திருப்பூர்: திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இந்த இடைத்தேர்தலில் பெரியதாக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வேலை செய்யவில்லை என்றும், அதிமுகவை வெற்றிப்பெற வைப்பதற்காகவே வேலை செய்யாமல் இருக்கிறார் என்றும் அமைச்சர் அருண்ராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
தாராபுரத்தில் தமிழக வெற்றிக் கழத்தின் வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். மேலும் அவர் பேசியதாவது, "இந்தியாவில் அதிக மக்கள் செல்வாக்கை பெற்ற ஒரே தலைவர் முதலமைச்சர் விஜய் தான். தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டத்திற்கு வரும் மக்களின் எண்ணிக்கையை பார்த்து எதிர்க்கட்சிகள் மிரண்டு போயுள்ளன.
திரைப்பட நகைச்சுவை காட்சியில் வருவதைப் போல, எதிர்க்கட்சியினர் ஜோசியம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழக வெற்றி கழகத்தின் பலத்தை கண்டு மிரண்டு போன அவர்கள்.. துபாய்க்கு போய் தொழில் செய்து கொள்ளலாமா? அல்லது இங்கேயே எங்காவது ஓரமாக இருந்து கொள்ளலாமா என்று ஜோசியம் பார்க்கிறார்கள். ஜோசியம் பார்த்தாலும் சரி, சகுனம் பார்த்தாலும் சரி, தமிழக வெற்றி கழகம் இருக்கும் வரை அவர்கள் நிரந்தரமாக எதிர்க்கட்சி வரிசையில் தான் இருப்பார்கள். கடந்த சட்டமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் உள்ள 61 இடங்களில் மொத்தம் 28 இடங்களில் ஜெபித்து நாங்கள் பெரும்பான்மையை பெற்று இருக்கிறோம். கொங்கு மண்டலம் தமிழக வெற்றிக் கழகத்தின் கோட்டை என்பதை மக்கள் நிரூபித்திருக்கிறார்கள். ஆனால், எங்களை வீழ்த்த அதிமுகவும்-திமுகவும் சேர்ந்து தீவிரமாக முயற்சிக்கிறார்கள். குறிப்பாக, இடைத்தேர்தலில் தங்களுக்குள் பேசிக்கொண்டு செயல்படுகிறார்கள். மதுராந்தகம் திமுகவுக்கும், தாராபுரம் அதிமுகவும் என்று இரு கட்சிகளும் பேசி அவர்களுக்குள் பிரித்துக் கொண்டனர். தாராபுரம் திமுகவின் பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி. இவர் எப்படி வேலை செய்வார் என்று எல்லோருக்கும் தெரியும். அதிலும் இடைத்தேர்தல் என்று வந்து விட்டால்.. அவரது வேலையை அனைவருமே உற்று நோக்குவார்கள். இன்று அவர் இருக்கும் இடமே தெரியவில்லை. திமுக இருக்கும் இடமே சுத்தமாக தெரியவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பிரச்சாரத்துக்கு வந்து திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள் என்று சொல்லிவிட்டு போய்விட்டார். இவர்கள் மறைமுகமாக அதிமுகவுக்கு சப்போர்ட் செய்கிறார்கள். அதிமுகவை வெற்றிப்பெற வைக்கவே செந்தில் பாலாஜி அமைதியாக இருக்கிறார்" என்று விமர்சித்திருக்கிறார்.