திருச்சி: திருச்சி மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட பாடப்புத்தகங்களை, பள்ளியின் தலைமை ஆசிரியை ஒருவரே திரும்பப் பெற்று பழைய பேப்பர் கடையில் எடைக்கு விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... முதல் செமஸ்டர் முடிந்ததும் நடந்த இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தலைமை ஆசிரியை அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். புத்தகங்களை விற்பனை செய்ததற்கு அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா?
திருச்சி மாவட்டம், முசிறி அருகே தும்பலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 75-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி செலவைக் குறைக்கும் வகையில், அரசு சார்பில் இலவசமாக பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தும்பலம் பள்ளி மாணவர்களுக்கும் முதல் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டிருந்தன. இப்போது முதல் செமஸ்டர் முடிவடைந்துள்ளது. இதையடுத்து, 2ம் செமஸ்டருக்கான பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதனால், முதல் செமஸ்டருக்கான புத்தகங்களை மாணவர்கள் பயன்படுத்தி முடித்திருந்தனர். இப்படிப்பட்ட சூழலில், பள்ளியின் தலைமை ஆசிரியை மஞ்சுளா, மாணவர்களிடமிருந்து முதல் செமஸ்டருக்கான இலவச பாடப்புத்தகங்களைத் திரும்ப பெற்றுள்ளார். மாணவர்களுக்கு அரசு வழங்கிய புத்தகங்களை திரும்ப பெற்ற அவர், அவற்றை பழைய பேப்பர் வியாபாரியிடம் எடைக்கு விற்பனை செய்துள்ளதாக தெரிகிறது. பொதுவாக மாணவர்கள் ஒரு செமஸ்டருக்குரிய புத்தகங்களை பயன்படுத்தி முடித்த பிறகு, அவற்றைத் தங்களிடமே வைத்துக் கொள்வது வழக்கம்... ஆனால், இங்கு தலைமை ஆசிரியையே மாணவர்களிடமிருந்து புத்தகங்களை திரும்ப பெற்று, அதை மஞ்சுளா விற்றுவிட்டாராம்.. இந்த தகவல் விறுவிறுவென பரவியதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளிக்கே சென்று தலைமை ஆசிரியை மஞ்சுளாவிடம் விசாரித்துள்ளனர். அதற்கு தலைமை ஆசிரியை அளித்த விளக்கம் அதிகாரிகளை மேலும் அதிர வைத்துள்ளது.. அதாவது, பள்ளியில் நிறைய கொசுக்கள் உள்ளதாம்.. இதனால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயமும் அதிகமாக இருக்கிறதாம். அதனால்தான், கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுப்பதற்காகவே பழைய பாடப்புத்தகங்களை எடைக்கு விற்றதாக விளக்கம் அளித்துள்ளார். மாணவர்களுக்கு அரசு இலவசமாக வழங்கிய பாடப்புத்தகங்களை தலைமை ஆசிரியை திரும்பப் பெற்று விற்பனை செய்த சம்பவம் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட தலைமை ஆசிரியை மீது தொடக்கக் கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, இலவசமாக வழங்கப்பட்ட பாடப்புத்தகங்களை எடைக்கு விற்பனை செய்த தலைமை ஆசிரியை மஞ்சுளாவை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.,. டெங்கு பரவாமல் தடுப்பதற்காகவே புத்தகங்களை விற்பனை செய்ததாக அவர் அளித்த விளக்கம் இந்த சம்பவத்தில் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.முசிறி அரசு பள்ளி தலைமை ஆசிரியை
மஞ்சுளா சொன்ன காரணம்
டெங்கு காரணம்