திருச்சி: அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டிய நிதி உதவிக்காக 5 மாதங்களாக மதுரையைச் சேர்ந்த மாணவர் பாரதிதாசன் மலேசியாவில் காத்திருக்கிறார், இத்திட்டத்தின் கீழ் வெளிநாடு சென்ற பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உயர்கல்வித்துறை அமைச்சர், சமூகநீதித் துறை அமைச்சரை தொடர்பு கொண்டும் உரிய பதில் இல்லை எனவும் வேதனை தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவை டேக் செய்து திமுகவைச் சேர்ந்த முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ், என்ன பிரச்சனை என்று விரிவாக கூறியுள்ளார்.
அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டம்' உதவித்தொகை கிடைக்காமல் தமிழ்நாடு மாணவர்கள் வெளிநாட்டில் தவிப்பதாக கூறியுள்ளனர். பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என வீடியோ வெளியிட்டு வேதனை தெரிவித்து வருகிறார்கள்
இந்த பிரச்சனை தொடர்பாக திமுக அரசில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்தவரும், முன்னாள் எம்எல்ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறுகையில், "அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை நடப்பாண்டில் அதிகரித்து இருப்பதாக அரசுத் தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால் அத்திட்டத்தின் கீழ் 2025 - 2026-ஆம் கல்வியாண்டில், அதாவது திராவிட மாடல் ஆட்சி காலத்தில் மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பில் சேர்க்கைப் பெற்று பயின்றுவரும் மாணவருக்கு, நடப்பு கல்வியாண்டிற்கான கட்டணத்தை செலுத்துவதில் ஏன் இவ்வளவு அலட்சியம்? ஏற்கனவே, இங்கிலாந்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் பட்டமேற்படிப்புக்கு சேர நடப்பாண்டில் விண்ணப்பித்துள்ள நம் மாணவர்களுக்கு 'மாநில அரசின் கல்வி உதவித்தொகையை ஏற்க முடியாது - இந்திய ஒன்றிய அரசின் மூலம் வழங்கப்பட்டால் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும்' என்ற புதிய விதியை சுட்டிக்காட்டி சேர்க்கை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த புதிய விதிக்கான காரணமாக கல்வி நிறுவனங்கள் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் "மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் அமைப்பு, அதனை இடையிலேயே நிறுத்திவிட்டால் கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் மாணவர்கள் படிப்பை தொடர முடியாத நிலை உருவாகுகிறது; எனவே இடைநிற்றல் ஏற்படும் சூழலும் ஏற்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால், மலேசியா நாட்டில் பயிலும் நம்முடைய மாணவர்களுக்கு உரிய நேரத்தில் கட்டணம் செலுத்தாமல் த.வெ.க அரசு அலட்சியமாக இருப்பதால், அங்கும் எதிர்காலத்தில் தமிழ்நாட்டு அரசின் கல்வி உதவித்தொகையை நேரடியாக ஏற்க உயர்கல்வி நிறுவனங்கள் மறுக்கும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. இன்னும் இதுபோல எத்தனை நாடுகளில் பயிலும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களோ என்கிற கேள்வியும் எழுகிறது. Take Diversion அரசின் இத்தகைய அலட்சியப்போக்கு, அரசின் உதவித்தொகையை மட்டுமே நம்பி கல்விக்காக கடல் கடந்து சென்றுள்ள மாணவர்களுக்கு எத்தகைய மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதை நினைத்துப் பார்க்கவே வேதனையாக இருக்கிறது. அலட்சியப் போக்கினை கைவிட்டு, அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்ட மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை உரிய காலத்தில் விடுவிக்க மாண்புமிகு முதல்வர் விஜய் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அன்பில் மகேஷ் தனது பதிவில் கூறியுள்ளார்.