திருப்பூர்: ஆன்லைன் பண மோசடி வழக்கில் தாராபுரத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் 3 பேரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பூர் கிழக்கு மாவட்ட வாக்குச்சாவடி அமைப்பாளர் சுஜித் குமார், கட்சி நிர்வாகி விடியல் தில்லைமுத்து மற்றும் ராஜேந்திரன் ஆகிய மூவரை, ஆன்லைன் பணப் பரிமாற்ற மோசடி தொடர்பாக கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் தரப்பில் கிடைத்த தகவலின்படி, தாராபுரம் பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த கோவை சைபர் கிரைம் போலீசார், சந்தேகத்திற்கிடமான இணையவழி பணப் பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூவரையும் தாராபுரம் பேருந்து நிலையம் அருகே கைது செய்தனர். பின்னர் அவர்களை தாராபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து ஆரம்பகட்ட விசாரணை மேற்கொண்ட போலீசார், தொடர்ந்து விசாரணைக்காக கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணையில், கடந்த 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் காலகட்டத்தில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து சுமார் ரூ.1 கோடி வரை பல்வேறு தவணைகளாக பெறப்பட்டு, அந்தத் தொகை 50-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அந்தப் பணம் மீண்டும் மற்றொரு வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டதாகவும், ஒவ்வொரு கணக்கிற்கும் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை வரவு வைக்கப்பட்டதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், பணம் பெற்றவர்களிடம், "ஒரு லட்சம் ரூபாய்க்கு ரூ.20 ஆயிரம் கமிஷனாக வைத்துக் கொண்டு, மீதமுள்ள ரூ.80 ஆயிரத்தை குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்பினால் போதும்" என்று கூறி, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளை பயன்படுத்தி பணத்தை கைமாற்றம் செய்ததாக விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மூலம் ஹவாலா பணம் பெற்று அதை அப்பாவி பொதுமக்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்க செய்து பணப்பரிவர்த்தனை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதில் சுஜித் குமார் ஏற்கனவே வேலூரில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்ததாகவும், அதன்பிறகும் இணையவழி நிதி மோசடி நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டதாகவும் விசாரணை அதிகாரிகள் சந்தேகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவத்தில் சுஜித் குமாருக்கு நெருங்கிய தொடர்புடையவர்களாகக் கூறப்படும் தாராபுரம் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த விடியல் தில்லைமுத்து மற்றும் பொன்னாபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோரும் தற்போது போலீஸ் விசாரணையில் உள்ளனர். கோவை சைபர் கிரைம் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், தனி அறையில் வைத்து, பணம் எங்கிருந்து வந்தது, யாருடைய கணக்குகள் பயன்படுத்தப்பட்டன, இந்தப் பணம் எதற்காக பரிமாற்றம் செய்யப்பட்டது, இறுதியில் எந்தக் கணக்குகளில் முதலீடு செய்யப்பட்டது, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது இந்த வலையமைப்பில் தொடர்புடையவர்கள் யார் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, தாராபுரம் பகுதியில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இந்தப் பணப் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற தகவல் விசாரணையில் வெளியாகியிருப்பதாக கூறப்படுகிறது. இது சைபர் கிரைம் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழ்நாட்டைத் தாண்டி 200 கோடி ரூபாய்க்கு மேல். கேரளா, கர்நாடகா, ஆந்திரப், மத்தியப் பிரதேசம், புதுடெல்லி, பீகார், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த நெட்வொர்க் செயல்பட்டிருக்கலாம் என்றும், பல்வேறு வங்கிக் கணக்குகள் வழியாக பணம் கைமாறியிருப்பதாகவும் விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். மேலும், இந்த வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு, அன்னியச் செலாவணி விதிமுறை மீறல் உள்ளிட்ட அம்சங்களிலும் விசாரணை நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நெட்வொர்க் துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விசாரணையில், தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்த சுஜித் குமார், பின்னர் தாராபுரம் புறவழிச்சாலையிலுள்ள ரங்கபாளையம் பகுதியில் வசித்து வந்ததாகவும், குறுகிய காலத்திலேயே சொகுசு கார், மாடி வீடு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தியிருப்பது குறித்தும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், இவர் ஒரு காலத்தில் "போலீஸ் நண்பர்கள்" அமைப்பில் பொறுப்பாளராக செயல்பட்டதாகவும், அக்காலகட்டத்தில் பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராகவும் இருந்து, பின்னர் பல்வேறு அரசியல் கட்சிகளில் செயல்பட்டு, தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச்சாவடி அமைப்பாளராக இருந்ததாகவும் விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் போலீசாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இவர்களிடம் இருந்து திரட்டப்படும் தகவல் மூலம் தாராபுரத்தில் இவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மேலும் பல அரசியல் புள்ளிகள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார்கள் என காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.