நர்ஸ் கொலையில் மருத்துவமனை ஊழியர் கைதானது எப்படி? காட்டி கொடுத்த துண்டு சீட்டு! அதில் இருந்தது என்ன?

  • திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே செவிலியர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளி சரவணன் கைது செய்யப்பட்டது எப்படி? அவரை போலீஸார் கண்டுபிடிக்க உதவிய துண்டு சீட்டில் இருந்தது என்ன? என்பதை பார்க்கலாம்.

    Advertisement

    தமிழகத்தில் அண்மைக்காலமாக சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். விழுப்புரம் மாவட்டத்தில், செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தில் சிறுமி காணாமல் போய் 7 நாட்கள் ஆன நிலையில் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் போலீஸார் திணறுகிறார்கள்.

    Advertisement

    அது போல் ஸ்ரீபெரும்புதூரில் ஜார்க்கண்டை சேர்ந்த 8 வயது சிறுமியையும் காணவில்லை. அவரையும் போலீஸார் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் பிரபல ரவுடி சுள்ளான் மதன் சிவகங்கையில் பட்டப்பகலில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    தவெக நிர்வாகி

    அது போல் தவெக நிர்வாகியே ரூ 400 கோடி மதிப்பிலான மெத் போதை பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஊத்துக்குளியில் நர்ஸ் கொலை செய்யப்பட்ட சம்பவம் வேறு நடந்தது. இந்த சம்பவத்தில் குற்றவாளி யாரென்பதே தெரியாமல் போலீஸார் திணறினர். அதில் தற்போது 5 நாட்கள் கழித்து கொலையாளியை கைது செய்துள்ளனர். அது எப்படி நடந்தது என்பதை பார்க்கலாம்.

    Advertisement

    யார் இந்த நர்ஸ்?

    ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள பூங்குளம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (27). கட்டடத் தொழிலாளி. அவருடைய உறவினர் மகள் உத்திரா (26). இவர்களுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்னர்தான் திருமணம் நடந்தது.

    கட்டடத் தொழிலாளி

    திருமணத்திற்கு பிறகு இருவரும், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள பல்லகவுண்டம்பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். அங்கிருந்தபடியே ரஞ்சித்குமார் கட்டட வேலைக்கு சென்று வந்தார். உத்திரா தனியார் மருத்துவமனையில் கடந்த 3ஆம் தேதி முதல் நர்ஸாக பணிக்குச் சேர்ந்து வேலை செய்து வந்தார்.

    Advertisement

    ரஞ்சித் குமார்

    தினமும் ரஞ்சித் குமார் கட்டட வேலைக்கு செல்லும் போது மனைவி உத்திராவை பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டுவிடுவாராம். அங்கிருந்து உத்திரா பேருந்தில் மருத்துவமனைக்கு செல்வாராம்.

    இதே போல்தான் மாலை வேளையிலும் உத்திரா பேருந்து மூலம் பெருந்துறை பேருந்து நிலையத்திற்கு வந்துவிடுவாராம். அங்கு வரும் ரஞ்சித் குமார் மனைவியை வீட்டிற்கு பைக்கில் கூட்டிச் செல்வாராம்.

    வேலைக்கு சென்ற ரஞ்சித்

    அது போல் சம்பவத்தினமான கடந்த 14 ஆம் தேதி உத்திராவை அழைத்துக் கொண்டு பெருந்துறை பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு ரஞ்சித்குமார் கட்டுமான வேலைக்குச் சென்றுவிட்டார்.

    அது போல் மாலையில் அந்த பேருந்து நிலையத்திற்கு வந்து ரஞ்சித் குமார் காத்திருந்த நிலையில் அங்கு உத்திரா வரவில்லையாம். இதையடுத்து ரஞ்சித் குமார், போன் செய்து மருத்துவமனையில் கேட்ட போது உத்திரா ஹாஸ்பிட்டலில் இருந்து கிளம்பிவிட்டதாக தெரிவித்தனராம்.

    Advertisement
    Perundurai Nurse: 4 சவரன் நகைக்காக நர்ஸ் உத்திராவை கொன்று உடைகளை களைத்தது ஏன்? கொலையாளி வாக்குமூலம்

    பெருந்துறை அருகே நிர்வாணமாக அழுகிய உடல்

    ஆனால் அவர் வீட்டிற்கும் போகாத நிலையில் பெருந்துறை விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே உத்திராவின் சடலம் நிர்வாணமான நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அங்கு போலீஸார் ஆய்வு செய்த போது ஒரு துண்டு சீட்டில் எழுதப்பட்டிருந்த போன் நம்பர் இருந்ததாம்.

    செல்போன் எண் சீட்டு

    அதை வைத்துதான் கொலையாளியை போலீஸார் கண்டறிந்தனராம். அதில் இருந்த செல்போன் எண் யாருடையது என ஆய்வு செய்த போது அது உத்திராவுடன் பணியாற்றிய சரவணன் என்பவருடைய என தெரியவந்தது.

    Advertisement

    சிசிடிவி காட்சி

    இதையடுத்து போலீஸார் மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மருத்துவமனை வாயிலில் ஒரு துண்டு சீட்டில் எதையோ எழுதி உத்திராவிடம் சரவணன் வலுக்கட்டாயமாக கொடுத்தது தெரியவந்தது. எனவே அந்த சீட்டில் எழுதப்பட்டது போன் நம்பர் என்பதை உறுதி செய்த போலீஸார், சரவணனிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    நர்ஸ் கொலை.. சுள்ளான் மதன் கொலை.. குழந்தைகள் கடத்தல்! தவெக ஆட்சியில் சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு?

    பணக்கஷ்டம்

    அப்போது அவர் கூறுகையில், தனக்கு பணக்கஷ்டம் இருந்ததால் பணத்திற்காக அலைந்த போது உத்திராவின் கழுத்தில் இருந்த நான்கரை பவுன் தாலி சங்கிலி என் கண்ணை உறுத்தியது. இதனால் அவர் வேலையை விட்டு சென்ற போது நானும் பின்னாலேயே சென்றேன். அப்போது அவரிடம் பெருந்துறை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாக பைக்கில் அழைத்துச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இறக்கி அவரிடம் இருந்த தாலி செயினை கழற்றி கொடுக்குமாறு மிரட்டினேன். ஆனால் அவரோ கொடுக்க மறுத்து, கூச்சலிட்டார்.

    கழுத்தை நெரித்த சரவணன்

    இதனால் யாராவது வந்துவிடுவார்களோ என அஞ்சிய நான், அவர் அணிந்திருந்த துப்பட்டாவால் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு நகையை கழற்றிக் கொண்டேன். பின்னர் போலீஸை குழப்ப அவரது ஆடைகளை களைத்தேன். இவ்வாறு சரவணன் தெரிவித்தார்.

    சரவணன் எழுதி கொடுத்த துண்டு சீட்டு, உத்திராவின் லெக்கின்ஸ் பேன்ட்டில் சிக்கியிருந்தது. அதை வைத்துதான் கொலையாளியை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் மீது ஏற்கெனவே குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாம். எனவே புதிதாக ஒருவரை வேலைக்கு சேர்க்கும் போது சம்பந்தப்பட்ட நிறுவனம் குற்ற வழக்குகள் குறித்து காவல் நிலையத்தில் விசாரித்துவிட்டு வேலைக்கு சேர்க்க வேண்டும் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

    English Summary

    How did Uthukuli police arrested the murderer Saravanan in Nurse murder case? A small paper helped police to find the accused.