திருப்பூர் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் அரிசி, ரூ.101 ரூபாய் நோட்டு வைத்து வழிபாடு! சிவன்மலை அதிசயம்

  • திருப்பூர்: தமிழ்நாட்டில் அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், சாமானிய மக்கள் கவலை அடைந்துள்ளனர். ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் குடும்ப பட்ஜெட் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரிசி விலை உயர்வும் கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற கோயிலில் நடந்துள்ள மாற்றம் பக்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அது என்ன தெரியுமா?

    Advertisement

    தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக அரிசி விலை கணிசமாக உயர்ந்துள்ளது. நெல் விளைச்சல் குறைவு, போதிய மழையின்மை, வெளி மாநிலங்களில் இருந்து வரும் நெல் வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் அரிசி விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கிறார்கள்..

    Advertisement

    சில அரிசி ரகங்களின் விலை கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.40 வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக பொன்னி, இட்லி அரிசி உள்ளிட்ட பல்வேறு ரகங்களின் விலை உயர்ந்திருப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சில ரக அரிசிகளின் விலை கிலோ ரூ.100 வரை செல்லக்கூடும் என்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர்.

    திருப்பூர் சம்பவம்

    இப்படிப்பட்ட சூழலில், திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஒரு வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது. இந்த கோயிலில் "ஆண்டவன் உத்தரவு பெட்டி" மிகவும் பிரசித்தி பெற்றது.

    பக்தர்களின் கனவில் முருகன் வந்து குறிப்பிட்ட பொருளை, இந்த பெட்டியில் வைத்து வழிபட வேண்டும் என சொல்வார். அதை கேட்டுவிட்டு பக்தர்களும், கோயில் பூசாரியிடம் இதனை சொல்வார்கள். பூசாரியும் அந்த பக்தர்கள் சொல்வது உண்மையா பொய்யா என்பதை பூ போட்டு பார்ப்பார்.

    Advertisement

    ஒருவேளை உண்மையாக இருந்தால் ஏற்கனவே வழிபட்டு வரும் பொருளை கண்ணாடி பேழையில் இருந்து எடுத்துவிட்டு பக்தர்கள் சொல்லும், புதிய பொருளை வைத்து வழிபடுவார்கள்.. இதற்குதான் "ஆண்டவன் உத்தரவு" என்று பெயர்.

    அந்த வகையில், தேற்போது ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 50 வயதான விவசாயி கணபதியின் கனவில் முருகப்பெருமான் தோன்றினாராம். அப்போது ஆண்டவன் உத்தரவு பெட்டியில் அரிசி மற்றும் ரூ.101 வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று முருகப்பெருமான் கேட்டுக்கொண்டதாக கணபதி பூரித்து சொல்கிறார்.

    கோரிக்கை நிறைவேற்றம்

    உடனே கோயில் நிர்வாகத்திடம் இதுகுறித்து விவசாயி கணபதி தெரிவித்துள்ளார். கோயில் நிர்வாகத்தினரும் வழக்கப்படி பூ போட்டு உத்தரவு பெற்று, ஏற்கெனவே பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை மாற்ற முடிவு செய்தனர். முன்பு அந்த பெட்டியில் 3 தேங்காய்கள் வைத்து வழிபாடு செய்யப்பட்டு வந்தது. ஆனால் இப்போது அந்த தேங்காய்கள் அகற்றப்பட்டு, அதற்கு பதிலாக அரிசி மற்றும் ரூ.101 வைக்கப்பட்டுள்ளன.

    Advertisement

    இதைத்தொடர்ந்து அரிசி மற்றும் ரூ.101 வைத்து சிறப்பு பூஜையும் நடத்தப்பட்டது. இதன் மூலம் விவசாயி கணபதியின் கனவில் வந்த கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    கோயிலின் மகிமை

    சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி தனிச்சிறப்பு பெற்றது. இந்த பெட்டியில் வைக்கப்படும் பொருட்கள் எதிர்காலத்தில் சமூகத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கடந்த காலங்களிலும் பக்தர்களின் கனவில் வந்த பொருட்கள் இந்த பெட்டியில் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டுள்ளன.

    தற்சமயம், தமிழகத்தில் அரிசி விளைச்சல் பாதிப்பு, அரிசி தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு என பல்வேறு பிரச்சினைகள் நிலவி வரும் நேரத்தில், ஆண்டவன் உத்தரவு பெட்டியில் அரிசி வைக்கப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

    Advertisement

    சிவன்மலை உத்தரவு பெட்டியில் எந்த பொருள் வைத்து பூஜை செய்யப்படுகிறதோ, அந்த பொருள் சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பார்கள்.. அந்தவகையில், தற்போதைய மாற்றத்தால் அரிசி விளைச்சல் அதிகரித்து, விலை குறையுமா? விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் நல்ல காலம் பிறக்குமா? என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது...!!!

    English Summary

    Tiruppur Sivanmalai Temple miracle.. Rice and Rs 101 Note Placed in Andavar Utharavu Petti