திருப்பூர்: திருப்பூர் அரசு அதிகாரிகளில் எத்தனையோ பேர் நேர்மையாக இருந்தாலும், ஒருசிலர் லஞ்சத்துக்கு ஆசைப்படுகிறார்கள்.. லஞ்சம் இல்லாத ஆட்சியை தருவோம், 3 மாதம் டைம் கொடுங்கள் என்று தவெக அமைச்சர்கள் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் உறுதி தந்துள்ளார்கள்.. அப்படியிருக்கும்போது, திருப்பூர் உட்பட தமிழகத்தின் பல இடங்களிலும் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கைதாகி வருகின்றனர். இந்த லஞ்ச சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளன.
ஊழலற்ற நேர்மையான ஆட்சி என்ற ஒற்றை முழக்கத்தை முன்வைத்து, மக்களிடம் வாக்கு கேட்டு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது தமிழக வெற்றிக் கழகம்...
ஆனால் புதிய அரசு அமைந்து சில நாட்களிலேயே அக்கட்சியின் நிர்வாகிகள் பல இடங்களில் வசூல் வேட்டையில் இறங்கிவிட்டதாக அடுக்கடுக்கான புகார்கள் எழத் தொடங்கிவிட்டன. இது பொதுமக்களிடமும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சர்ச்சைகளுக்கு எல்லாம் உச்சகட்டமாக, அரசு வழக்கறிஞர் பதவிக்கு 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் வாங்கிக்கொண்டுதான் ஆட்களை நியமிக்கிறார்கள் என்று தவெகவின் விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ஞானசௌந்தரியே பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் சென்னை ஹைகோர்டிலும் வாக்கு தொடர்ந்திருப்பது அவர்களது கட்சிக்குள்ளேயே புயலை கிளப்பியிருக்கிறது. சொந்தக் கட்சி நிர்வாகியே அரசுக்கு எதிராக நீதிமன்றம் சென்றிருப்பது புதிய ஆட்சிக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில், நேற்று ஒரே நாளில் தமிழகத்தின் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி வேட்டை நடத்தி, அதிகாரிகளைக் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். விழுப்புரம் அருகே உள்ள திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில், மருத்துவமனை கட்டுவதற்கான அனுமதி பெற காவியவேந்தன் என்பவர் விண்ணப்பித்திருந்தார். அங்கு இளநிலை உதவியாளராகப் பணிபுரியும் பாலமுருகன் என்பவர், இந்த அனுமதிக்கு 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டாராம். லஞ்சம் கொடுக்க விரும்பாத காவியவேந்தன், இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். அவர்களின் ஆலோசனையின்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை காவியவேந்தன் பாலமுருகனிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், பாலமுருகனை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்திருக்கிறார்கள். அதேபோல திருப்பூரிலும் ஒரு ஷாக் சம்பவம் நடந்துள்ளது. திருப்பூர் அருகே உள்ள தொட்டிபாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில், பொறுப்பு கிராம நிர்வாக அலுவலராக நாசர் அப்துல் ரகுமான் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பட்டா பெயர் மாற்றுவதற்காக 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை அதிரடியாகப் பிடித்துப் பணத்தைப் பறிமுதல் செய்தனர். விசாரணக்குப் பின் அவர் கைது செய்யப்பட்டார். அதில ட்விஸ்ட் என்னவென்றால், இதே தொட்டிபாளையம் அலுவலகத்தில் கடந்த மாதம் வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காக 4000 ரூபாய் லஞ்சம் வாங்கிய விஏஓ ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார்... அவரது கைது நடவடிக்கை அரசு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இப்போது அதே அலுவலகத்தில் இன்னொரு விஏஓ லஞ்சம் வாங்கி கைதாகியிருப்பது திருப்பூர் பகுதியில் பெரிய அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது. நேர்மையான ஆட்சி தருவோம் என்று சொல்லிவிட்டு, ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே கட்சி நிர்வாகிகளின் வசூல் வேட்டைப் புகார்களும், அரசு அதிகாரிகளின் தொடர் லஞ்சக் கைதுகளும் தவெக அரசுக்கு மக்கள் மத்தியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகின்றன., லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த அதிரடி நடவடிக்கைகள் தொடருமா, அரசு இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது? என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!தவெக அரசில் லஞ்சம்?
விழுப்புரம் அரசு அதிகாரி
திருப்பூர் விஏஓ
அதே ஆபீஸ் - அதே லஞ்சம்