மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்?

  • திருச்சி: தொண்டர்களின் மனதை வெல்ல முடியாத தலைமை, மக்களின் மனதை எப்படி வெல்லும்? என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எடப்பாடி பழனிசாமியை சாடி பதிவிட்டுள்ளார். மதிப்பில்லாத அதிமுகவில் இனியும் பயணிக்க சாத்தியமில்லை என்று சூசகமாக பதிவிட்டுள்ள விஜயபாஸ்கர், விரைவில் தவெகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள சலசலப்புகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. சிவி சண்முகத்தின் கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து, தற்போது அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி எம்எல்ஏ-வுமான சி.விஜயபாஸ்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் போக்கை கடுமையாக சாடிப் பதிவிட்டுள்ளார்.

    Advertisement

    தவெக அரசுக்கு ஆதரவாக சட்டப்பேரவையில் வாக்களித்த விவகாரத்தில், விஜயபாஸ்கரின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டதோடு, அவரது ஆதரவாளர்கள் 3 பேர் அண்மையில் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். இதன்பின் மன்னிப்பு கடிதம் கொடுத்து அதிமுகவில் பயணித்து வந்தாலும், இதுநாள் வரை எடப்பாடி பழனிசாமியை விஜயபாஸ்கர் நேரில் சென்று சந்திக்கவில்லை.

    ஆனால் தவெக நிர்வாகிகளுடன் விஜயபாஸ்கர் நெருக்கம் காட்டி வருகிறார். இதனால் ஜூன் 22ஆம் தேதி முதல்வர் விஜய்யின் பிறந்தநாளன்று விஜயபாஸ்கர் தவெகவில் இணையப் போவதாக சொல்லப்படுகிறது. அதற்கான பணிகளில் விஜயபாஸ்கர் ஈடுபட்டு வருவதாகவும், ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் கூறுகின்றனர்.

    Advertisement

    இந்த நிலையில் 2வது நாளான எடப்பாடி பழனிசாமியின் தலைமையை விமர்சித்து விஜயபாஸ்கர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தலைமை என்பது அதிகாரமோ, ஆணவமோ அல்ல... 'அர்ப்பணிப்பு மிகுந்த அரவணைப்பு'.. உழைக்கும் தொண்டர்களின் மனதை வெல்ல முடியாத தலைமை, மக்களின் மனதை எப்படி வெல்லும்? உணர்வுகளை மதிக்காத இடத்தில் உண்மையான பயணம் சாத்தியமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதனால் எடப்பாடி பழனிசாமியின் தலைமைத்துவத்தை நேரடியாக கேள்வி எழுப்பி இருப்பதோடு, அதிமுகவில் தனக்கு மதிப்பு இல்லை என்றும், அக்கட்சியுடன் இனியும் பயணிக்க சாத்தியம் இருக்காது என்றும் சூசகமாக கூறி இருக்கிறார். இதனால் விஜயபாஸ்கர் விரைவில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Vijayabaskar: Vijayabaskar Slams Edappadi palaniswami with Explosive Tweet, Questions AIADMK Top Leadership