திருச்சி: திருச்சி கிழக்கு மக்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசிய முதல்வரும் தவெக தலைவருமான விஜய், திமுக மற்றும் அதிமுகவை மிகக் கடுமையாகச் சாடினார். திமுகவை தீய சக்தி என விமர்சித்த அவர், அதிமுகவை தீர்ந்து போன சக்தி எனச் சாடினார். தான் முதல்வராவதைத் தடுக்க இருவரும் இணைந்து ஆட்சியை அமைக்க முயன்றதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
தவெக தலைவரும் முதல்வருமான விஜய் கடந்த தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இரு தொகுதிகளிலும் தவெக தலைவர் விஜய் வெற்றியைப் பெற்றார். சட்டப்படி ஒருவர் ஒரு தொகுதியில் மட்டுமே மக்கள் பிரதிநிதியாக இருக்க முடியும் என்பதால் திருச்சி கிழக்கு தொகுதியை அவர் ராஜினாமா செய்தார்.
இருப்பினும், தன்னை வெற்றி பெற வைத்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி சொல்லும் கூட்டத்திற்கு தவெக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு மக்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், அவர், திமுக மற்றும் அதிமுக கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க முயன்றதாகவும் கடைசிக் கட்டத்தில் இரு கட்சிகளும் இணைந்து பல்வேறு சதிகளைச் செய்ய முயன்றதாகவும் முதல்வரும் தவெக தலைவருமான விஜய் குற்றஞ்சாட்டினார். அவர் மேலும் பேசுகையில், "இந்த தீய சக்தியும் தீர்ந்து போன சக்தியும், அதான் திமுகவும் மற்றும் பலரும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டு, திருட்டுத்தனமாக யாருக்கும் தெரியாமல் ஒரு ஓரமாக உட்கார்ந்து பேரம் பேசி, கூட்டுச் சேர்ந்து ஆட்சி அமைக்கக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டனர். தவெக ஆட்சி அமைந்தால் அவர்களால் கொள்ளையடிக்க முடியாது. லஞ்சம் ஊழல் எல்லாம் இருக்காது. அதனால் தான் கூட்டணி அமைக்க முயன்றுள்ளனர். திமுக இப்போது வெறுமன தீய சக்தி மட்டுமில்லை. மக்களிடம் இருந்து ரொம்ப தூரம் போன தூரச் சக்தி, ஓர சக்தி, கோரச் சக்தி.. நீங்கள் எப்போது தீர்ந்து போன சக்தி உடன் ஆட்சி அமைக்க நினைத்தீர்களோ.. அப்போதே தூர்ந்துபோன சக்தியாகவும் மாறிவிட்டது. நீங்கள் எல்லாம் நம்மை பற்றி அவதூறு பேசலாமா அது நியாயமா.. இவ்வளவு பெரிய மக்கள் சக்தி இருக்கும்போது நமக்கு ஏன் பேர அரசியல். தேர்தல் அரசியலில் இவ்வளவு காலம் இருந்த சாதி, மதம், பணம் கொடுத்து வாக்குகள் வாங்குவதை உடைத்துள்ளோம். நாம் எது செய்தாலும் அரசியலமைப்பின்படியே செய்வோம். நமக்கு குதிரை பேரம் எல்லாம் தேவையில்லை.