கு.ப.கிருஷ்ணன் எக்சிட்? திருச்சி கிழக்கு வேட்பாளர் ஆகப்போவது யார்? தவெக-வில் அதிரடி திருப்பம்!

  • திருச்சி: முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால், திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் ரேஸில் இருந்து அவர் விலகியுள்ளதாக கூறப்படுகிறது. திருச்சி கிழக்கில் தவெக சார்பில் களமிறங்கும் வேட்பாளர் யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    Advertisement

    தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்று அரசியல் களத்தையே அதிர வைத்தது. அக்கட்சியின் தலைவர் விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலுமே அமோக வெற்றி பெற்றார்.

    Advertisement

    ஆனால், சட்டப்படி ஒரு நபர் ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினராக நீடிக்க முடியாது என்பதால், விஜய் பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டு, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

    இதன் காரணமாக, திருச்சி கிழக்கு தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரவிருப்பது உறுதியாகியுள்ளது. இந்தச் சூழலில், "திருச்சி கிழக்கு தொகுதியில் அடுத்து தவெக சார்பில் களமிறங்கப் போவது யார்?" என்ற மில்லியன் டாலர் கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்து வருகிறது.

    கு.ப.கிருஷ்ணன் எக்சிட்? பின்னணி என்ன?

    முன்னாள் அமைச்சரும், தவெக-வின் டெல்டா மண்டல ஒருங்கிணைப்பாளருமான கு.ப.கிருஷ்ணன் தான் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என்று அக்கட்சியினர் பலரும் எதிர்பார்த்தனர். சீனியர் அரசியல்வாதி, டெல்டா பகுதியில் நல்ல செல்வாக்கு கொண்டவர் என்பதால் அவர்தான் ரேஸில் முன்னணியில் இருந்தார்.

    Advertisement

    முன்னாள் அமைச்சரான கு.ப.கிருஷ்ணன் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக சார்பில் லால்குடி தொகுதியில் போட்டியிட்டடார். அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் மார்ட்டினிடம் 2,739 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் கு.ப.கிருஷ்ணன்.

    ஆனால், தற்போதைய நிலவரப்படி அவர் இந்த ரேஸிலிருந்து 'எக்சிட்' ஆக வாய்ப்புள்ளதாக தவெக உள்வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன. தற்போது கு.ப. கிருஷ்ணன் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால், திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் பந்தயத்தில் இருந்து அவர் விலகிக்கொண்டதாகவே பார்க்கப்படுகிறது.

    ரேஸில் முந்தும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி

    கு.ப.கிருஷ்ணனின் பெயர் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில், தற்போது திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ரேஸில் ஒரு சர்ப்ரைஸ் பெயர் பலமாக அடிபடுகிறது. அது, ஓய்வு பெற்ற ஒரு ஐஏஎஸ் அதிகாரி.

    Advertisement

    ஏன் இந்த சாய்ஸ்?

    மக்களின் நாடித் துடிப்பை நன்கு அறிந்த, நிர்வாகத் திறமை வாய்ந்த, எவ்வித அரசியல் கறையும் இல்லாத ஒரு படித்த ஆளுமையை நிறுத்த விஜய் விரும்புவதாகக் கூறப்படுகிறது. விஜய்யின் அரசியல் ஆலோசனைக் குழுவிலும் இந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியின் பெயர் முதலிடத்தில் உள்ளதாகத் தெரிகிறது. இவரை நிறுத்தினால், எதிர்க்கட்சிகளின் பலத்த வியூகங்களையும் எளிதில் முறியடிக்கலாம் என தவெக தலைமை கணக்குப் போடுகிறது.

    கோட்டையைத் தக்கவைக்குமா தவெக?

    திருச்சி கிழக்கு தொகுதி என்பது தவெக தலைவர் விஜய் நேரடியாக நின்று வென்ற தொகுதி என்பதால், அங்கு மீண்டும் தவெக-வே வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தலைவர் வென்ற தொகுதியை இடைத்தேர்தலில் வேறொரு வேட்பாளரை வைத்துத் தக்கவைப்பது என்பது விஜய்யின் அரசியல் எதிர்காலத்திற்கு மிக முக்கியமான அக்னிப்பரீட்சை.

    Advertisement

    திமுக, அதிமுக ஆகிய கட்சிகளும் தங்களது இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க இந்த இடைத்தேர்தலில் முழு பலத்தையும் பிரயோகிக்கத் தயாராகி வருகின்றன.

    அதிர்ஷ்டக் காற்று அந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பக்கம் வீசுமா? அல்லது கடைசி நேரத்தில் கு.ப.கிருஷ்ணனுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா? விஜய்யின் 'அடுத்த ஸ்கெட்ச்' என்ன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    English Summary

    It is reported that former Minister Ku Pa Krishnan has withdrawn from the race for the Trichy East constituency, following his appointment as the Chairman of the Tamil Nadu Urban Habitat Development Board. Consequently, there is now significant anticipation regarding who will be fielded as the candidate for Trichy East on behalf of the TVK.