திருச்சி: வருவாய்த் துறையில் சான்றிதழ்கள் பெறச் செல்லும் பொதுமக்களிடம் லஞ்சம் கேட்கும் சம்பவங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. இப்போதும் ஒரு அக்கிரமம் திருச்சியில் நடந்துள்ளது.. அப்பாவை இழந்து நிற்கும் ஒரு பெண்ணிடம் வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கியிருக்கிறார் பெண் வருவாய் ஆய்வாளர் ஒருவர்... இந்த சம்பவம் திருச்சி மாவட்ட அரசு அலுவலகங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாகவே தவெகவில் அரங்கேறி வரும் ஒழுங்கு நடவடிக்கைகள், அரசியல் வட்டாரத்திலும் அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. காரணம், கட்சியின் கொள்கைகளுக்கும் கட்டுப்பாடுக்கும் முரணாக செயல்படும் நபர்கள் மீது தவெக மேலிடம் பாரபட்சமின்றி ஆக்ஷன்களை எடுத்து வருகிறது.
கடந்த வாரம், ஒப்பந்ததாரர் ஒருவரிடம் லஞ்சம் வாங்கியதாக சோஷியல் மீடியாவில் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.. இதனால் செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத் துணைச் செயலாளரும் மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவருமான வீராசாமி மீது தற்காலிக நீக்க நடவடிக்கை பாய்ந்தது. அதேபோல 4 நாட்களுக்கு முன்பு, கோர்ட் வரை சென்ற பெண் வழக்கறிஞர் ஞானசவுந்தரியை தவெகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து உடனடியாக நீக்கம் செய்திருந்தனர். இப்படி சொந்த கட்சியினர் என்றாலும், தவறு செய்தது நிரூபணமானால், அவர்களை உடனடியாக கட்சியிலிருந்து தவெக மேலிடம் நீக்கம் செய்து வருவது அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது. நேற்றைய தினம் மதுரையில் பேசிய மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், காமராஜரின் 9 ஆண்டு கால ஆட்சியில் லஞ்சம் என்பதே இருந்ததில்லை.. அதுபோல இப்போது தமிழகத்தில் அமைந்துள்ள தவெகவின் 2 மாத கால ஆட்சியில் பத்திரப்பதிவு துறையில் லஞ்சம் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது என்று கூறி, இந்த நேர்மையான நிர்வாக மாற்றத்திற்கு தனது மனமார்ந்த பாராட்டுகளையும் பொதுமேடையில் தெரிவித்து கொண்டார். ஆனால், இத்தனை கெடுபிடிகளையும், கறார் நடவடிக்ககைளையும் அரசு மேற்கொண்டாலும் லஞ்சம் வாங்குவது இன்னும் ஒழியவில்லை என்பதுதான் வேதனையான விஷயம். திருச்சி மாவட்டத்தில் என்ன நடந்துள்ளது பாருங்கள். மணப்பாறை அருகே உள்ளது பாம்பாட்டிப்பட்டி என்ற கிராமம். இங்கு வசித்து வருபவர் 30 வயது ஈஸ்வரி.. இவரது அப்பா, கருப்பசாமி சமீபத்தில் இறந்துவிட்டார்.. அப்பாவின் மறைவுக்குப் பிறகு, குடும்பத்திற்குத் தேவையான வாரிசு சான்றிதழை பெறுவதற்காக ஈஸ்வரி அரசு இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பம் குறித்து மேல் நடவடிக்கை எடுப்பதற்காக, வி.பெரியப்பட்டி பிர்கா முதுநிலை வருவாய் ஆய்வாளராகப் பணிபுரியும் ஹேமலதாவை ஈஸ்வரி நேரில் சென்று சந்தித்துள்ளார். அப்போது ஹேமலதா, வாரிசு சான்றிதழ் கோரும் மனுவை உடனே பரிசீலித்து சான்றிதழ் வழங்க வேண்டுமானால், ரூ.5,000 லஞ்சமாக தர வேண்டும் என்று ஈஸ்வரியிடம் கேட்டுள்ளார். அப்பா இல்லாமல் தன்னுடைய குடும்பம் தவிப்பதால், 5 ஆயிரம் ரூபாய் த்ன்னிடம் இல்லை என்றாராம் ஈஸ்வரி.. அதற்கு ஹேமலதா, அப்படியானால் 1000 ரூபாய் குறைத்து, ரூ.4,000 தந்தால் போதும் என்றாராம் என்றாராம்.. அப்படியிருந்தும் லஞ்சம் தர விரும்பாத ஈஸ்வரி,இதுகுறித்து திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் ஜூலை 20ம் தேதி எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்தார். இதையடுத்து அதிகாரிகளின் திட்டப்படி, ரசாயனம் தடவிய ரூ.4,000 பணத்தை ஈஸ்வரி கொண்டு சென்று ஹேமலதாவிடம் கொடுத்தார். அந்தப் பணத்தை ஹேமலதா வாங்கியதுமே, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்... அத்துடன் லஞ்சப் பணத்தையிம் பறிமுதல் செய்தனர்.. இதையடுத்து, வி.பெரியப்பட்டி வருவாய்த்துறை அலுவலகத்தில் ஹேமலதாவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும், அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்புப் துறையினர் சோதனை மேற்கொண்டனர். வாரிசு சான்றிதழுக்காகப் பெண் அதிகாரி லஞ்சம் வாங்கி கைதான இந்தச் சம்பவம், மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு அலுவலகங்களில் லஞ்சம் கோரும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தவெக அரசு
லஞ்சம் ஒழிப்பு நடவடிக்கை
திருச்சி வருவாய் ஆய்வாளர்
1000 ரூபாய் டிஸ்கவுண்ட்
திருச்சி போலீஸ் பிடித்தது எப்படி