திருச்சிக்கு ஓடி வந்த தென் கொரிய நிறுவனம்.. ஒரே திட்டம் 13000 பேருக்கு வேலை.. அடிசக்க!

  • சென்னையைத் தாண்டி தமிழ்நாட்டின் 2ஆம் மற்றும் 3ஆம் கட்ட நகரங்களுக்கும் தொழில் வளர்ச்சியைச் சமமாகப் பரப்ப வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் தொலைநோக்குத் திட்டத்திற்கு ஏற்ப திருச்சியில் மெகா முதலீட்டு திட்டத்திற்கு சுமார் 2 ஆண்டுகளுக்கு பின்பு பச்சை கொடி காட்டப்பட்டு உள்ளது.

    Advertisement

    தென் கொரியாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற காலணி உற்பத்தி நிறுவனமான TKG தேக்வாங், திருச்சி நவால்பட்டு சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் (Navalpattu SEZ) புதிய உற்பத்தி மற்றும் ஈ-சர்வீஸ் தளத்தை அமைக்க MEPZ அனுமதியை அதிகாரப்பூர்வமாகப் பெற்றுள்ளது. இதில் MEPZ என்பது Madras Export Processing Zone.

    Advertisement

    தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் கூட்டம் 2024-ல் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த திட்டம் இப்போது உண்மையான முதலீடாக மாறி தொழிற்சாலை அமைக்க நிலைக்கு முன்னேறியுள்ளது. இது திருச்சி பகுதியின் தோல் அல்லாத காலணி உற்பத்தித் துறையை வலுப்படுத்தும் முக்கிய படியாகக் பார்க்கப்படுகிறது.

    நைக் நிறுவனம்

    இந்த மாபெரும் திட்டத்திற்காக நவால்பட்டு எஸ்சிஇசட் வளாகத்தில் சுமார் 69 ஏக்கர் பரந்து விரிந்த நிலப்பரப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அதிநவீன உற்பத்தி ஆலையை அமைப்பதற்காக டிகேஜி டேகவாங் நிறுவனம் முதற்கட்டமாக 174 கோடி ரூபாய் முதலீட்டை செய்ய உள்ளது. இந்த ஆலையின் மிக முக்கிய அம்சம் என்னவென்றால், இங்கு உலகப் புகழ்பெற்ற சர்வதேச விளையாட்டு பிராண்டான 'நைக்' (Nike) நிறுவனத்திற்கான விளையாட்டுக்கான காலணிகள் (Athletic Shoes) உலகத் தரத்தில் உற்பத்தி செய்யப்படவுள்ளன.

    Advertisement

    13,000 பேருக்குப் புதிய வேலைவாய்ப்பு

    திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் கரூர் உள்ளிட்ட சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த நடுத்தர மற்றும் கிராமப்புற எளிய குடும்பத்து இளைஞர்களுக்கு இந்தத் திட்டம் வேலைவாய்ப்பை வழங்கும். இந்த ஒரே ஒரு புதிய மெகா தொழிற்சாலை மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 13,000 பேருக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன.

    குறிப்பாக, இந்த காலணி உற்பத்தித் துறையில் பெண்களின் பங்களிப்பு மிக அதிகமாக இருக்கும் என்பதால், கிராமப்புறப் பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்திற்கும், அவர்களின் குடும்ப வாழ்வாதார மேம்பாட்டிற்கும், இந்த முதலீடும் புதிய தொழிற்சாலையும் உதவியாக இருக்கும்.

    Advertisement

    கலர் மாறும் திருச்சி

    திருச்சி மாவட்டம் இதுவரை ஜவுளி, சிறு குறு தொழில்கள் மற்றும் மொத்த வியாபார விநியோகஸ்தர்களுக்கு மட்டுமே பிரதான மையமாக அறியப்பட்டு வந்தது. ஆனால், தற்போது திருச்சியைச் சுற்றியுள்ள எல்லைப் பகுதிகள் அனைத்தும் பல துறைகளில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதில் தோல் அல்லாத (Non-Leather Footwear) காலணி உற்பத்தி முக்கியமானதாக விளங்குகிறது.

    திருச்சியின் எல்லையான திருச்சி - சென்னை நெடுஞ்சாலை காரிடாரில் உள்ள பெரம்பலூர் எறையூர் சிப்காட் (SIPCOT) தொழிற்பூங்காவில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள 'ஃபோனிக்ஸ் கோத்தாரி காலணி கிளஸ்டர்' (Phoenix Kothari Footwear Cluster) உள்ளது. இந்த தொழிற்சாலையில் உலகளாவிய பலதரப்பட்ட காலணி பிராண்டுகளின் முதன்மை உற்பத்தி மையமாகத் திகழ்கிறது.

    Advertisement

    இதன் தொடர்ச்சியாக, இதே ஃபோனிக்ஸ் கோத்தாரி பூங்காவிற்குள் இயங்கி வரும் 'ஜேஆர் ஒன் கோத்தாரி ஃபுட்வேர் பிரைவேட் லிமிடெட்' (JR One Kothari Footwear) நிறுவனமும் நைக் போன்ற உலகளாவிய பிராண்டுகளுக்கான காலணி உதிரிபாகங்கள் மற்றும் முழுமையான காலணிகளைத் தயாரிப்பதில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    தற்போது நவால்பட்டு SEZ-ல் அமையவிருக்கும் இந்த புதிய டிகேஜி டேகவாங் தொழிற்சாலையும் இணையும் பட்சத்தில், உலகளாவிய விளையாட்டு காலணி தயாரிப்பு சந்தையில் ஒட்டுமொத்த தெற்காசியாவிலேயே திருச்சி பிராந்தியம் மிக முக்கியப் வர்த்தக மையமாக திகழும்.

    English Summary

    South Korean footwear giant TKG Taekwang has received official MEPZ approval to set up a new manufacturing and E-service facility in Trichy’s Navalpattu SEZ, with an investment of ₹174 crore across 69 acres to produce athletic shoes for Nike. The project is expected to generate around 13,000 direct and indirect jobs, strengthening Tamil Nadu’s position as a global non-leather footwear manufacturing hub while boosting industrial growth in Tier-2 and Tier-3 cities.