திருச்சி: அமைச்சர் முகமது பர்வேஸ் உடன் இணைந்து விராலிமலை முருகன் கோயில் வைகாசி விசாக தேரோட்டத்தை அதிமுக எம்எல்ஏ விஜயபாஸ்கர் தொடங்கி வைத்துள்ளார். கடந்த சில நாட்களாகவே விஜயபாஸ்கர் தவெகவில் இணையப் போவதாக சொல்லப்பட்டு வரும் சூழலில், தற்போது அமைச்சருடன் கோயில் நிகழ்ச்சியில் இணைந்து பங்கேற்றிருப்பது விவாதமாகி இருக்கிறது.
முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போகிறார் என்ற அரசியல் யூகங்கள் கடந்த சில நாட்களாகத் தமிழக அரசியலில் காட்டுத்தீயாகப் பரவி வரும் சூழலில், புதுக்கோட்டையில் இன்று நடந்த ஒரு அரசு ஆன்மீக நிகழ்வு ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.
விராலிமலை பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் வைகாசி விசாகப் பெருந்திருவிழா தேரோட்ட நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் யாரும் எதிர்பாராத விதமாக, தமிழக அமைச்சர் முகமது பர்வேஸ் மற்றும் அதிமுக எம்.எல்.ஏ சி. விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் ஒன்றாக இணைந்து வடம்பிடித்துத் தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைப் புறக்கணித்துவிட்டு, தவெக தலைவர் விஜய் முன்னிலையில் விஜயபாஸ்கர் கட்சியில் இணையவுள்ளார் என அவரது ஆதரவாளர் வட்டாரங்களிலேயே கிசுகிசுக்கப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில் ஆளுங்கட்சி அமைச்சருடன் அவர் இணக்கமாக வடம் பிடித்திருப்பது புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளது. தேரோட்ட விழாவின் போது அமைச்சர் முகமது பர்வேஸ் மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் நீண்ட நேரம் மிக நெருக்கமாக அரசியல் மற்றும் தொகுதி நிலவரங்கள் குறித்துப் பேசியபடி சென்றதாகக் கூறப்படுகிறது. பாரம்பரியமான கோயில் திருவிழா என்பதால், விராலிமலை தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் விஜயபாஸ்கர் இதில் கலந்து கொண்டார். எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என அவரது தரப்பு கூறுகிறது. ஆனால் தவெகவில் இணைகிறார் என்ற பேச்சு அதிகமாக இருக்கும் சூழலில், விஜயபாஸ்கர் எளிதாக இந்த நிகழ்வை புறக்கணித்திருக்கலாம். இதனால் விஜயபாஸ்கர் அதிமுகவில் இருந்து விலகுவது 100% உறுதி என்று பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியின் பழிவாங்கல் நடவடிக்கைக்குப் பயந்து அவர் தவெகவுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார். தற்போது ஆளுங்கட்சி அமைச்சருடன் இவ்வளவு நெருக்கம் காட்டுவதைப் பார்த்தால், தன் மீதான லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகளில் இருந்து தப்பிக்க அவர் திமுகவை நோக்கித் தனது பார்வையைத் திருப்புகிறாரா அல்லது தவெகவில் இணைவதற்கு முன்னதாக ஆளுங்கட்சியுடன் சுமுக உறவை மெயின்டெய்ன் செய்கிறாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.