திருப்பூர்: சனி, ஞாயிறு விடுமுறையை முடித்துவிட்டு திங்கட்கிழமை பள்ளிக்கு செல்ல காத்திருக்கும் திருப்பூர் மாணவ மாணவிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. நாளை திங்கட்கிழமை திருப்பூரில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினம் திங்கட்கிழமை அரசு நிகழ்வாக அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் தீரன் சின்னப்பிள்ளை மழையின் சிலைக்கும் உருவப்படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
இந்த நிலையில் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் அதனுடன் இயங்கும் மதுக்கூடங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அனைத்து வகையான அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், பழையக்கோட்டை கிராமம், மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் பிறந்து, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளினை முன்னிட்டு எதிர்வரும் 03.08.2026 (ஆடி-18) திங்கட்கிழமை அன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது. இவ்விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் 22.08.2026 சனிக்கிழமை அன்று பணிநாளாக அறிவிக்கப்படுகிறது. பள்ளி கல்லூரிகளில் ஏற்கனவே தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தால் இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது எனவும், தேர்வுகள் முன் கூட்டி அறிவித்தபடி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலாவணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instruments Act 1881)ன் கீழ் வராது என்பதால், இந்த உள்ளூர் விடுமுறை வங்கிகளுக்குப் பொருந்தாது. உள்ளூர் விடுமுறை நாளான 03.08.2026 திங்கட்கிழமை அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு திருப்பூர் மாவட்டத்திலுள்ள கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்பட வேண்டியது எனவும் உத்தரவிடப்படுகிறது." என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாராணவரே உத்தரவிட்டுள்ளார்.