திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு


  • திருச்சி: தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர், முதன்முறையாக இன்று (ஜூன் 1) திருச்சிக்கு வருகை தருகிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய். அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நேரில் நன்றி தெரிவிப்பதற்காக வருகை தருகிறார்.

    Advertisement

    இந்த நிகழ்ச்சியில் க்யூஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது என தவெக பொதுச் செயலாளரும், அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    வரலாற்றுத் திருப்புமுனைக்குப் பின் முதல் பொதுக்கூட்டம்

    சட்டசபை தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து கடந்த மே 10 ஆம் தேதி தமிழகத்தின் 13வது முதலமைச்சராகப் பொறுப்பேற்ற ஜோசப் விஜய், அதற்குப் பிறகு மக்கள் முன்னிலையில் உரையாற்றும் முதல் பொதுக்கூட்டம் இது என்பதால் ஒட்டுமொத்த தமிழக அரசியல் களமும் இந்த நிகழ்வை உற்று நோக்கி வருகிறது.

    நடந்து முடிந்த தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு விஜய் வெற்றி பெற்றிருந்தார். அதில், பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக நீடிக்க முடிவு செய்த அவர், திருச்சி கிழக்கு தொகுதி பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார். இந்தச் சூழலில், தன்னைத் தேர்ந்தெடுத்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு தனது நன்றிக்கடனைச் செலுத்தும் விதமாக இப்பயணம் அமைந்துள்ளது.

    Advertisement

    பயணத் திட்டம்

    இன்று மாலை 4 மணியளவில் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைகிறார் முதலமைச்சர் விஜய். விமான நிலையத்திலிருந்து விழா மேடைக்குச் செல்லும் வழியில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை வாகனத்தில் இருந்தவாறே சந்தித்து வாழ்த்துப் பெறுகிறார்.

    திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செயிண்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் மாலை பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    தவெக தலைமையின் முக்கிய கட்டுப்பாடுகள்

    முதலமைச்சரின் வருகையையொட்டி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு தலைமைக் கழகம் சில கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. முதலமைச்சரின் பாதுகாப்பு கான்வாயை பின்தொடர்ந்து கட்சித் தொண்டர்கள் யாரும் இருசக்கர அல்லது நான்கு சக்கர வாகனங்களில் வரக்கூடாது.

    Advertisement

    பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம் சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில் போக்குவரத்தைச் சீரமைக்க காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    க்யூ ஆர் கோடு அனுமதி

    கியூஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. கியூஆர் குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக, பாதுகாப்பு கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான கியூஆர் குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம்.

    Advertisement

    விழாக்கோலம் பூண்ட திருச்சி

    செயிண்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் பிரம்மாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று முடிந்துள்ளன. திருச்சி மாநகர காவல் ஆணையர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    திருச்சியின் அடையாளங்களான மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தேவாலயம் ஆகியவை இணையும் மையப் பகுதியில் இந்த நன்றி அறிவிப்பு கூட்டம் நடப்பதால், டெல்டா மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தினர் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

    English Summary

    Today (June 1) marks Chief Minister Joseph Vijay's first visit to Trichy since assuming office as the Chief Minister of Tamil Nadu. He is visiting to personally express his gratitude to the voters of the Trichy East constituency, from which he contested and won in the recently concluded Assembly elections.