விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக

  • திருச்சி: திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்வர் விஜய்யின் நிகழ்வுக்கு ஊடகங்களுக்கு நேரடி அனுமதி மறுக்கப்பட்டது. விழா மேடைக்கு வெளியே குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள தனி ஊடக மையத்தில் இருந்து செய்தி சேகரிக்க காவல்துறையினர் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் ஊடகத்தினருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    வழக்கமாக முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் என்றால் தனி அடையாள அட்டை கொடுத்து ஊடகங்களுக்கு அனுமதிக்கப்படும். இதுவே பின்பற்றப்பட்டு வந்த நிலையில், விஜய் முதல்வரான பிறகு போலீசார் அனுமதி மறுத்து இருந்தது விமர்சனத்திற்குள்ளான நிலையில் உடனே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    Advertisement

    திருச்சியில் முதல்வர் விஜய்

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த மாதம் 10 ஆம் தேதி முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய், தான் போட்டியிட்ட சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். பெரம்பூரை தக்க வைத்துக்கொண்டு திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

    தேர்தல் முடிவுகள் வெளியாகி கிட்டதட்ட ஒரு மாதங்கள் ஆக உள்ள நிலையில், தனக்கு வாக்களித்த திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக விஜய் இன்று திருச்சி வருகை தந்துள்ளார். திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் நடைபெறும் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் விஜய் பங்கேற்று உரையாற்றுகிறார். இந்த கூட்டத்தில் கியூஆர் கோட் அனுமதியுடன் உள்ள 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    Advertisement

    ஊடகத்தினருக்கு அனுமதி மறுப்பு

    செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் முதல்வர் விஜய் பேச உள்ள இடத்தில் பொதுமக்கள் அமர்வதற்காக பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பந்தலின் முகப்பு பகுதியில் விஜய் தனது வாகனத்தில் இருந்தபடியே பேச இருக்கிறார். விஜய் பேச உள்ள இடம் மற்றும் அவர் வருவதற்கான பாதை ஆகிய இடங்களில் மட்டும் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்கள் தப்பிக்க பிரமாண்ட பந்தலும் போடப்பட்டுள்ளது.

    விஜய் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தவெகவினர் செய்துள்ள நிலையில், ஊடகங்களுக்கு விஜய் கூட்டம் நடக்கும் பகுதிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு இருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. விஜய் கூட்டத்திற்கு செய்தி சேகரிக்க செல்லும் பத்திரிகையாளர்களுக்கு கூட்டம் நடைபெறும் மைதானத்தில் தனியாக ஒரு சாமியானா பந்தல் போடப்பட்டு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள ஊடக மையத்தில் இருந்து செய்தி சேகரிக்க காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    Advertisement

    ஊடகத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டது

    வழக்கமாக முதல்வர் பங்கேற்கும் அரசு மற்றும் கட்சி நிகழ்வுகளில் ஊடகங்களுக்கு தனி இடம் ஒதுக்கும் நிலையில், புதிய மாற்றமாக விஜய் பங்கேற்கும் நிகழ்வில் காவல் துறையினர் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முதல்வர் பேசுவதை பார்ப்பதற்காக ஊடகவியலாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் தொலைக்காட்சிகளும் வைக்கப்பட்டுள்ளன.

    நேரலையில் ஒளிபரப்பாகும் வீடியோவை பார்த்து செய்தியை சேகரித்துக்கொள்ளுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் கூட இதுபோன்ற கெடுபிடிகள் இதற்கு முன்பு காட்டப்படாத நிலையில், தவெக கூட்ட அரங்குக்குள் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தவெக நிர்வாகிகள் அறிவுறுத்தலின் பேரில் இந்த கெடுபிடியை காவல்துறை காட்டுகிறதா? அல்லது போலீசாரா ஏற்படுத்துகிறார்களா என்பது தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது ஊடகத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    English Summary

    Vijay in trichy: Media personnel have not been granted direct access to the venue of the Trichy East constituency public outreach event attended by Chief Minister Vijay. Police have instructed journalists to gather news from a specially arranged air-conditioned media centre outside the main venue, marking a departure from the usual media arrangements at government and party events.