Durai Vaiko: தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்விலும் திமுக தலையீடு! துரை வைகோ பகீர்

  • திருச்சி: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட சில இடங்களில் வேட்பாளர்களை நிறுத்த சொன்னதே திமுகதான். இதனால்தான் திமுக மீது காங்கிரஸ் தலைமைக்கு வெறுப்பு ஏற்பட்டது என மதிமுக திருச்சி எம்பி துரை வைகோ தெரிவித்துள்ளார்.

    Advertisement

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட மணிகண்டம் அருகே கே கள்ளிக்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூபாய் 17 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைக்கே திறந்து வைத்தார்.

    Advertisement

    தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பேசிய அவர் : மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, நேற்றே முடிந்துபோன விவகாரத்தை இன்று மீண்டும் கேள்வியாக எழுப்புவதால் அது தொடர் நிகழ்வாக மாறுகிறது , இதற்கு பத்திரிகை துறை நண்பர்கள்தான் காரணம் . நேற்றும் இதே கேள்விக்கு பதில் அளித்துள்ளேன்.

    1975 முதல் 1977 வரையிலான அவசரநிலை காலத்தில் அன்றைய காங்கிரஸ் அரசு, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தலைமையில் மிசா சட்டத்தை கொண்டு வந்ததாகவும், அந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் பல்வேறு கைது நடவடிக்கைகள், சித்திரவதைகள் மற்றும் உயிரிழப்புகள் நடைபெற்றன.

    Advertisement

    அரசியல் காரணங்களுக்காக மட்டுமின்றி, பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தியவர்கள் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களும் அந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். திராவிட இயக்கங்கள் மட்டுமின்றி, காங்கிரசுக்கு எதிராக செயல்பட்ட பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர்.

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மிசா சட்டத்தின் கீழ் முதலில் கைது செய்யப்பட்டவரும், கடைசியாக விடுதலை செய்யப்பட்டவரும் வைகோதான் என குறிப்பிட்டு, அன்றைய காலத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

    தற்போது பல்வேறு இயக்கங்களில் இருப்பவர்களும், தவெகவில் இருப்பவர்களும் கூட அன்றைய போராட்டங்களில் கைது செய்யப்பட்டவர்கள் . இந்த விவகாரத்தில் அரசியல் நாகரிகம் கருதி தனிமனித தாக்குதல்களில் ஈடுபட விரும்பவில்லை என்றும், சர்ச்சைக்கு இதன்மூலம் முற்றுப்புள்ளி வைக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

    Advertisement

    மாநில பிரச்சனைகள், நாட்டின் பிரச்சனைகள், மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் குறித்து கேள்விகள் கேட்க வேண்டும் என்றும், அரசியல் நாகரிகத்துடன் நடைபெற வேண்டும் என்பதே தனது விருப்பம் .

    முதலமைச்சர் ஜோசப் விஜய் பதவியேற்ற பிறகு தாம் சந்தித்து 12 கோரிக்கைகளை வழங்கியதாகவும், அதில் 9 கோரிக்கைகள் திருச்சி நாடாளுமன்ற தொகுதி தொடர்பானவை . மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., பல ஆண்டுகளுக்கு முன்பே சென்னைக்கு பதிலாக திருச்சியை இரண்டாம் தலைநகரமாக உருவாக்க வேண்டும் எனக் கூறியதை சுட்டிக்காட்டிய அவர், அந்த கனவை தற்போதைய முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

    Advertisement

    டெல்லி நிர்வாக தலைநகரமாகவும், மும்பை நிதி தலைநகரமாகவும் இருப்பதைப் போல, சென்னையை நிதி சார்ந்த மையமாகவும், திருச்சியை நிர்வாக தலைநகரமாகவும் உருவாக்கலாம்.

    திருச்சியை இரண்டாம் தலைநகரமாக அறிவித்தால் சென்னையின் மக்கள் தொகை நெரிசல், போக்குவரத்து நெரிசல் மற்றும் அதிகரித்து வரும் ரியல் எஸ்டேட் விலைகள் குறைய வாய்ப்புள்ளது.

    மத்திய தமிழகத்தின் புதுக்கோட்டை, தஞ்சாவூர், கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் இது மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தும் .

    கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கொங்கு மண்டலம் உள்ளிட்ட தொலைதூர பகுதிகளில் இருந்து பொதுமக்கள் முதலமைச்சர் அல்லது ஐஏஎஸ் அதிகாரிகளை சந்தித்து மனு அளிக்க சென்னைக்கு வருவதற்கு இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை ஆகிறது. திருச்சியில் நிர்வாக தலைநகரம் அமைந்தால் தமிழகத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் அதிகபட்சம் 3 முதல் 4 மணி நேரத்தில் திருச்சியை அடைய முடியும் என்றும், இதனால் பொதுமக்களின் நேரம் மற்றும் பணம் மிச்சமாகும் .

    Advertisement

    திருச்சியில் எச்ஏபிபி தொடர்பாக மாநில அரசுக்கு வந்துள்ள சுமார் 2,000 ஏக்கர் நிலம் இருப்பதாகவும், அங்கு தலைமைச் செயலகம் உள்ளிட்ட நிர்வாக அமைப்புகளை கொண்டு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து இணைப்புகள் திருச்சிக்கு இருப்பதால், இது சென்னைக்கும், திருச்சிக்கும், மத்திய தமிழகத்திற்கும், ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பயனளிக்கும் .

    சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய திட்டம் தொடர்பாக மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்து பேசிய அவர், அப்பகுதியில் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் இருப்பதாகவும், மீனவர் குடியிருப்புகள் அதிக அளவில் உள்ளது.

    மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் இயற்கை வளங்கள் பாதிக்கப்படக் கூடாது என்றும், மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் முதலமைச்சர் இதனை கவனத்தில் கொண்டு திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து பரிசீலிப்பார் என நம்புகிறேன் .

    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது அவசியம்தான் என்றாலும், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், அப்பகுதியில் உள்ள 13 முக்கிய நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் .

    மக்களின் எதிர்ப்பை கருத்தில் கொண்டு, அங்கு விமான நிலையம் அமைக்க மாட்டேன் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அளித்த வாக்குறுதியை காப்பாற்றியுள்ளார்.

    கடந்த 15 முதல் 20 ஆண்டுகளில் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களில் விமான நிலையங்களை நவீனப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்ற நிலையில், கடந்த ஆட்சிகளில் இதுபோன்ற வளர்ச்சி நடவடிக்கைகள் ஏன் மேற்கொள்ளப்படவில்லை ?.

    தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பாக கொண்டு வரப்பட்டுள்ள சட்ட திருத்தம் குறித்து பேசிய அவர், இது விவாதிக்க வேண்டிய முக்கியமான விஷயம் .

    தனியார் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு முன்பு 100 ஏக்கர் நிலம் தேவைப்பட்ட நிலையில், தற்போது சென்னையில் சுமார் 12 ஏக்கரும், பிற பகுதிகளில் 18 முதல் 25 ஏக்கர் வரையிலான நிலமும் போதுமானது என மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    புதிதாக தொடங்கப்பட உள்ள தனியார் பல்கலைக்கழகங்களுக்கு இந்த விதிமுறை பொருந்தும் என்றும், ஏற்கனவே இயங்கி வரும் கல்வி நிறுவனங்களுக்கு இதை மாற்றுவது வேறுபட்ட நடைமுறையாக இருக்கும் .

    அரசுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசுப் பள்ளி, கல்லூரிகள் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பிள்ளைகளுக்கு மிகப்பெரிய பாதுகாப்பாக இருப்பதால் அவை தொடர்ந்து அவசியம்.

    தனியார் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியால் ஏழை மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு மறுக்கப்படாத வகையில் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    மேலும் கோவில்பட்டியில் பேசிய துரை வைகோ , விசிக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட எல்லா கட்சிகளுக்கும் திமுக தலையீடு இருந்தது. காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில் அக்கட்சியின் சில வேட்பாளர்களை பொருத்தமட்டில் திமுக தீர்மானித்ததுதான். இவருக்கு கொடுங்க, அவருக்கு கொடுங்கன்னு காங்கிரஸை கட்டாயப்படுத்தினாங்க. இது போன்ற ஒரு விவகாரங்களால்தான் காங்கிரஸ் தலைமைக்கு திமுக மீது ஒரு வெறுப்பு வந்தது என துரை வைகோ தெரிவித்துள்ளார்.

    English Summary

    MDMK MP Durai Vaiko says that DMK selected candidates for Congress in last assembly election. this is the one of reason that Congress chief have averse on DMK.