திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த கார்த்திக் குமார் என்பவர், தனது ஏரியாவில் குடிநீர் விநியோகம் மற்றும் குப்பைகள் அகற்றுவதில் உள்ள சிக்கல்கள் குறித்து முறையிடச் சென்றபோது, துணை சபாநாயகர் ரவிசங்கர் தன்னை தாக்கியதாக புகார் தெரிவித்தார். பின்னர் மிரட்டல் காரணமாக தாங்கள் பேசியதாக மற்றொரு வீடியோவையும் வெளியிட்டார். அடுத்தடுத்து மாற்றி மாற்றி பேசி அவர் வீடியோ வெளியிட்டது துணை சபாநாயகர் ரவிசங்கருக்கு எதிராக திரும்பி உள்ளது. ரவிசங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இந்த சூழலில் துணை சபாநாயகர் ரவி சங்கர் மீதான புகார்கள் குறித்து தவெக வின் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்த உள்ளது. நாளை தவெக எம்எல்ஏக்கள் அனைவரையும் சென்னைக்கு வருமாறு முதல்வர் விஜய் அழைத்துள்ளார்.
சென்னையில் அமைச்சர் ராஜ்மோகன் நேற்று செய்தியாளர்களிடம் பேசும் போது, 2 ஆண்டுகளுக்கு முன்பு தீபாவளி பண்டிகை காலத்தில் 11 பேர் கொலை செய்யப்பட்டார்கள். அதேபோல், கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது 6 கொலைகள் நடந்தன. ஏதோ இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போதுதான் தமிழ்நாட்டில் முதல் முறையாக கொலை நடந்ததாக பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். திட்டமிட்டு ஆளும் அரசு மீது அவப்பெயர் ஏற்படுத்த எடப்பாடி பழனிசாமி, கனிமொழி, டி.டி.வி.தினகரன் ஆகியோர் அறிக்கைவிடுவார்கள். எதிர்க்கட்சிகள் எதிரி கட்சிகளாக செயல்படுகிறார்கள். வரலாற்றில் முதல் முறையாக அரசியல் தலையீடு இல்லாமல், இதுபோன்ற குற்றச்சம்பவங்களை தடுக்க போலீசாருக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறோம். ரவுடிகளை சுட்டுப்பிடிக்கிறார்கள். குற்றச்சம்பவ பின்னணியில் இருப்பவர்களையும் நேரடியாக கைது செய்கிறார்கள். இனிவரும் காலங்களில் குற்றச்சம்பவங்களை குறைக்க முழு வலிமையையும் போலீசுக்கு கொடுக்க இருக்கிறோம். துணை சபாநாயகர் அடித்ததாக புகார் சொல்லும் நபர் அந்நியனாகவும், அம்பியாகவும் மாறி மாறி பேசுகிறார். யார் தவறு செய்திருந்தாலும் விசாரணை நடக்கும்" இவ்வாறு கூறியிருந்தார். இந்த சூழலில் தான் துணை சபாநாயகர் ரவி சங்கர் மீதான புகார்கள் குறித்து ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தும் என தவெக அறிவித்துள்ளது. நாளை (நவம்பர் 11) அனைத்து தவெக எம்எல்ஏக்களும் கட்டாயம் சென்னை வர வேண்டும் என்று முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். நாளை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் ஆலோசனைக்கு பின்னர் துணை சபாநாயகர் ரவி சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. துணை சபாநாயகர் பதவியிலிருந்து நீக்கப்படுவாரா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு எதிராக எம்எல்ஏ ஒருவர் தவறான மெசேஜ் அனுப்பியதாக திமுக எம்பி கனிமொழி புகார் எழுப்பியது பெரும் சர்ச்சையாகி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நாளை விசாரிக்கப்படும் என்றும் கூறுகிறார்கள். சில எம்எல்ஏக்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும், விஜய் நேரடியாக அழைத்து எம்எல்ஏக்களை எச்சரிப்பார் என்றும் தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி போலீசார் தரப்பில் விசாரித்தபோது, துணை சபாநாயகர் ரவி சங்கர் தொடர்பாக எந்த புகாரும் எங்களுக்கு வரவில்லை. புகார் வந்தால் விசாரிக்க தயாராக இருக்கிறோம் என்றனர். துணை சபாநாயகர் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோ மற்றும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தான் சர்ச்சைக்கும் காரணமாகி உள்ளது.
கார்த்திக் புகார்
இதனிடையே துணை சபாநாயகர் விவகாரம் தொடர்பாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்த கார்த்திக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'என்னை தாக்கிய துணை சபாநாயகர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருந்தேன். போலீசார் உடனே என்னை ரவி சங்கர் வீட்டிற்கு அழைத்துச்சென்று மிரட்டி, அப்படி பேச வைத்துள்ளார்கள். நான் உயிருக்கு பயந்தும் அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காகவும் அவர்கள் சொல்லி தந்தபடி பேசினேன்' என்றார்.