திருப்பூர்: ''மின்வெட்டால் மக்களின் நிம்மதியை கெடுத்துவிட்டு, மக்களை ரோட்டில் போராட விட்டுவிட்டு பட்டு வேட்டி சட்டையில் முதல்வர் பந்தா செய்து கொண்டு இருக்கிறார். நீங்க வெள்ளிக்கிழமை பாருங்க. ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு டிரஸ். ஜோசியர் சொல்லியிருக்காரு'' என்று முதல்வர் விஜய்யை திமுக தலைவர் முக ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்தார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டசபை தொகுதியில் வரும் 6 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக சார்பில் சுகன்யா என்பவர் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். சுகன்யாவை ஆதரித்து இன்று திமுக தலைவர் முக ஸ்டாலின் பிரசாரம் செய்தார். தாராபுரம் அமராவதி சிலையில் இருந்து ஸ்டாலின் ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதன்பிறகு மாருதி நகர் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முக ஸ்டாலின் பேசினார். அப்போது முக ஸ்டாலின் முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்தார். இதுபற்றி முக ஸ்டாலின் பேசியதாவது: ''பயிர் கடன் செய்யாததால் விவசாயிகள் சாலையில் போராடி கொண்டு இருக்கிறார்கள். மீனவர்கள் வாழும் பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டப்போவதாக கூறியதால் மீனவர்கள் போராட்டம். மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழா பார்க்க பாஸ் கொடுப்பார்கள். அந்த பாஸ் எல்லாத்தையும் பழக்கதோஷத்தில் பிளாக்கில் விற்றதாக பக்தர்கள் எல்லாம் போராட்டம். வார கடைசியில் ஊருக்கு போக பேருந்துகள் இல்லாமல் பயணிகள் போராட்டம். தூய்மை பணியாளர்கள் போராட்டம். செவிலியர்கள் போராட்டம். மின்வாரிய ஊழியர்கள் போராட்டம். ஆவின் பால் கிடைக்காமல் போராட்டம். இவை எல்லாவற்றுக்கும் மகுடம் வைத்தது போல் முதல் அமைச்சர் தொகுதி தொடங்கி எல்லா தொகுதிகளிலும் மின்வெட்டுக்கு எதிராக போராட்டம். 7 மணிநேரம், 8 மணிநேரம் மின்சாரம் இல்லை. இரவில் மக்கள் எல்லாம் வீடுகளை விட்டுவிட்டு ரோட்டில் வந்து சாலைமறியல் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படி மக்களின் நிம்மதியை கெடுத்து அலையவிட்டு முதல்வர் மட்டும் பண்ணையார் மாதிரி பட்டு வேஷ்டி சட்டையில் பந்தா செய்து கொண்டிருக்கிறார். வெள்ளிக்கிழமையானால் பாருங்க. ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு டிரஸ். ஜோசியர் சொல்லி இருக்கிறார். தமிழக விவசாயிகளின் உயிர் பிரச்சனையான காவிரியில் கூட கர்நாடகாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மவுனமாக இருக்கிறார். சிஎம் சார்.. ப்ரோ.. என்ன பயம்? என்ன தயக்கம்? தைரியம் இருந்தால் சொல்லுங்கள்'' என்று சாடினார்.