திருச்சி: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில், திமுக தொண்டர்கள் பெருந்திரளாக அங்கு குவிந்துள்ளனர். அங்கு தொடர்ந்து மழை பெய்யும் போதிலும், உதயநிதியை விடுவிக்கும் வரை அங்கிருந்து நகர மாட்டோம் என சொல்லி, திமுக தொண்டர்கள் அங்கேயே முகாமிட்டுள்ளனர்.
தஞ்சாவூரில் திமுக போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக தவெக நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில் உதயநிதி ஸ்டாலின் இன்று கைது செய்யப்பட்டார். அவர் தஞ்சாவூர் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார்.
இருப்பினும், அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் திருச்சி செங்கிப்பட்டி காவல் நிலையத்திலேயே வைத்து விசாரிக்க போலீஸ் முடிவு செய்தனர். முதலில் எங்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டதோ அங்கு தான் விசாரணைக்கு வருவேன் என சொல்லி உதயநிதி போலீஸ் வாகனத்தை விட்டு இறங்க மறுத்தார். பிறகு காவலர்கள் வந்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகே போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அவரிடம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்றது. அப்போது நேரம் செல்ல செல்ல திமுகவினர் அதிகளவில் அங்கு திரண்டனர். கொட்டும மழையிலும் கூட திமுகவினர் அங்கேயே காத்திருந்தனர். உதயநிதியை விடுவிக்கும் வரை அங்கிருந்து நகர மாட்டோம் என சொல்லி திமுகவினர் அங்கேயே இருந்தனர். சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடந்த நிலையில், அதன் பிறகு உதயநிதி விடுவிக்கப்பட்டார். அப்போது காரின் மீது ஏறிய உதயநிதி, அங்கிருந்த மக்களை நோக்கி கை அசைத்தார். திரண்டிருந்த திமுகவினர் மத்தியில் உதயநிதி சென்றார்.