திருச்சி: திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு முதல்வர் விஜய் நன்றி தெரிவிக்க நாளை வரும் சூழலில், அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே விராலிமலை முருகன் கோயில் விழாவில் அமைச்சர் பர்வேஸ் உடன் விஜயபாஸ்கர் இணைந்து பங்கேற்றார். இதனால் விஜய் மற்றும் விஜயபாஸ்கர் சந்திப்பு நடக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நடந்து முடிந்த 2026 சட்டசபை தேர்தலில் திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் ஜோசப் விஜய், நாளை வாக்காளர்களுக்கு நேரில் நன்றி தெரிவிப்பதற்காகத் திருச்சிக்கு வரவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை தவெகவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். பொதுக்கூட்டம் மாடலில் இந்த நன்றி கூறும் நிகழ்ச்சி நடக்கவுள்ளது.
முதல்வர் விஜய்யின் இந்தத் திருச்சி வருகை, ஒருபுறம் தவெக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், மறுபுறம் புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் மாபெரும் விவாத புயலை கிளப்பியுள்ளது. அதற்கு முக்கியக் காரணம் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், நாளை முதல்வர் விஜய்யை நேரில் சந்திக்கக்கூடும் என வெளியாகியுள்ள தகவல்கள் தான். புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவின் அசைக்க முடியாத சக்தியாகக் கருதப்படும் விஜயபாஸ்கர், கடந்த சில நாட்களாகவே அதிமுக தலைமை மற்றும் எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான அதிருப்தியில் இருந்து வருகிறார். அவர் தவெக-வில் இணையப் போகிறார் என்ற செய்திகள் ஏற்கனவே இறக்கை கட்டிப் பறக்கின்றன. நேற்று புதுக்கோட்டை விராலிமலை முருகன் கோயில் வைகாசி விசாகத் தேரோட்ட விழாவில், அமைச்சர் முகமது பர்வேஸ் உடன் இணைந்து விஜயபாஸ்கர் வடம் பிடித்துத் தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சருடன் அவர் காட்டிய அசாதாரண நெருக்கம், அவர் அதிமுக-வை விட்டு வெளியேறுவது உறுதி என்ற கணிப்பை பலப்படுத்தியது. ஏற்கனவே தென் மாவட்ட மற்றும் டெல்டா பகுதி அதிமுக முக்கியப் புள்ளிகள் பலரும் தவெக மற்றும் திமுகவை நோக்கிப் காய்களை நகர்த்தி வருகின்றனர். அதில் விஜயபாஸ்கர் தவெக-வை நோக்கி நகர்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. நாளை திருச்சியில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தால், அது 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய மிகப்பெரிய அரசியல் திருப்பமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வென்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். விரைவில் இடைத்தேர்தல் வரவுள்ள சூழலில், தனது அரசியல் பலத்தை நிரூபிக்கவும், தொகுதி மக்களுக்கு நன்றி கூறவும் விஜய் நாளை நேரடியாகத் திருச்சிக்கு வருகிறார். இதன் காரணமாகவே பெரம்பூரை விடவும் முதலில் திருச்சி கிழக்கு தொகுதிக்கு விஜய் நன்றி தெரிவிக்க வருகிறார். இந்த முக்கியத்துவம் வாய்ந்த பயணத்தின் போதே, அதிமுக-வின் முன்னாள் டாப் அமைச்சரான விஜயபாஸ்கர் அவரைச் சந்திக்க முயல்வது, தமிழக அரசியல் களத்தில் அடுத்த அதிரடி மாற்றத்திற்கான சமிக்ஞையாகப் பார்க்கப்படுகிறது.