திருப்பூர்: புதுமணப்பெண் ரிதன்யா வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், தன் மகளின் மரணத்தில் நியாயமான நீதி கிடைக்கக் கோரி பலகட்ட சட்டப் போராட்டங்களை நடத்தி வருவதாகவும், வழக்கை முறையாக விசாரிக்கத் தவறிய அதிகாரிகளுக்கு எதிராக தேசிய மகளிர் ஆணையம் தற்போது காவல்துறைக்கு முழு விசாரணை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், உயிரிழந்த ரிதன்யாவின் தந்தை தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் அண்ணாதுரையின் மகள் ரிதன்யா கடந்த 2025 ஜூன் மாதம் 28 ஆம் தேதி வரதட்சணை கொடுமை தாங்காமல் தனது தந்தைக்கு வாட்ஸ் அப்பின் மூலமாக ஆடியோ மெசேஜ் அனுப்பி விட்டு கோயிலுக்குச் செல்லும் வழியில் காருக்குள் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி ஏழு நிபந்தனைகளின் அடிப்படையில் இவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தன் மகளின் மரணத்தில் நியாயமான நீதி கிடைக்கக் கோரி பல கட்ட சட்டப் போராட்டங்களை நடத்தி வருவதாகவும், வழக்கை முறையாக விசாரிக்கத் தவறிய அதிகாரிகளுக்கு எதிராக தேசிய மகளிர் ஆணையம் தற்போது காவல்துறைக்கு முழுவிசாரணை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் உயிரிழந்த ரிதன்யாவின் தந்தை இன்று அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை பேட்டியில் தெரிவித்ததாவது," எனது மகளின் வழக்கினைச் சரியான ஆவணங்களின் அடிப்படையிலும், உரிய சட்டப் பிரிவுகளைச் சேர்த்தும் விசாரிக்க வேண்டும் என்று மாவட்ட நீதிமன்றத்தை அணுகியிருந்தோம். ஆனால், வழக்கு விசாரணை தொடர்ந்து மிகவும் தொய்வாகவே நடைபெற்று வந்தது. இதனால் உயர் நீதிமன்றத்தை நாடியபோது, மாவட்ட கண்காணிப்பாளர் (SP) முன்னிலையில் விசாரணையைச் சரியாக நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். அவ்வாறு உத்தரவிட்ட பிறகும் வழக்கு விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இன்றி தொய்வு நிலையே நீடித்தது. முன்னாள் விசாரணை அதிகாரி திட்டமிட்டே பல முக்கியமான உண்மைகளையும் ஆவணங்களையும் மறைத்துள்ளார். என் மகள் இறந்த அந்த கடைசி நாளில் நடந்த நிகழ்வுகள், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள், மருந்து எங்கு வாங்கப்பட்டது, சம்பவத்தின் போது உடன் இருந்தவர்கள் யார் போன்ற முக்கியக் கோணங்களில் முறையான விசாரணை நடத்தப்படாமலேயே உள்ளது. இதைத் தொடர்ந்து, நான் தேசிய மகளிர் ஆணையத்திடம் புகார் மனு அளித்திருந்தேன். எனது புகாரின் மீது நடவடிக்கை எடுத்த தேசிய மகளிர் ஆணையம், வழக்கினை முழுமையாக விசாரித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு சென்னை தலைமை டிஜிபி (DGP) அலுவலகத்திற்கும், திருப்பூர் எஸ்பி (SP) அலுவலகத்திற்கும், அவிநாசி டிஎஸ்பி (DSP) அலுவலகத்திற்கும் உத்தரவிட்டுள்ளது. முந்தைய ஆட்சிக் காலத்திலும் இந்த வழக்கு விசாரணை முறையாகக் கண்டுகொள்ளப்படவில்லை. பண பலமும் அரசியல் பலமும் ஒரு வழக்கின் உண்மையைச் சிதைத்துவிடக் கூடாது. குற்றவாளிகள் தப்பிவிடக் கூடாது மற்றும் மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என்பதே எனது ஒரே கோரிக்கை. எனவே, பெண்களின் ஆதரவுக் குரலாகத் திகழும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் நேரடிக் கண்காணிப்பிற்கு இந்த விஷயத்தைக் கொண்டு சென்று, என் மகளுக்குத் தாய்மாமனாக இருந்து உரிய மறுவிசாரணைக்கு உத்தரவிட்டு, நியாயமான நீதியைப் பெற்றுத்தர வேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்." என்றார்.