திருச்சி: அதிமுகவில் நீடிக்கிறீர்களா என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளிக்காமல் சென்றுள்ளார். தன்னுடைய தொகுதியே தனக்கு முக்கியம் என்று கூறிய விஜயபாஸ்கர், இன்று மட்டும் 40 திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டிய சூழல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தவெகவில் இணைய உள்ளதாக பேச்சுகள் எழுந்துள்ளன. சட்டசபைத் தேர்தலில் அதிமுக அடைந்த தோல்விக்கு பின் எஸ்பி வேலுமணி தலைமையில் அதிமுகவின் 25 எம்எல்ஏ-க்கள் தவெகவுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்தனர். இருப்பினும் எடப்பாடி பழனிசாமியின் தொடர் நடவடிக்கைகளால், எஸ்பி வேலுமணி ஆதரவு எம்எல்ஏ-க்கள் எடப்பாடி பக்கம் தாவினர்.
இதனிடையே 4 அதிமுக எம்எல்ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். பின்னர் எஸ்பி வேலுமணி அணியினர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சமூக உடன்பாட்டை எட்டினர். ஆனாலும் சிவி சண்முகம் மற்றும் விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் இதுவரை எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை. விஜயபாஸ்கர் கடந்த 2 நாட்களாகவே தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதற்கேற்ப தவெக தரப்பில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா இருவருமே அதிமுகவினரை தவெகவுக்கு அழைத்து வருகின்றனர். இந்த நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து விஜயபாஸ்கர் பேசுகையில், இன்று முகூர்த்த நாள்.. எனக்கு பத்திரிகை வைத்தவர்களின் நிகழ்வுகளுக்கு செல்ல வேண்டும். என்னுடைய தொகுதியே எனக்கு முக்கியம். இன்று மட்டும் 40 கல்யாணம் இருக்கு.. கோயில் கும்பாபிஷேகம் இருக்கிறது. நேற்றும், இன்றும் திருமண நிகழ்ச்சிகள் அதிகளவில் உள்ளது என்று தெரிவித்தார். அப்போது தவெகவில் இணைகிறீர்களா என்ற கேள்விக்கு, நேற்றே பதில் சொல்லிவிட்டேன் என்றார். தொடர்ந்து அதிமுகவில் நீடிக்கிறீர்களா என்ற கேள்விக்கு, பதில் அளிக்காமல் சென்றார். இதன் மூலமாக விஜயபாஸ்கர் அதிமுகவில் இருந்து விலகும் முடிவை விரைவில் எடுப்பார் என்று தெரிகிறது. விஜயபாஸ்கர் விராலிமலை தொகுதியில் அசைக்க முடியாத நபராக இருந்து வரும் சூழலில், டெல்டா மாவட்டங்களில் கணிசமான செல்வாக்கை கொண்டுள்ளார். இதனால் விஜயபாஸ்கரை தவெகவில் இணைக்க வேண்டும் என்பதில் தவெகவும் தீவிரமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது.