பாலைவனமான காவிரி, கொள்ளிடம்.. குடிநீர் பஞ்சத்தை நோக்கி தமிழ்நாடு? ஒரு சொட்டு தண்ணீர் இல்லை

  • திருச்சி: தமிழ்நாட்டின் வாழ்வாதார மையமாக திகழும் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகள் போதிய நீர்வரத்தின்றி முற்றிலும் வறண்டு, பாலைவனம் போலக் காட்சியளிக்கின்றன. இதனால் திருச்சி மாநகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல மாவட்டங்களில் மிகக் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

    Advertisement

    10க்கும் மேற்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டங்கள் முடங்கும் நிலை

    காவிரியை மட்டுமே நம்பி திருச்சி மாவட்டம் பெருகமணி உள்ளிட்ட பல்வேறு ஆற்றங்கரைப் பகுதிகளில் பல குடிநீர் ஆதாரக் கிணறுகள் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளை மட்டுமே நம்பி, 10-க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட கூட்டுப் குடிநீர் திட்டங்கள் இங்கே செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    Advertisement

    குறிப்பாக, மணப்பாறை குடிநீர் திட்டம், ராமநாதபுரம் கூட்டுப் குடிநீர் திட்டம், ஜீயபுரம் அருகே உள்ள கீரனூர் குடிநீர் திட்டம், கம்பரசம்பேட்டை மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் குடிநீர் திட்டங்கள் அனைத்தும் காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளை முதன்மையாகக் கொண்டே இயங்குகின்றன.

    இத்திட்டங்களின் மூலம் திருச்சி மாநகராட்சிப் பகுதிகள், திருச்சி கிராமப்புற மாவட்டங்கள் மட்டுமன்றி, அண்டை டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களான புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களுக்குத் தேவையான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    Advertisement

    தற்போது ஆற்றில் தண்ணீர் ஓட்டம் முற்றிலுமாக நின்றுவிட்டதால், இத்திட்டங்களுக்குத் தேவையான குடிநீரை உறிஞ்சி எடுப்பதில் பெரும் சிக்கல் உருவாகியுள்ளது.

    ஜூன் 12 மேட்டூர் திறப்பு தாமதம்

    வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ஆம் தேதி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். முன்னாள் திமுக ஆட்சியில் 5 வருடமும் தவறாமல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு கர்நாடக அரசு தனது வழக்கமான நீர்ப் பங்கீட்டைத் தமிழ்நாட்டிற்கு வழங்க மறுத்துவிட்டது. தங்கள் மாநில அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை என்ற காரணத்தைக் கூறி, கர்நாடகா காவிரி நீரைத் திறக்காததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து, பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    Advertisement

    பாசனத் தேவையைத் தாண்டி, குடிநீர்த் தேவைகளுக்காகத் திறக்கப்பட்ட குறைந்த அளவு தண்ணீரும் ஆற்றுப் படுகையை வந்தடைய போதுமானதாக இல்லை. இதற்கு நடுவே, சுட்டெரிக்கும் கோடை வெயில், எல் நினோ பருவநிலை மாற்றம் போன்ற இயற்கைக் காரணிகளால் ஆற்றில் இருந்த சொற்ப நீரும் ஆவியாகி, காவிரி ஆற்றுப் படுகை தற்போது மணல் பரப்பாக மாறிப்போயுள்ளது.

    ஓரிரு வாரங்களில் தீவிரமடையும் பஞ்சம்

    தற்போதைய சூழல் குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், தற்போது காவிரி ஆற்றுப் படுகையில் உள்ள நிலத்தடி நீர்மட்டத்தைக் கொண்டு இன்னும் சில வாரங்களுக்கு மட்டுமே இந்த கூட்டுப் குடிநீர் திட்டங்களை ஓரளவு இயக்க முடியும். அதற்குப் பிறகு ஆற்றின் அடியில் உள்ள நிலத்தடி நீர்மட்டமும் வேகமாகக் குறையத் தொடங்கும் போது, நீர் உறிஞ்சும் கிணறுகளில் தண்ணீர் வரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

    Advertisement

    இத்தகைய நிலை நீடித்தால், திருச்சி மாநகரம், புறநகர்ப் பகுதிகள் மற்றும் அதனை நம்பியுள்ள ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு வெடிக்கும்.

    தமிழக அரசுக்கு பொதுமக்கள் அவசர கோரிக்கை

    குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டால் மக்களின் அன்றாட வாழ்க்கை முற்றிலும் முடங்கும் அபாயம் உள்ளது. எனவே, அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்களை விரைவுபடுத்தி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலமாக கர்நாடகாவிடமிருந்து குறைந்தபட்சம் குடிநீர்த் தேவைகளுக்கான காவிரி நீரையாவது உடனடியாகப் பெற தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மற்றும் தென் மாவட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    English Summary

    Tamil Nadu Water Crisis: Cauvery Runs Dry, Threatening Drinking Supply in Several Districts