் ஜோதிமணி அங்கு இருந்தார். அவர் கூறியதன் பேரில், அந்த அலுவலகத்தில் புரோக்கராக செயல்பட்ட பெரியார் காலனியை சேர்ந்த திருநாவுக்கரசு (64), கூட்டுறவு சங்கத்தில் தற்காலிக அலுவலக உதவியாளராக வேலை செய்து வந்த சேவூரை சேர்ந்த தக்ஷன் (21) ஆகியோர் லோகநாதனை அருகே உள்ள டீக்கடைக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து ரூ.45 ஆயிரத்தை 2 பேரும் வாங்கினார்களாம்.

    Advertisement

    அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி ஆகியோர் தலைமையிலான போலீசார் அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் 2 பேரையும் போலீசார் கூட்டுறவு சங்கத்துக்கு அழைத்துச்சென்றனர். அங்கிருந்த செயலாளர் ஜோதிமணியிடம் விசாரணை நடத்தியபோது, அவர் கூறியதன் பேரில் திருநாவுக்கரசு, தக்ஷன் ஆகியோர் லஞ்சப்பணத்தை லோகநாதனிடம் பெற்றது உறுதியானது. இதையடுத்து ஜோதிமணி, திருநாவுக்கரசு, தக்ஷன் ஆகிய 3 பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிந்து, அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    English Summary

    Female secretary of a cooperative society arrested in Tiruppur for accepting a ₹45,000 bribe to sanction a housing mortgage loan.