பயிர்க் கடன் தள்ளுபடி.. விவசாயிகளை ஏமாற்றிய விஜய்! திருச்சியில் விடாமல் போராடும் விவசாய அமைப்புகள்

  • திருச்சி: கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திருச்சி சமயபுரம் அருகே 50க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் இணைந்து காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளன. தமிழகம் முழுவதிலும் இருந்து 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படததால், போராட்டம் தொடரும் என விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன.

    Advertisement

    கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதல்வர் விஜய் தேர்தல் பிரசாரத்தின் போது வாக்குறுதி அளித்தார். ஆனால், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின்னர், அந்த வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

    Advertisement

    தற்போது 75 ஆயிரம் ரூபாய் வரையிலான பயிர்க்கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளதூ. இந்நிலையில், முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இவ்விவகாரத்தில் திடீர் திருப்பமாக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதியின்படி அனைத்து பயிர்க் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் திருச்சி சமயபுரம் சர்வீஸ் ரோடு அருகே காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விவசாய அமைப்புகள் அறிவித்திருந்தன. நேற்று போராட்டத்திற்காக விவசாயிகள் அமருவதற்கு பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.

    Advertisement

    இதையடுத்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவர் ஈசன் முருகசாமி தலைமையில் விவசாய சங்க நிர்வாகிகள், திருச்சி மாவட்ட எஸ்பி டோங்க்ரே பிரவீன் உமேஷை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் போராட்டத்திற்கு காவல்துறையின் அனுமதி கிடைக்கவில்லை. இதனையடுத்து தனியாருக்கு சொந்தமான இடத்தில், போலீஸ் அனுமதி இல்லாவிட்டாலும் திட்டமிட்டபடி காத்திருப்பு போராட்டம் தொடங்கும் என விவசாய சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    அதன்படி, திருச்சி சமயபுரம் சர்வீஸ் ரோடு அருகே நேற்று காலை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் சார்பில் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தைத் தொடங்கினர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றனர். வெயிலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள சிலர் தலையில் பனை ஓலைகளை வைத்துக்கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    Advertisement

    போராட்டத்தில் நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இருந்து விவசாய சங்கங்களின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், விவசாயிகள் என 500-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். இதற்கிடையே நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க நிர்வாகிகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    வேளாண்துறை அமைச்சர் வினோத், கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ், அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் அமைச்சர்களிடம் எடுத்துரைத்தனர். ஆனால் பேச்சுவார்த்தையில் எந்தவிதமான உடன்பாடும் ஏற்படவில்லை. இதையடுத்து, தங்களது கோரிக்கைகள் ஏற்கப்படாததால் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    அதன்படி போராட்டம் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், திருச்சி போராட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் நேற்று முன்தினம் இரவே புறப்பட்டனர். அவர்களை போலீசார் பல்வேறு இடங்களில் தடுத்து நிறுத்தியதாக விவசாய சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன. தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் மேற்கு ஊராட்சி தோழகிரிபட்டி கிராமத்தில் இருந்து திருச்சிக்கு புறப்பட்ட சுமார் 50 விவசாயிகளை போலீசார் தடுத்து, வீட்டுக்காவலில் வைத்ததாக கூறப்படுகிறது.

    அதேபோல், மயிலாடுதுறை மாவட்டம் மாப்படுகையை சேர்ந்த இயற்கை விவசாயிகள் சங்க தலைவர் ராமலிங்கம், ராஜேந்திரன் உள்ளிட்ட விவசாய சங்க நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோரை நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் அதிகாலை 1.30 மணி வரை அவரவர் வீடுகளில் போலீசார் தடுத்து வைத்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டியுளனர். . அதிகாலை போலீசார் அங்கிருந்து சென்ற பிறகு, அவர்கள் திருச்சி போராட்டத்தில் பங்கேற்றனர்.

    Advertisement

    இதுமட்டுமல்லாமல், நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தலைஞாயிறில் கடைமடை விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கமல்ராம், பனங்குடியை சேர்ந்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் விஜயராஜ், செயலாளர் சக்திவேல் ஆகியோரும் அவரவர் வீடுகளில் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்பதற்கு பதிலாக அவர்களை போராட்டத்திற்கு செல்லவிடாமல் தடுப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    English Summary

    Over 500 farmers begin an indefinite protest in Trichy demanding complete crop loan waiver and fulfilment of Vijay’s election promise.