PM Candidate: விஜய் இதை செய்துட்டு! பிரதமர் இல்லை! அமெரிக்க அதிபராகட்டுமே! அன்பில் மகேஷ் அட்டாக்

  • திருச்சி: முதலமைச்சர் விஜய் தமிழகத்தில் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு, இந்தியாவின் பிரதமராகவோ, அமெரிக்க ஜனாதிபதியாகவோ ஆகட்டுமே தவறில்லயே என முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விமர்சித்துள்ளார்.

    Advertisement

    திருச்சியில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தந்தை அன்பில் பொய்யாமொழியின் 27-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

    Advertisement

    முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: சட்டமன்றம் சட்டமன்றமாக இல்லாமல் சண்டை மன்றமாக உள்ளது.

    மக்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும். முதலமைச்சர், மக்கள் அன்புடனும் நம்பிக்கையுடனும் ஆட்சிப் பொறுப்பை வழங்கியதாக கூறுகிறார். அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

    எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு "டூ த பாயிண்ட்" பதில் அளிக்காமல், கேள்வியை திசைதிருப்பும் வகையில் ஆளுங்கட்சியினர் பதில் அளிப்பது சரியல்ல.

    Advertisement

    புதிய அமைச்சர்கள் சட்டமன்றத்திற்கு வந்துள்ளதால் ஆரம்பத்தில் அனுபவக் குறைபாடு இருக்கலாம். ஆனால் எத்தனை நாட்களுக்கு இந்த அனுபவக் குறைபாடு தொடரும் என்ற கேள்வி எழுகிறது.

    மானியக் கோரிக்கைகளில் முதலில் துறை சார்ந்த சாதக, பாதகங்கள் குறித்து விவாதம் நடத்தி, அதன்பிறகே புதிய அறிவிப்புகளை வெளியிட வேண்டும். ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்புகள் முறையாக செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பது அடுத்தகட்ட விவாதமாக இருக்க வேண்டும்.

    நேபாளத்தில் ஏற்பட்டுள்ள துயர சம்பவம் உள்ளிட்ட மக்கள் உயிர் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும்போது, அரசு தரப்பினர் எடுத்துள்ள நடவடிக்கைகளை தெளிவாக விளக்க வேண்டும்.

    Advertisement

    ஒவ்வொரு துறைக்கும் அந்தந்த துறை அமைச்சர்களே பதில் அளிப்பது பொருத்தமானது. துறை சார்ந்த செயலாளர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் இருப்பதால், சம்பந்தப்பட்ட அமைச்சர் அளிக்கும் பதிலுக்கே நம்பகத்தன்மை அதிகமாக இருக்கும்.

    மேகதாது அணை விவகாரத்தில் அமைச்சர்கள் வெவ்வேறு கருத்துகளை தெரிவிப்பதால் டெல்டா விவசாயிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சரின் நிலைப்பாடு என்ன என்பது தெளிவாக இருக்க வேண்டும்.

    மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவில் அனைத்து கட்சிகளும் ஒன்றாக நிற்கும் நிலையில், தமிழகத்திலும் மாநில உரிமையை காக்க அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.

    PM SHRI/PM-SHRI திட்டம் தொடர்பாக தமிழகத்திற்கு வர வேண்டிய சுமார் ₹5,109 கோடி நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.

    Advertisement

    இந்த நிதி கிடைக்காததால் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவதாகவும், சுமார் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் சம்பளம் உள்ளிட்ட விஷயங்களில் பாதிப்பு ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

    PM SHRI நிதி தொடர்பாக ஒன்றிய அரசிடம் தாம் நேரடியாக பேசியதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அப்போதைய ஒன்றிய அமைச்சரை சந்தித்ததாகவும், ராகுல் காந்தியிடமும் இதன் பாதிப்புகளை எடுத்துரைத்ததாகவும் கூறினார்.

    பட்டியலின மக்களுக்கு புதிய அங்கீகாரமும், புதிய திட்டங்களும் கிடைக்க வேண்டும். வன்னியரசு முன்பு பேசிய கருத்துகளுக்கும் தற்போது சட்டமன்றத்தில் அவர் பேசும் கருத்துகளுக்கும் வித்தியாசம் இருப்பது வருத்தமளிக்கிறது என்றார்.

    Advertisement

    லஞ்சம் தொடர்பாக அமைச்சர் முன்பு தெரிவித்த கருத்தை பின்னர் மாற்றிப் பேசியதாக குற்றம்சாட்டிய அவர், சட்டமன்றத்தில் கூறப்படும் கருத்துகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும், அவைக்குறிப்பில் இடம்பெற்றுள்ள கருத்தை நிரூபிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். முதலில் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான பொறுப்புகளை நிறைவேற்றிவிட்டு, அதன் பிறகு இந்திய பிரதமர் அல்லது அமெரிக்க அதிபர் கனவு பற்றி பேசலாம் என விமர்சித்தார்.

    பெண்களுக்கு வழங்குவதாக கூறிய ₹2,500 மகளிர் உரிமைத்தொகை, படித்த இளைஞர்களுக்கு வழங்குவதாக கூறிய ₹4,000, மீனவர்களுக்கு வழங்குவதாக கூறிய ₹2,000 இடைக்கால நிதி உள்ளிட்ட வாக்குறுதிகள் என்ன ஆனது என கேள்வி எழுப்பினார்.

    ஆறு சிலிண்டர்கள் இலவசம் என கூறிவிட்டு தற்போது மூன்று சிலிண்டர்கள் என மாற்றியுள்ளதாகவும், இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகளிலும் அரசு தெளிவான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

    English Summary

    Ex Minister Anbul Mahesh criticises CM Vijay that he should first fulfil his promises for the tamil nadu people and then he can have dream of Prime Minister of India or President of America.