திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை அருகே காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் நிலையில் ஆடிப்பெருக்கையொட்டி மக்கள் குளிக்க ஷவர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆடிப்பெருக்கு- ஆடி மாதம் 18 ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்றைய தினம் ஆடிப்பெருக்கையொட்டி காவிரியில் நீராடும் பக்தர்கள் காவிரித் தாய்க்கு பூஜைகளை செய்து தங்களது திருமாங்கல்ய சரடை மாற்றிக் கொள்வார்கள்.
இந்த விழாவானது நீர் வளத்திற்கும் விவசாயத்திற்கும் நன்றி தெரிவிக்கும் நாளாகும். பொதுவாக ஆடிப்பெருக்கில் நல்ல மழை பெய்து ஆறுகளில் புது வெள்ளம் பெருகி ஓடி வரும். இந்த நன்னாளில் ஆறுகளை வணங்கி மக்கள் புனித நீராடுவார்கள். அது போல் விவசாயிகளும் புதுவெள்ள நீரை வணங்கி விவசாய பணிகளை தொடங்குவது வழக்கம். இதைத்தான் "ஆடிப்பட்டம் தேடி விதை" என்பார்கள். 18 படிகள் கொண்ட படித்துறையில் விரதம் இருந்து இறைவனை வணங்கினால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. பலர் காவிரியில் குளித்துவிட்டு பிறகு பூஜைகளில் ஈடுபடுவார்கள். இதற்காக படித்துறை இருக்கும் பகுதிகளில் எல்லாம் ஷவர் போன்ற அமைப்பு அந்தந்த மாநகராட்சி, நகராட்சி சார்பில் பொருத்தப்படும். மக்கள் ஆற்றுக்குள் இறங்கி அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க இவ்வாறு அமைக்கப்பட்ட ஷவர்களில் குளித்து காவிரி தாயை வணங்குவார்கள். அந்த வகையில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் ஷவர் அமைக்கப்பட்டது. ஆனால் காவிரியில் தண்ணீர் இல்லாமல் வறண்டு மணல் மேடுகள் காணப்பட்டன. எனினும் ஷவரில் வந்த குறைந்த நீரை கொண்டு மக்கள் குளித்து மகிழ்ந்தனர். பலர் பூஜை செய்ய காவிரி நீரை எடுக்க முடியாத அளவுக்கு வறண்டு கிடந்ததால் கிணற்று நீரை எடுத்து அபிஷேகம் செய்தனர். கடந்த மாதமே கர்நாடகா, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டிருந்தால் தற்போது காவிரியில் தண்ணீர் இருந்திருக்கும். ஆனால் கர்நாடகா தண்ணீர் திறக்காததால் இந்த ஆண்டு ஆடி 18 விழா களையிழந்து காணப்பட்டது.