திருச்சி: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பகல் நேர வெப்பநிலை இயல்பிலிருந்து 3 - 4°C வரை அதிகரித்து காணப்படும். நண்பகலில் அனல்காற்று வீசும். சூப்பர் எல் நினோ (Super El Niño) காரணமாக இதன் முதற்கட்ட தாக்கம் அக்டோபர் 15 வரை நீடிக்கக்கூடும். வளிமண்டலத்தில் நிலவும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக உள் மாவட்டங்களில் வெப்பச்சலன இடிமழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று 'டெல்டா வெதர்மேன்' ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
டெல்டா வெதர்மேன் மேலும் கூறுகையில், "இன்றும், நாளையும் மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பகலில் வெயில் சுட்டெரித்தாலும் மாலை, இரவு மற்றும் நள்ளிரவு நேரங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால், கடலோர மாவட்டங்கள் மற்றும் காவிரி டெல்டா கடலோரப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைக்கான வாய்ப்புத் தெரியவில்லை.
உள் மாவட்டங்களில் மழை பெய்யும்போது பலத்த இடி, மின்னல் இருக்கும். மழை இரவில் மட்டுமே பெய்யக்கூடும்; மாவட்டம் முழுவதும் பரவலாகப் பெய்யாது என்றாலும், பெய்யும் இடங்களில் 30 - 40 நிமிடங்கள் நன்றாகப் பெய்யும்" என்று குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் என்பது குறித்துத் தென்காசி தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து ராஜா கூறுகையில், "கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் இருந்து தென்மேற்கு பருவக்காற்று முற்றிலும் விலக வேண்டும். மேற்கிலிருந்து வீசிய காற்று முற்றிலும் மாறி, தரைமட்டத்திலும் வளிமண்டலத்தின் கீழ் அடுக்கிலும் வலுவான கிழக்கு அல்லது வடகிழக்கு திசைக்காற்று நிலையாக வீசத் தொடங்க வேண்டும். தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வேண்டும். மேலும் சென்னை எண்ணூர் முதல் உவரி வரையிலான கடலோரப் பகுதிகளில் 2.5 மி.மீ-க்கு மேல் மழை பதிவாக வேண்டும். குறிப்பாக எண்ணூர், மாமல்லபுரம், கடலூர், (வேதாரண்யம்), நாகப்பட்டினம், பாம்பன், தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து 2 நாட்கள் மழை பதிவாக வேண்டும். இந்த நிபந்தனைகள் அனைத்தும் பூர்த்தியடையும் பட்சத்தில், வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்" என்று கூறியுள்ளார்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்?