சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ

  • திருச்சி: தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் பதவியேற்ற நாளில் இருந்து அவரது ரசிகர்களும், தவெக கட்சி தொண்டர்களும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில் திருச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தீவிரத் தொண்டர் ஒருவர், தனது வீட்டுப் பூஜை அறையில் தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய்க்கு முழு உருவ சிலைக்கு வைத்து தினமும் கற்பூர ஆராதனை காட்டி, பூஜை செய்து வருகிறார்.

    Advertisement

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த 32 வயதான சுகுமார், இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகர் விஜய்யின் தீவிர ரசிகராகவும், விஜய் மக்கள் இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகளிலும் அடிமட்டத் தொண்டனாகப் பணியாற்றி வந்துள்ளார்.

    Advertisement

    விஜய் முறைப்படி அரசியல் கட்சித் தொடங்கிய பின்னர், தன்னை முழுமையாகத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டு தீவிரமாகக் களப்பணியாற்றி வருகிறார். இந்தச் சூழலில் தான், தற்பொழுது முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய்யின் மீதுள்ள தீவிரப் பற்றின் காரணமாக, தனது வீட்டுப் பூஜை அறையிலேயே விஜய்க்கு ஒரு பிரத்யேக உருவச்சிலையை நிறுவி, அதற்குத் தினசரி பூஜைகள் மற்றும் வழிபாடுகளை நடத்தி வருகிறார்.

    இது குறித்துத் தவெக தொண்டர் சுகுமார் பேசுகையில், "விஜய் அவர்கள் தற்பொழுது முறைப்படி தமிழ்நாட்டின் முதலமைச்சரான பிறகு தான் மக்கள் அனைவரும் அவரைப் பரவலாகக் கொண்டாடத் தொடங்கியுள்ளனர். ஆனால், நான் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகவே அவரின் தீவிர ரசிகனாக இருந்து வருவதால், ஓராண்டுக்கு முன்பே இந்த விஜய் சிலையைச் செய்து எனது வீட்டில் வைத்துத் தொடர்ந்து வழிபட்டு வருகிறேன்" என்று பெருமிதத்துடன் கூறினார்.

    Advertisement

    மேலும், கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, திருவெறும்பூர் தொகுதியின் தவெக வேட்பாளராகப் போட்டியிட்ட நவல்பட்டு விஜயகுமார் இதே போன்ற ஒரு விஜய் உருவச்சிலையைத் தான் தனது முக்கியத் தேர்தல் பிரச்சார வாகனத்தில் வைத்துத் தொகுதி முழுவதும் வாக்குச் சேகரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    "பொதுவாகக் கடவுள் எப்படித் தன்னை நாடி வரும் மக்களுக்கு அத்தனை நன்மைகளையும் செய்கிறாரோ, அதேபோல் தான் தமிழகத்தின் புதிய முதல்வரான விஜய்யும் ஒட்டுமொத்தத் தமிழக மக்களுக்கும் அத்தனை நன்மைகளையும் செய்ய வேண்டும், கண்டிப்பாகச் செய்வார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் தான் நான் இந்தச் சிலையை வணங்கி வருகிறேன்" என்று சுகுமார் தெரிவித்துள்ளார்.

    English Summary

    A dedicated TVK worker from Trichy has set up a full-size statue of Tamil Nadu Chief Minister Vijay in his pooja room and has been performing daily camphor aarti and special worship since Vijay assumed office. The viral story highlights the extraordinary devotion of long-time fans turned party workers towards the new CM.