திருச்சி: முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை சுற்றி ரூ.634 கோடி லஞ்சப் புகார் வழக்கு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அவர் எடுத்த முயற்சிக்கும் இப்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் சொன்ன அந்த முக்கியமான விஷயம் என்ன? இனி கே.என்.நேருவுக்கு என்ன நடக்கும்?
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக இருந்தவர் மூத்த தலைவர் கே.என்.நேரு. அப்போது இந்த துறையில் 2,538 பணியிடங்களுக்கு ஆட்கள் நியமனம் செய்யப்பட்டதில் ரூ.634 கோடி வரை லஞ்சம் பெறப்பட்டதாக புகார் எழுந்தது.
உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான நியமனங்களில் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்பியது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் ஐ.எஸ். இன்பதுரை உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த பிப்ரவரி 20ம் தேதி புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டது. இதனிடையே, தன்னுடைய தரப்பு விளக்கத்தை கேட்காமலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் கூறி கே.என்.நேரு மறுஆய்வு மனு தாக்கல் செய்தார். ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிரந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை ஹைகோர்ட், கடந்த அக்டோபர் 26ம் தேதி தள்ளுபடி செய்தது. இதையடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கே.என்.நேரு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு இன்று அதாவது நவம்பர் 2ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது கே.என்.நேரு சார்பில் அவரது தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதனை விசாரித்த நீதிபதிகள், கே.என்.நேரு சம்பந்தப்பட்ட துறைக்கு அமைச்சராக இருந்தவர் என்பதையும், இந்த முறைகேட்டின் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிவது முக்கியம் என்பதையும் சுட்டிக்காட்டினர். மேலும், இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவது அவசியம் என்று தெரிவித்த நீதிபதிகள், இப்போதுள்ள இந்த விவகாரத்தில் வேறு எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்றும் தெரிவித்து விட்டனர்.. பின்னர், கே.என்.நேரு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தனர். இதன் மூலம், கே.என்.நேரு மீதான புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்ய மறுத்துவிட்டது. இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், கே.என்.நேரு கைது செய்யப்பட வாய்ப்புள்ளதா? இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? கே.என்.நேருவிடம் விசாரணை நடத்தப்படுமா? கைது நடவடிக்கை இருக்குமா? என்றெல்லாம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.ஹைகோர்ட் - லஞ்ச ஒழிப்புத்துறை
சுப்ரீம்கோர்ட் அப்பீல் மனு
அடுத்து என்ன நடக்கும்?