திருப்பூர்: தாராபுரத்தில் சத்யபாமாவை ஆதரித்து விஜய் பிரசாரம் செய்தார். அப்போது ஒரு பக்கம் விஜய் பேசிக்கொண்டு இருக்கும் போதே தொண்டர்கள் கலைந்து செல்ல தொடங்கினர். காலையில் இருந்தே காத்துக் கிடந்தும் வழக்கமான உற்சாகத்துடன் விஜய் பேசாததால், அப்செட் ஆன தவெகவினர், விஜய் பேசும் போதே சாரை சாரையாக கலந்து செல்வதை அங்கிருந்த "ஒன்இந்தியாதமிழ்" குழுவால் காண முடிந்தது.
தாராபுரத்தில் இன்று தவெக பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தவெக தலைவரும், முதல்வருமான விஜய் பங்கேற்று பேசினார். பிரசார திடலில் விஜய் பிற்பகல் 3 மணிக்கு வந்து உரை நிகழ்த்துவார் என்று தவெக தலைமை நேற்று அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் விஜய் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தாமதாகவே பிரசார திடலுக்கு வந்து சேர்ந்தார்.
அதன்பிறகு வேட்பாளர் சத்யபமா, தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அருண் ராஜ் ஆகியோர் பேசிய பிறகு விஜய் தனது உரையை தொடங்கினார். விஜய் பேச்சு இன்று வழக்கத்திற்கு மாறாக உற்சாகம் குறைந்து காணப்பட்டது. பிரசார கூட்டங்களில் வழக்கமாக திமுகவை கடுமையாக விமர்சித்து பேசி வந்த விஜய் இன்றைய கூட்டத்தில் அதிமுகவையும் கடுமையாக விமர்சித்தார். அதிமுக பெயரை குறிப்பிடாமல் "மற்றும் பலர்" என்றே விமர்சித்தாலும் முந்தைய கூட்டங்களை விட அதிகமாக இன்று அதிமுகவை விமர்சித்து பேசினார். அதேபோல, ஸ்டாலின் பெயரை அதிகம் உச்சரிக்காமல் விஜய் பேசினார். எப்போதும் போல பாஜகவை பற்றி விஜய் விமர்சனமே வைக்கவில்லை. ஒருபக்கம் விஜய் பேசிக்கொண்டு இருக்கும் போதே நிறைவடையும் தருவாயில், தொண்டர்களும் கலைந்து செல்ல தொடங்கினர். காலையில் இருந்தே காத்துக் கிடந்தும் வழக்கமான உற்சாகத்துடன் விஜய் பேசாததால், அப்செட் ஆன தவெகவினர், விஜய் பேசும் போதே சாரை சாரையாக கலந்து செல்வதை காண முடிந்தது. இன்னொரு பக்கம் முதல்வர் விஜய்யை வரவேற்க வைத்து இருந்த வாழை தார்கள், கரும்புகளையும் தவெகவினர் போட்டி போட்டுக்கொண்டு தூக்கி சென்றதையும் பார்க்க முடிந்தது. ஒன்இந்தியாதமிழ் குழு அங்கு இருந்த நிலையில், இதை படம் பிடித்தது. இதுகுறித்து ஒன்இந்தியாதமிழ் குழு அவர்களிடமே கேட்டது. கூட்டத்தினர் நம்மிடம் பேசுகையில், மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் திரைகளில் காட்சிகள் கட் ஆகிவிட்டது. தூரத்திலிருந்து விஜய்யை பார்ப்பதை விட வீட்டுக்கு போய் யூடியூப்பிலேயே பார்த்துக் கொள்ளலாம் என்று கிளம்பிவிட்டோம் என்றனர். உண்மையான பாசத்தோடு விஜய் கிளம்பும்வரை நின்றிருக்காமல், பார்க்க முடியவில்லை என்பதற்காகவே கலைந்து சென்றதை பார்த்தபோது, திரையில் பார்த்தவரை தரையில் பார்க்க வந்ததுதான் அந்த கூட்டம் என புரிந்து கொள்ள முடிந்தது.