திருச்செந்தூர் நிறைய மாறிடுச்சு.. இன்னும் கொஞ்ச நாள்ல பாருங்க! நல்லதே நடக்கும்! அமைச்சர் ரமேஷ் உறுதி

  • திருச்சி: திருச்செந்தூர் கோயிலில் தற்போது 70 முதல் 80 சதவீதம் வரை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அனைத்து மாற்றங்களையும் ஒரே நேரத்தில் கொண்டு வர முடியாது. தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு மீதமுள்ள பிரச்சனைகளும் தீர்க்கப்படும் என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார்.

    Advertisement

    திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், அமைச்சர்களும் அதிகாரிகளும் நேரடியாக மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

    Advertisement

    அதன்படி, இன்று ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்கோவில் பகுதிகளில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் அனைத்துத் துறை அரசு அதிகாரிகள், திருச்சி மாநகராட்சி மற்றும் வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

    அமைச்சர் ரமேஷ்

    ஸ்ரீரங்கம் கோயிலின் கிழக்கு கோபுர வாசல் திறப்பு குறித்து சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது. அந்தப் பணிகளில் சில தாமதம் ஏற்பட்டிருந்தது. தற்போது சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி பணிகளை விரைவுபடுத்தியுள்ளோம். மிக விரைவில் பணிகள் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும். தமிழகத்தில் உள்ள கோயில்களின் அடிப்படை வசதிகள், பக்தர்களுக்கான வசதிகள், திருப்பணிகள், பராமரிப்பின்றி உள்ள கோயில்கள், சேதமடைந்த மண்டபங்கள், கோபுரங்கள், திருக்குளங்கள் உள்ளிட்ட அனைத்தையும் மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    Advertisement

    அறநிலையத்துறை

    ஆன்மிகமும் தமிழும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. இதை கருத்தில் கொண்டு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். திருச்செந்தூர் கோயிலில் எந்த கட்டண உயர்வும் அமல்படுத்தப்படவில்லை. சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். ஏற்கனவே இருந்த நடைமுறைகள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.

    விஐபி தரிசனம்

    மக்களின் கருத்தின் அடிப்படையில்தான் இறுதி முடிவு எடுக்கப்படும். மக்கள் விரும்பவில்லை என்றால் அது கைவிடப்படும். மக்களின் விருப்பத்திற்கு மாறாக எந்த முடிவும் இந்த அரசு எடுக்காது. சில கோயில்களில் விஐபி தரிசனம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் எழுந்துள்ளது. அனைத்து கோயில்களிலும் விஐபி தரிசன முறையை ஒழுங்குபடுத்துவது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீரங்கம் கோவிலில் குறிப்பிட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    Advertisement

    திருச்செந்தூர் கோயில்

    திருச்செந்தூர் கோயிலில் மாற்றம் இல்லை என்ற குற்றச்சாட்டை மறுக்கிறேன். தற்போது 70 முதல் 80 சதவீதம் வரை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அனைத்து மாற்றங்களையும் ஒரே நேரத்தில் கொண்டு வர முடியாது. தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு மீதமுள்ள பிரச்சினைகளும் தீர்க்கப்படும். யாத்திரிகா நிவாஸ் முன்பதிவுக்காக போலி இணையதளங்கள் மூலம் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில், தானே நேரடியாக காவல்துறையில் புகார் அளித்ததன்பேரில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்.

    ஆன்லைன் முன்பதிவு

    இனி அதிகாரப்பூர்வ ஆன்லைன் முன்பதிவு இணையதளம் அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. மக்கள் அளிக்கும் மனுக்களுக்கு தேவையான நிதி குறித்து கேட்டபோது, பெரும்பாலான கோரிக்கைகள் மிகப்பெரிய நிதி தேவைப்படும் திட்டங்கள் அல்ல. குடிநீர், தெருவிளக்கு, கால்வாய் சீரமைப்பு, வேலைவாய்ப்பு, மருத்துவ வசதி, ஓய்வூதியம், உரிமைத்தொகை போன்ற அடிப்படை தேவைகளே அதிகம். இதற்கான நிதி அரசின் வழக்கமான திட்டங்களின் மூலமே ஒதுக்கப்பட்டு தீர்வு காணப்படும்.

    Advertisement

    பக்தர்களின் வசதி

    பல்வேறு கோயில்களில் நேரடியாகவும், ஊடகங்களுக்குத் தெரியாமலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றின் அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவை அனைத்தும் கட்டம் கட்டமாக அறிவிக்கப்படும். ஸ்ரீரங்கம் கோயிலில் வாகன நிறுத்த வசதி குறித்து, அதற்கான இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. பக்தர்களின் வசதிக்காக தேவையான திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும்." என்றார்.

    English Summary

    Minister Ramesh said Tiruchendur temple has improved by 70-80%, with remaining issues to be resolved through continued inspections.