திருப்பூர்: திருப்பூர் உடுமலை இந்திரா நகர் பஸ் ஸ்டாண்டு அருகே ஒருநாள் விபத்து ஏற்பட்டு விட்டது.. இந்த விபத்தில் சிக்கி கொண்டவரை ஓடிப்போய் உதவியுள்ளார் பானுமதி.. அப்போது உதவி செய்யப் போய் மலர்ந்த பழக்கம், கள்ளக்காதலாக மாறியது.. கடைசியில் ஒரு பெண்ணின் உயிரையே பறித்துள்ள சம்பவமாகவும் முடிந்துள்ளது.. என்ன நடந்தது திருப்பூரில்?
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ளது பாலப்பம்பட்டி.. இங்கு வசித்து வருபவர் பானுமதி.. 45 வயதாகிறது.. இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி... தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த பானுமதி, தனது மகள் பிரியங்காவுடன் தனியாக வசித்து வந்தார்.
குடும்பச் சூழ்நிலை காரணமாக இந்திரா நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஸ்பின்னிங் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்... ஒருநாள் பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக இந்திரா நகர் பஸ் நிறுத்தத்தில் பானுமதி காத்து நின்றார். அப்போது அவரது கண் முன்னேயே நடந்த ஒரு விபத்தில், ஆனைமலையைச் சேர்ந்த பிரபாகரன் (39) என்பவர் படுகாயமடைந்து கிடந்தார். மனிதநேயத்துடன் ஓடிச் சென்று அவரை மீட்ட பானுமதி, உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்த்துப் பராமரித்தார். மனைவியால் கைவிடப்பட்டுத் தனியாக வசித்து வந்த பிரபாகரன், உடுமலையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். மருத்துவமனையில் தொடங்கிய இந்த அறிமுகம் நாளடைவில் நெருக்கமாகி, இருவரும் கணவன் - மனைவி போல வாழத் தொடங்கினர். பானுமதியின் வீட்டுத் தேவைகளுக்கும் பிரபாகரன் அடிக்கடி பண உதவியும் செய்து வந்துள்ளார். இதனிடையே பானுமதி தனது மகள் பிரியங்காவிற்கு அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தார். மகளுக்கு திருமணம் முடிந்த பிறகும் பிரபாகரன் அடிக்கடி பானுமதியின் வீட்டிற்கு வந்து உல்லாசமாக இருந்துவிட்டுச் சென்றுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டபோது, இதைப் பார்த்த பானுமதியின் மருமகன் கடுமையாக எச்சரித்து, பிரபாகரனுடனான தொடர்பை உடனடியாகத் துண்டிக்குமாறு கூறியுள்ளார். மருமகனின் எச்சரிக்கைக்கு பிறகு பிரபாகரனுடன் பேசுவதை பானுமதி தவிர்க்கத் தொடங்கினார். ஆனால் ஆத்திரமடைந்த பிரபாகரன், தான் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்டு தொடர்ந்து போனில் மிரட்டி வற்புறுத்தியுள்ளார். பிரபாகரனின் தொல்லை தாங்க முடியாமல் பானுமதி உடுமலை போலீஸ் ஸ்டேஷனில் புகார் தரவும், இந்த வழக்கை பதிவு செய்த போலீசார் பிரபாகரனை ஜெயிலில் அடைத்தனர். ஜெயிலிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த பிரபாகரன், பழனியில் கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளார். தன் மீதான வழக்கைத் திரும்பப் பெறுமாறு கடந்த ஒரு வாரமாக பானுமதியை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் பானுமதி அவரது போன் அழைப்புகளை எடுக்கவே இல்லை. இதனால் ஆத்திரத்தின் எல்லைக்கே சென்றுள்ளார் பிரபாகரன். கடந்த 6-ம் தேதி இரவு 10.30 மணியளவில் பாலப்பம்பட்டியில் உள்ள பானுமதியின் வீட்டுக்கு பிரபாகரன் நேரில் சென்றுள்ளார். அப்போது பானுமதி தனது உறவினரான பொள்ளாச்சியை மயில்சாமி (65) என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார். பிரபாகரன் வீட்டிற்குள் புகுந்ததுமே, தன் மீது போட்ட வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், பானுமதியின் பெயரில் தனக்கு ஒரு SIM கார்டு வாங்கித் தர வேண்டும் என்றும் வற்புறுத்தி தகராறு செய்துள்ளார். வழக்கை எல்லாம் வாபஸ் வாங்க முடியாது என பானுமதி திட்டவட்டமாக சொல்லவும், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. ஆத்திரமடைந்த பிரபாகரன், வீட்டில் இருந்த மண்வெட்டியை எடுத்து பானுமதியின் தலையில் சரமாரியாக வெட்டினார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்து தடுக்க முயன்ற மயில்சாமியை, அருகில் கிடந்த கல்லை எடுத்து தாக்கினார். இதில் மயில்சாமி நிலைகுலைந்து கீழே விழ, பிரபாகரன் தொடர்ந்து பானுமதியை மண்வெட்டியால் தாக்கியுள்ளார். ரத்தம் அதிகளவில் வெளியேறியதில் பானுமதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது, பானுமதியின் உடலருகே, எந்தவிதமான டென்ஷனும் இல்லாமல் கையில் மண்வெட்டியுடன் பிரபாகரன் உட்கார்ந்திருந்தாராம்.. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக உடுமலை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பானுமதியின் உடலை கைப்பற்றிப் போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலையில் காயமடைந்த மயில்சாமியை மீட்டு சிகிச்சைக்காகவும் சேர்த்தனர். பானுமதியைக் கொன்றுவிட்டு அதே இடத்தில் உட்கார்ந்திருந்த பிரபாகரனை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து படுகாயமடைந்த மயில்சாமி அளித்த புகாரின் பேரில் உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. விபத்தில் உதவி செய்த இடத்தில் மலர்ந்த கள்ளக்காதல், இறுதியில் கொடூர கொலையில் முடிந்தது உடுமலையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது!...!!திருப்பூர் உடுமலை
விபத்தில் மலர்ந்த காதல்
பானுமதிக்கு கள்ளக்காதலன் தந்த டார்ச்சர்
கையில் மண்வெட்டி
உடுமலை பரபரப்பு