திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறைச் செயலாளர் கார்த்திகா உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, தாராபுரம் காவல் நிலையம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, முதல்வர் விஜய்யை கான்வாய் செல்லும் சாலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா சாலை மறியலில் ஈடுபட்டது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ சென்ற வழியில் அனுமதியின்றி பேனர் வைத்தது, பேனரை அகற்றியபோது போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
மேலும், போலீசாரைத் தரக்குறைவாகப் பேசி தாக்க முயன்றதாகவும், காமராஜபுரத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்ற பகுதியில் குழந்தையுடன் சென்ற தமிழக வெற்றிக் கழகத் தொண்டர் தாக்கப்பட்டதாகவும், அவதூறு வீடியோ வெளியிட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இச்சம்பவங்கள் தொடர்பாக நான்கு வழக்குகளில் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்குகள் தொடர்பாக மாநில மகளிர் பாசறைச் செயலாளரும், தாராபுரம் வேட்பாளருமான கார்த்திகா, அவரது கணவர் முருகு சந்திரகுமார், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் இசை மதிவாணன், தாராபுரம் தேர்தல் பொறுப்பாளர் சஞ்சய் காந்தி, மூலனூர் கந்தசாமி, தாராபுரம் நகரப் பொறுப்பாளர் ஷேக் பரீத், மாணவர் பாசறைச் செயலாளர் சூர்யா, சென்னையைச் சேர்ந்த பகுதி செயலாளர் கோகுல், சோழவந்தான் இளைஞர் பாசறைச் செயலாளர் விக்னேஷ் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே, கைது செய்யப்பட்ட அவர்கள் தாராபுரம் மற்றும் குண்டடம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானாது. ஆனால், அவர்கள் எங்கு விசாரிக்கப்படுகின்றனர் என்பது குறித்தும் தெளிவான தகவல் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறி நாம் தமிழர் கட்சியினர் குற்றம்சாட்டினர். மேலும், கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களுக்குக்கூட எந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை என்றும், அரசியல் பழிவாங்கும் நோக்கில் இடைத்தேர்தல் முடிந்து சுமார் 16 நாட்களுக்குப் பிறகு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனிடையே கோவையில் உள்ள தனது வீட்டில் அதிகாலை 5.30 மணியளவில் போலீசார் தன்னைக் கைது செய்ததாகக் கூறிய நாதக கார்த்திகாவை போலீசார் தாராபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில் காலையில் கைது செய்த தன்னை பல்வேறு இடங்களுக்கு போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றதாகவும், ஒரு வேட்பாளரை 16 நாட்களுக்குப் பிறகு கைது செய்வது என்ன ஜனநாயகம்? எனக் கேள்வி எழுப்பியபடி போலீஸ் ஸ்டேசனுக்கு வந்தார். இந்நிலையில், கார்த்திகாவின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து தாராபுரம் காவல் நிலையம் முன்பு திரண்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இதையடுத்து, அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.தாராபுரம் கார்த்திகா
இடைத்தேர்தல்
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு புதிய திட்டம்! மரகதம் குமரவேலிடம் சொன்னதை செய்த விஜய்
தாராபுரம் காவல் நிலையம்
நாம் தமிழர் கட்சியினர்